தமிழகம்

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த ஊழியர்களுக்கு நிவாரணம்!

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணியும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தன் உயிரைப் பற்றி கவலை கொள்ளாமல் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க ஏதுவாக ஆவணங்களை சமர்ப்பிக்க பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் டி.எஸ்.செல்வ விநாயகத்துக்கு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையகத்தின் இயக்குநர் ந.வெங்கடாசலம் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “கொரோனா தொற்றுநோய் போராட்டத்தில் முன் நின்று பணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள், காவல்துறை, மற்றும் பிற அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்கள், பணியாளர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஏதேனும் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு பதிலாக 50 லட்சம் வழங்கப்படும் எனவும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தங்களது துறையில் நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த பணியாளர் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி பெற்று வருவதற்கு முன் மொழிவு அரசுக்கு அனுப்பி ஏதுவாக கீழ்க்கண்ட ஆவணங்களுடன் தங்களது முன்மொழிவில் உடனடியாக அனுப்பி வைத்துவிட தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டார் என்பதற்கான சான்று,
கொரோனா தொற்று நோய் காரணமாக நோய் பிடியில் இருந்ததற்கான மருத்துவ சான்று,
நோய் தொற்று தடுப்பு பணியில் பணிபுரிய செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பின் அதன் நகல்,
இறப்பு சான்று நகல்,
வாரிசு சான்றிதழ் நகல்,
குடும்ப அட்டை நகல்

மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி முன்மொழிவுகள் உடன் அனுப்பி வைத்திடவும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • வேல்மணி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button