அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தை புதுப்பிக்க வேண்டி போராடும் சமூக ஆர்வலர்!
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி இயற்கை அன்னையின் மடியில் வீற்றிருப்பதை போல மரம் செடி கொடிகள் அடர்ந்த ‘தண்ணீர் கரடு’ எனும் மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது. சுற்றுச்சூழலுக்கென்றே ஜனாதிபதியின் கரங்களில் விருதையும் பாராட்டையும் பெற்று அய்யலூர் மண்ணுக்கே ஒரு தனி கௌரவத்தை தந்த பள்ளி!
இந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருந்த பழனிவேல் என்பவர் கடந்த அதிமுக ஆட்சியின் போது இறந்து விட்டார். ஆட்சி மாற்றத்திற்கு பிற்பாடும் தற்போதுவரை அந்த இடம் நிரப்பப்படாமல் இருப்பது பெற்றோர் ஆசிரியர் கழகம் முடக்கத்தில் இருப்பதையும் அதன் மேல் யாருக்கும் எவ்விதமான அக்கறையுமில்லை என்பதையே காட்டுகிறது என்று குற்றம் சாட்டி வருகின்றனர் இப்பகுதி சமூக ஆர்வலர்கள்.
பிற பள்ளிகளில் எல்லாம் இக் கழகம் சிறப்பாக இயங்கிவரும் போது அய்யலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மட்டும் எதற்காக இந்த மந்த நிலை என்ற கோணத்தில் நாம் நம் விசாரணையை துரிதப்படுத்தினோம்.
இந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்த பழனிவேல் குடும்பத்தினர்தான் ஒருகாலத்தில் இப்பள்ளி அமைய இடம் வழங்கியதாக சொல்லப்படுகிறது. இதனாலேயே பெற்றோர் ஆசிரியர் கழக விதிகளெல்லாம் கடைபிடிக்கப்படாமல் அவர் இறக்கும் வரையிலுமே அவரே தலைவராக இருந்திருக்கிறார். செயற்குழு, பொதுக் குழுவெல்லாம் பெயரளவுக்குத்தான். துணை தலைவர், செயலாளர், பொருளாளர் இவர்களும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடிகள் போல இன்றளவும் மாற்றப்படாமல் ஆணியடித்தாற் போல அதே பொறுப்பில் இருப்பதிலிருந்தே நாம் இப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் இயங்கா நிலையை கணித்துவிட முடியும்.
இந்தச் சூழலில்தான் தம்மை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக நியமிக்க வேண்டியும், கழகத்தை புதுப்பித்தே ஆக வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளார் அய்யலூர் குளத்துப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி. இவர் கவியோவியத்தமிழன் என்ற புனைப்பெயரில் இதுவரை எட்டு நூல்களை எழுதியுள்ளார். தமிழில் வெளிவரும் அனைத்து வெகுஜன இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. இவர் சிறந்த ஓவியராகவும் அறியப்படுகிறார்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தை புதுப்பிப்பதற்கான முயற்சிகளில் மும்மூரமாய் இருந்த சுப்பிரமணியை நாமே தொலைபேசியில் பிடித்து வினவினோம்.
” மூன்று வருடத்திற்கு ஒருமுறை பொதுக்குழு, செயற்குழு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பது றிஜிகி விதி. ஆனால் கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக இந்த கழக நிர்வாகத்தில் எந்தவிதமான மாற்றமுமில்லை. பிடித்து வைத்த பிள்ளையார் கணக்காக எவ்விதமான செயல்பாடுகளுக்கும் லாயக்கில்லாமல் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் அர்ப்பணிப்பு மிக்க பொறுப்புகளை தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 30 ஆண்டு காலமாக இப்பள்ளியில் றிஜிகி வால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் என்னென்ன என்று ஸிஜிமி யில் கேட்டுள்ளோம். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக, அல்லது செயற்குழு பொதுக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பிள்ளைகள் நடப்பாண்டில் இதே பள்ளியில் படித்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதும் றிஜிகி வின் முதன்மையான விதி. அதன்படியும் தற்போது பொறுப்பில் உள்ளவர்கள் காலாவதியான நிலையில்தான் உள்ளனர். அவர்களின் பிள்ளைகள் யாரும் தற்போது இப்பள்ளியில் படிக்கவில்லை. அதனடிப்படையில்தான் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை புதுப்பிக்க வேண்டும் என்கிறோம்.
சிலர் இந்த பொறுப்புகளை கௌரவத்திற்காக பயன்படுத்த நினைக்கிறார்கள். சிலர் பணபலத்தை முக்கிய தகுதியாக நினைத்துக்கொண்டு தலைவர் பொறுப்பை கைப்பற்றிவிட துடிக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படியானவர்கள்தான் இத்தனை காலமாக இந்த பொறுப்புகளில் இருந்தவர்கள். நீங்கள் இருக்கும் வரைக்கும் இந்த பள்ளி வளர்ச்சிக்கு அல்லது மாணவர்களின் நலன் சார்ந்த விசயங்களுக்கு என்ன செய்தீர்கள் என்றால் எவரிடமும் பதிலில்லை.
என்னைப் பொறுத்தவரையிலும் இந்த பள்ளியை மேன்மைக்குரியதாக மாற்றுவதற்கான நிறைய திட்டங்களை வைத்துள்ளேன். அவற்றைத்தான் நான் விலை மதிப்பில்லாததாக கருதுகிறேன். பள்ளியின் உட்கட்டமைப்பு விசயங்களை பிற பள்ளிகள் வியக்கும் வண்ணம் செம்மைப் படுத்தவும், திருத்தியமைக்கவும் வேண்டிய தேவை உள்ளது. எனது பிள்ளைகள் இருவரும் இதே பள்ளியில்தான் படித்து வருகிறார்கள். அவர்கள் வாழ்விலும் வளர்ச்சியிலும் கல்வியிலும் நான் நிரம்ப அக்கறை எடுத்துக் கொள்வது போலவே அனைத்து மாணாக்கர்கள் விசயத்திலும் மனமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு ஈடுபடுவேன். நான் இப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக விரும்புவதற்கான காரணம் இப்பள்ளியை அப்பழுக்கற்று நேசிப்பதும் உயிருக்கு நிகராக மதிப்பதும்தான்.”
என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் சுப்பிரமணி.