சமூக வலைதளத்தில் தவறான பதிவு ! இயக்குநர் ப. ரஞ்ஜித் மீது போலீசில் புகார்
திரைப்பட இயக்குனர் ப. ரஞ்சித், சாதிய மோதலைத் தூண்டும் வகையில் தவறான கருத்துக்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டதால், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ப.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில், நாங்குநேரி வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா என்பவர் கடந்த 20 ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்து இயக்குநர் பா.ரஞ்சித் 21-ஆம் தேதி காலை 7 மணி அளவில் அவருடைய நீலம் பண்பாட்டு மையம் என்ற எக்ஸ் வலைதளத்தில், தீபக் ராஜா கொலை சம்பந்தமாக அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது. அதில் தீபக் ராஜா கொலை வழக்கில் மறவர் சமூகத்தைச் சேர்ந்த குற்றவாளிகளை எஸ்சி.எஸ்டி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என பதிவிடப்பட்டிருந்தது.
சங்க இலக்கியத்திலும்,புராணங்களிலும் மறவர் என்ற சமூகம் மிகவும் பெருமை வாய்ந்தது என வரலாற்றுச் சான்று கூறுகின்றது. இப்படிப்பட்ட மறவர் சமுதாயத்தினர் பற்றி சமூக வலைதளத்தில் தவறான கருத்து பதிவு செய்து தென் மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டி விட நினைக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் தமிழக கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி, பரமக்குடி துணை கண்காணிப்பாளர் சபரிநாதனிடம் புகார்மனு அளித்துள்ளார். புகார்மனு குறித்து சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும் என துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.