இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்துகள் பரிசோதனையா?!
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த போட்டியில் இந்தியாவும் இறங்கியுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் எனும் தடுப்பு மருந்து கண்டறிந்து அதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. புணேவில் உள்ள சீரம் நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் பெரிய அளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், “கெடிலா ஹெல்த்கேர், பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு மருந்துகளின் முதல்கட்ட பரிசோதனை நிறைவடைந்துள்ளது. புணேவில் உள்ள சீரம் நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனையை விரைவில் தொடங்கவுள்ளது.
கொரோனா தொடர்பாக, இந்தியாவில் மொத்தம் மூன்று தடுப்பு மருந்துகள் பரிசோதனையில் உள்ளன. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 14 மருத்துவ நிறுவனங்களில் மொத்தம் 1,500 தன்னார்வலர்களிடம் சீரம் நிறுவனம் மூன்றாம்கட்ட பரிசோதனையை விரைவில் தொடங்கவுள்ளது” என்று ஐசிஎம்ஆரின் பொது மேலாளர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்தை செலுத்த இன்னும் நான்கு ஆண்டுகள் தேவைப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை பொது மேலாளர் அடார் புன்னாவாலா தெரிவித்திருந்தார்.
முன்னதாக, இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அமீரகத்தில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னார்வலர்கள் 31 ஆயிரம் பேரைத் தேர்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்குப் பண உதவி கொடுத்து அரசு தடுப்பு மருந்து பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளது.
இந்த பரிசோதனைகள் 2 விதமான தடுப்பு மருந்துகளைக் கொண்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மருந்து செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மனித உடலில் சிறிய அளவு பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த மருந்து பரிசோதனையில் தன்னார்வலர்களாக அபுதாபியில் வாழும் மதுரைக்காரர் ஆஷிக் இலாஹியும் அவரது மனைவியும் பங்கேற்றிருந்தனர். ஆஷிக் அபுதாபியில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இருவரும் 21 நாள் இடைவெளியில் 2 முறை குறிப்பிட்ட தடுப்பு மருந்தை உடலில் ஏற்றிக் கொண்டுள்ளனர்.
எனினும் இதுவரை எந்த பக்க விளைவுகளும் இல்லை என்றும் நலமாக உள்ளோம் என்றும் தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஆஷிக் அந்தப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
நானும் எனது மனைவியும் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டோம், எந்த பக்க விளைவுகளும் இல்லை.
முதல் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்ட போதே உடலில் அதிகளவில் எதிர்ப்புச் சக்தி உற்பத்தியாகத் தொடங்கியது. பின் 21 நாள் இடைவெளியில் மீண்டும் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டேன். இதையடுத்து உடலில் நூறு சதவீத எதிர்ப்புச் சக்தி கிடைத்திருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள், பரிசோதனை செய்யும் நிறுவன ஊழியர்கள் தினமும் எங்களைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் சார்ந்து விசாரிப்பார்கள். குறிப்பாக வெப்ப பரிசோதனையைத் தினமும் மேற்கொள்ள அறிவுறுத்துவார்கள். இதுவரை நான் ஆரோக்கியமாக உள்ளேன்.
தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டவர்கள் அனைவருக்கும் அரசு போதுமான பணம் வழங்கியுள்ளது. ஒரு வருடத்திற்கு மருத்துவ இன்சுரன்ஸ் வழங்கியுள்ளது. எங்கள் அனைத்து செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும். எனினும் எங்களில் பெரும்பாலானோர் கொரோனாவுக்கு தீர்வு வேண்டும் என்றே இந்த பரிசோதனையில் எங்களை இணைத்துக் கொண்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
– முத்துப்பாண்டி