இந்தியாதமிழகம்

கொரோனாவுக்கு சவாலான ‘வணக்கம்’

கொரோனா வைரசால் நாட்டில் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்தைக் கடந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதில் ஆறுதல் அளிக்கும் செய்தி என்னவென்றால், இதுவரை இந்த வைரஸ் தொற்றிலிருந்து 70 ஆயிரத்து 387 பேர் மீண்டு வந்துள்ளனர்.

இந்தியாவில் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், கேரளாவைச் சேர்ந்த 3 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா தொற்று தீயாகப் பரவி வருகிறது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த சூழலில் உலகத் தலைவர்கள் நேரில் சந்திப்பதை, வேறு நாடுகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்த்து வருகின்றனர். அப்படி நேரில் சந்தித்தாலும் கைக்குலுக்க மறுக்கிறார்கள். இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், தமிழர் பாரம்பரிய, இந்தியப் பாரம்பரியம் என குறிப்பிடலாம்.

கொரோனா வைரஸ் சாதி அமைப்பை விட மிகவும் கொடிய தாக்குதலை மனிதர்கள் மீது நடத்தி வருகிறது. பாதிப்பிற்கு ஆளான நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிறர் முகத்தையோ, பிறருடன் தொடர்போ வைத்துக் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

வைரஸ் உடலிலிருந்து நீங்கினால், சமூகத்திற்குள் திரும்ப வாய்ப்பு உள்ளது. ஒருவேளை குணமடையவில்லை என்றால் இறந்தபின் உடலை என்ன செய்வார்கள் என்ற செய்திகூட வெளியில் கசியாமல் சம்பந்தப்பட்ட நாட்டின் அரசுகள் பார்த்துக் கொள்கிறது.

இந்த கொடிய நோயிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதையே இப்போதைய நேரத்தில் உலகத்தில் உள்ள மனிதர்கள் முதல் முக்கிய கடமையாகச் செய்து வருகின்றனர். இந்த கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளில் செய்யக்கூடாதவை எனக் குறிப்பிடப்படுவதில் பிறருடன் கைக்குலுக்குவதும் அடங்கும். இதனால் எதிரிலிருக்கும் நபரை வரவேற்பதற்கு உலக மக்கள் வணக்கம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.

இதன் உச்சமாக அமெரிக்க அதிபர், அயர்லாந்து பிரதமரை வரவேற்ற விதம் குறிப்பிடப்படுகிறது. இந்த நிகழ்வைச் சர்வதேச பத்திரிகைகள் இந்தியாவின் பாரம்பரியம் கொரோனா வைரசுக்கு பெரும் சவாலாக உள்ளது, இதை இப்போது உலகமே கொண்டாடத் தொடங்கிவிட்டது என குறிப்பிடுகின்றன.

அரசு முறை பயணமாக அயர்லாந்து பிரதமர் லியோ வர்த்கார் அமெரிக்க சென்றிருக்கிறார். அயர்லாந்து பிரதமரை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குனிந்தபடி கைகளால் வணக்கம் தெரிவித்து வரவேற்றார். இது இப்போதைய நேரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதுகுறித்து ட்ரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “நான் சமீபத்தில்தான் இந்தியா சென்றுவிட்டு நாடு திரும்பினேன். அங்கு இப்படிதான் கைகளைச் சேர்த்து வரவேற்கிறார்கள். கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை இது” என்றார். இந்த நேரத்தில் தமிழ்நாட்டு நெட்டிசன்கள், “இதத்தான் அன்னைக்கே என் முன்னோர்கள் வழக்கமாக மாற்றிச் சென்றார்கள், வீரத்தமிழன்டா” என கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

– நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button