16 மருந்துகள் தரமற்றவை… மருந்துக் கட்டுப்பாட்டு நிறுவனம் அறிக்கை!
கடந்த மாதம் 1,001 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 985 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது; 16 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 16 மருந்துகள் தரமற்றவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பொதுச் சுகாதார சேவை இயக்ககத்தின் கீழ் இயங்கும் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாடு நிறுவனம் (CDSCO) மேற்கொண்ட மாதாந்திர ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து சி.டி.எஸ்.சி.ஓ அறிக்கை வெளியிடுகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 1,001 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 985 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது; 16 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
அதேநேரம் ஜீரண பாதிப்பு, பாக்டீரியா தொற்றுபிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினிகள் சிலவும்தரமற்றதாக இருந்தது தெரியவந்தது. இந்த மருந்துகள் குஜராத்,இமாச்சலப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த தரமற்ற மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதளத்தில் (https://cdsco.gov.in)வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதே போல், 2020 டிசம்பர் மாதம் 943 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 928 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டு, 15 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 59 மருந்துகள் தரமற்றவை என்று ஆய்வில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் மருந்துகளை விற்கும் உரிமம் இல்லாத நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இணையம் மூலம் மருந்துகளை விற்பனை செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதித்து, உத்தரவிட்டார்.
இதையடுத்து, `டிஎன்மெட்ஸ்.காம்‘ (tnmeds.com) மூலம் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனம், இந்தத் தடையின் மூலம், ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய உரிமம் பெற்ற நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன என்றும், தாங்கள் மருந்துப் பொருள்களை வாங்கி, விற்பனை மட்டுமே செய்வதாகவும், எனவே, இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பு வாதியாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என நீதிபதியிடம் முறையிட்டனர்.
இதைக் கேட்ட நீதிபதி மகாதேவன், “ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய உரிமம் பெறாத நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள் அச்சப்பட வேண்டாம்’’ எனவும் கூறினார். இந்த நிலையில், உரிமம் பெறாத நிறுவனங்களின் மீதான தடையை நீக்கக் கோரி, ஆன்லைன் மருந்து நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனு, விசாரணைக்கு வருகிறது!
– ராபர்ட்ராஜ்