அரசியல்

உட்கட்சி பூசலில் சிவகங்கை திமுக : கொந்தளிக்கும் தொண்டர்கள்…

சிவகங்கை மாவட்ட திமுகவில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது. சிவகங்கை மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் இருந்து வருகிறார். இவருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் நீண்ட நாட்களாக பிரச்சனைகள் நடந்த வண்ணம் உள்ளதால் பெரிய கருப்பன் பற்றி செய்திகள் சமூக வலைதளத்திலும், போஸ்டர் வடிவிலும் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனால் ஒட்டுமொத்த திமுகவினரும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இதனால் நிர்வாகிகள் பற்றி தலைமைக்கு பெரிய கருப்பனும், பெரிய கருப்பன் பற்றி நிர்வாகிகளும் புகார்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். இதனால் சிவகங்கை மாவட்ட திமுகவில் என்னதான் பிரச்சனை என்பது பற்றி அறிய நமது குழுவினர் விசாரணையில் இறங்கினர்.

இதுகுறித்து திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கூறுகையில், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் சிவகங்கை, மானாமதுரை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் திமுக தோல்வியடைய மாவட்டச் செயலாளர் பெரிய கருப்பனின் ஒத்துழைப்பு இல்லாததுதான் முக்கிய காரணம். கட்சியின் தலைமை தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து கட்சியின் நிர்வாகிகள் வேட்பாளர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தியிருந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருந்திருக்காது.

அதன்பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் இந்த மாவட்டத்தில் அதிமுக அமைச்சரோடும், அதிமுக நிர்வாகிகளோடும் கூட்டணி அமைத்துக் கொண்டு வெற்றி பெற வேண்டிய இடங்களை திமுக பறிகொடுத்தது. ஏன் மாவட்ட செயலாளரின் சொந்த ஊரிலேயே திமுக தோல்வியை சந்தித்தது. சிவகங்கையில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் சம்பளத்தில் கவுன்சிலர்கள் வெற்றி பெற்று இருந்தும் ஒரு இடத்தில் வெற்றி பெற்ற அமமுக கவுன்சிலரிடம் பெரியகருப்பனின் மைத்துனர் உள்ளிட்டோர் தலைக்கு ஐந்து லட்சம் பெற்றுக்கொண்டு சேர்மன் பதவியை விட்டுக் கொடுத்தனர். மாவட்டச் செயலாளர் பெரிய கருப்பன் நினைத்திருந்தால் ஒரு கவுன்சிலரை தங்கள் பக்கம் அழைத்து திமுகவுக்கு சேர்மன் பதவியை பெற்றிருக்கலாமே.

திமுக, அதிமுக இரண்டு ஆட்சிகளிலும் தொடர்ந்து சட்ட விரோதமாக குவாரிகளை நடத்தி கனிமவளங்களை சுரண்டி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு கூட இவரது குவாரிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சியரே நடவடிக்கை எடுத்து இவரது குவாரியை முடக்கினார். அதிமுக அமைச்சரோடு கூட்டுச்சேர்ந்து கொண்டு மீண்டும் குவாரிகளை ஆரம்பித்து கனிம வளங்களை தோண்டி எடுத்து விற்பனை செய்து வருகிறார். இதுசம்பந்தமாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. இதுசம்பந்தமான வீடியோக்களும் புகைப்படங்களும் மாவட்ட ஆட்சியரிடமே பத்திரிகையாளர்கள் வழங்கி இருக்கிறார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தனது வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு நிர்வாகிகள் அனைவரையும் இவரது தொகுதியில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். மற்ற தொகுதிகளில் கழகத்தின் வெற்றியை பற்றி கவலைப்படாமல் இவரது திருப்பத்தூர் சட்டமனற தொகுதியில் மட்டுமே கவனம் செலுத்தினார். சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் தோல்வியை தழுவியதற்கு அந்த சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் மேப்பல் சக்தி நிர்வாகிகளோடு ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் திமுக தோல்வியை சந்தித்தது என்று தலைமைக்கு புகார்கள் அனுப்பியுள்ளனர். இவரது புகாரை ஏற்று திமுக தலைமையும் மாவட்ட செயலாளரால் குற்றம் சாட்டப்பட்ட காளையார் கோவில் வடக்கு ஒன்றியச் செயலாளர் மேப்பல் சக்தி மற்றும் அவரது ஆதரவாளர்களான காளையார் கோவில் தெற்கு ஒன்றியச் செயலாளரான மார்த்தாண்டன், சாக்கோட்டை கிழக்கு ஒன்றியச் செயலாளரான முத்துராமலிங்கம் உள்ளிட்டோரை நேரில் அழைத்து விசாரணை செய்யாமல் பெரியகருப்பனின் புகாரை மட்டும் நம்பி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துள்ளது. இதற்கு மாவட்டச் செயலாளர் பெரிய கருப்பன்தான் காரணம் என்று நீக்கப்பட்ட நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காளையார் கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெரிய கருப்பனின் உருவ பொம்மையை எரித்து மாவட்டச் செயலாளர் பெரிய கருப்பனுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர். கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை இருந்தும் இவ்வளவு பேர் ஒன்று கூடுவதை பார்க்கும்போது மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன் மீது திமுக தொண்டர்களின் அதிருப்திதான் காரணம்.

கே.என்.நேரு

இதுகுறித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மேப்பல் சக்தியிடம் கேட்டபோது உள்ளாட்சித் தேர்தலில் நான் பொறுப்பு வகித்த பகுதிகளில் திமுக கவுன்சிலர்கள் தோல்வியடைந்ததற்கு நான்தான் காரணம் என்று மாவட்டச் செயலாளர் பெரிய கருப்பன் தலைமையிடம் புகார் அளித்திருக்கிறார். என்மீதான குற்றச்சாட்டுக்களை தலைமை என்னிடம் விளக்கம் கேட்டு நேரில் அழைத்து விசாரித்து என் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் தான் நேரில் அழைத்து விசாரணை செய்யவில்லை என நினைக்கிறேன். நான் 1989ல் இருந்து திமுகவில் இருந்து வருகிறேன். மூன்றுமுறை கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்துள்ளேன். காளையார் கோவில் ஒன்றிய பெருந்தலைவராகவும் துணைத் தலைவராகவும் இருந்துள்ளேன். நான் ஒரு போதும் கட்சிக்கோ, தலைமைக்கோ எதிராகவோ செயல்பட்டது இல்லை. செயல்பட போவதும் இல்லை. கட்சியின் தலைமைக்கு என்றும் கட்டுப்பட்டவன். எனது தரப்பு விளக்கத்தை தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பி இருக்கிறேன். முதன்மைச் செயலாளரிடமும் கூறி இருக்கிறேன். கண்டிப்பாக கட்சித்தலைமை எனது தரப்பு விளக்கத்தை கேட்டு தலைவர் ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறினார்.

திமுகவின் உட்கட்சி பூசல் பெரும்பாலான மாவட்டங்களில் இருக்கிறது. ஏற்கனவே நெல்லை, கோவை மாவட்டங்களில் முதன்மை செயலாளர் நேரு நேரில் சென்று பேச்சு வார்த்தை நடத்தி சரிசெய்து வந்திருக்கிறார். அதேபோல் சிவகங்கை மாவட்டத்திலும் கட்சி நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர் பெரிய கருப்பனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைகளை தீர்த்துவைப்பாரா என்ற எதிர்பார்ப்பில் திமுகவினர் இருக்கிறார்கள். இதேநிலை நீடித்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி கேள்விக்குறிதான் என்று கவலையுடன் புலம்புகிறார்கள் திமுக தொண்டர்கள்.

  • சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button