அதிமுகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலும் முக்கியமானவர். இவர் சிறுபான்மையனர் நலத்துறையையும் சேர்த்து கவனித்து வந்தார். கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது சிறுபான்மை நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கம் மதுரை வக்ஃப்போர்டு கல்லூரியில் பணிநியமனங்களை பூர்த்தி செய்ததில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே வக்பு வாரியத் தலைவராக இருந்த இராமநாதபுரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அதிமுக சிறுபான்மை பிரிவின் செயலாளருமான அன்வர் ராஜாவும், அமைச்சர் நிலோபர் கபிலும் கூட்டுச் சேர்ந்து கொண்டு பேராசிரியர்கள் நியமனத்தில் ஒரு பேராசிரியர் நியமனத்திற்கு அறுபது லட்சம் முதல் எழுபது லட்சங்கள் வரை வசூல் செய்து முறைகேடுசெய்திருக்கிறார்கள்.
இது சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது. சிபிஐ விசாரணையில் அன்வர் ராஜா வீட்டில் ஆவணங்களும் கிடைத்ததாக தெரிய வருகிறது. வீடியோ வாக்குமூலம் ஆடியோ இவர்கள் யார் யாருக்கு எத்தனை பேருக்கு பதவிகளை பங்கிட்டு கொண்டார்கள் என்கிற விபரங்கள் அடங்கிய ஆதாரங்களையும் வெளியிட்டு சிபிஐ வசம் வழங்க சிலர் தயாராகி வருவதாகவும் தெரிய வருகிறது.
இது சம்பந்தமாக ஏற்கனவே நமது இதழில் பலமுறை செய்திகள் வந்துள்ளன. இதுதவிர நிலோபர் கபில் கடந்த மாதம் வக்பு வாரிய கல்லூரிக்கு முறைகேடாக செயலாளர் ஒருவரை அவசர அவசரமாக நியமனம் செய்து ஏற்கனவே பணம் வசூல் செய்த இருபத்தி ஆறு பேராசிரியர்களையும் நிரந்தரமாக பணியமர்த்துவதற்காக வேலை செய்து வந்தாராம். ஆனால் செயலாளர் நியமனம் நீதிமன்றம் வரை சென்றதால் பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.
இவரைச் சுற்றி நடைபெறும் அனைத்தும் முதல்வர் கவனத்திற்குச் சென்றதாலும் இவர் மீது இவரது சொந்த தொகுதியிலேயே இவருக்கு செல்வாக்கு குறைந்ததாலும் இவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. அதேபோல் அன்வர்ராஜாவும் இந்த தேர்தலில் இராமநாதபுரம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டு காலில் விழாத குறையாக கெஞ்சிப் பார்த்தார். ஆனால் இவர் மீதும் சிபிஐ வழக்கு இருப்பதாலும் தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இவரது மகள் குறைந்த வாக்குகள் வாங்கி தோற்றுப் போனார். இவர் சார்ந்திருக்கும் இஸ்லாம் சமுதாயத்தினர்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கு இல்லை. அதேபோல் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மணிகண்டனிடமும் முறைத்துக் கொண்டார். கட்சியினர் மத்தியிலும் இவருக்கு செல்வாக்கு இல்லை. இது சம்பந்தமாக ஏற்கனவே செய்திகள் வெளியிட்டு இருந்தோம்.
இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களும், முக்குலத்தோர் சமுதாயத்தினரும் அதிகம் வசிக்கும் தொகுதி. ஆனால் இஸ்லாமியரான அன்வர் ராஜா முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த மணிகண்டனுக்கு வாய்ப்பு வழங்காமல் தனக்குத்தான் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று போராடினார். இதனால்தான் இருவருக்கும் இந்த முறை வாய்ப்பு இல்லை. இராமநாதபுரம் தொகுதியை கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கியிருக்கிறது.
திமுகவில் திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்திற்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இவர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவர். இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரன் கேட்டு வந்தார். ஆனால் சொந்த தொகுதிவாசிக்கு சீட்டு வழங்காமல் வேறொரு தொகுதிவாசிக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கியதால் பவானி ராஜேந்திரன் சார்ந்த சமுதாயத்தினர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக மண்டபம் முனியசாமி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடுமையாக போராடினால் இவருக்கும் திமுகவுக்கும் தான் போட்டி கடுமையாக நிலவும் என்கிறார்கள் தொகுதிவாசிகள். தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்க வில்லை. இந்த தொகுதியில் வெற்றி தோல்வி யாருக்கு என்கிற முழுவிபரத்தை அடுத்த இதழில் பார்ப்போம்.
– சூரியன்