அரசியல்தமிழகம்

மோகன் காந்திராமனை வாழ்த்திய எம்ஜிஆர்!

மக்கள் திலகம் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த சமயத்தில் எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகியவரும், திரைப்படத் தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினராகவும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர், பெப்சி திரைப்பட தொழிலாளர்கள் வீட்டு வசதி சங்கத்தின் தலைவர், அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக பதவி வகித்த முதல் தமிழர் என சினிமாத்துறையின் பல்வேறு பதவிகளை வகிக்கும் மோகன் காந்திராமன், எம்ஜிஆருடன் பழகிய நாட்களையும், எம்ஜிஆரால் வாழ்த்துப் பெற்ற நிகழ்வையும் கேள்விப்பட்டபோது நமக்கு மிகவும் பெருமிதமாக இருந்தது.
நாகர்கோவில் அருகே ரவிபுதூர் தான் இவரின் சொந்த ஊர். பெரிய மிராசுதாரர் குடும்பத்தில் பிறந்த இவரின் தந்தை ராமன்பிள்ளை மகாத்மா காந்தியின் மீதுள்ள பற்றின் காரணமாக காந்திராமன் என்று அழைக்கப்பட்டார். 1934ல் காந்திஜி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தபோது காந்திராமனின் குழந்தைக்கு மோகன்தாஸ் என்று தன்னுடைய பெயரையே சூட்டினார்.
பாளையங்கோட்டை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மோகன் ஒரு நாள் நாகர்கோவில் அருகே தனது சொந்தஊருக்கு வந்தபோது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஊரில் இருப்பதாக கேள்விப்பட்டார். எஸ்.டி.இந்து கல்லூரியில் நடக்கும் ஒருவிழாவில் கலந்து கொள்ள என்எஸ்கே வந்திருந்தார். கலைவாணரும் இவருடைய தந்தையும் நெருங்கிய நண்பர்கள். இவர் கலைவாணரை சந்தித்தபோது என்ன செய்கிறாய் என்று விசாரித்ததும் தன்னுடைய கல்லூரிப் படிப்பைப்பற்றி சொன்னதும், படிப்பின் மீது நம்பிக்கை இல்லாது இருந்த என்எஸ்கே மோகனை சென்னைக்கு வா என்று இவரை அழைத்திருந்தார்.
சென்னைக்கு வந்து என்எஸ்கேவைப் பார்த்து ஆறுமாதங்கள் கழிந்த நிலையில் ஒருநாள் மோகனைப் பார்த்து என்எஸ்கே கேட்டார். எப்படி இருக்கே? அப்படியேதான் இருக்கேன் என்றார் மோகன். இவருடைய பதில் என்எஸ்கேயின் மனதை பாதித்தது. உடனே தொலைபேசியை சுழற்றி இயக்குனர் ப.நீலகண்டனிடம் பேசி அவர் இயக்கும் சக்கரவர்த்தி திருமகள் படத்தில் உதவி இயக்குனராக வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்.


சக்கரவர்த்தி திருமகளின் முதல்நாள் படப்பிடிப்பு வாஹினி ஸ்டுடியோவில் ஏற்பாடாகியிருந்தது. படத்தின் கேமராமேன் உதவியாளர்களுடன் அரங்கத்திற்கு ஒளி அமைப்பு செய்து கொண்டிருந்தார். படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருந்த எம்ஜிஆர், அஞ்சலிதேவி, பி.எஸ்.வீரப்பா ஆகியோர் அரங்கத்தின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
லைட்டிங் முடிந்தது. எம்ஜிஆரை வரச்சொல்லுங்க என்றார் இயக்குனர் ப.நீலகண்டன், மா.லட்சுமணன் தான் நீலகண்டனின் முதல் உதவி இயக்குநர். அவர் புதிதாக சேர்ந்திருந்த இரண்டாவது உதவி இயக்குநர் மோகனைப் பார்த்து எம்ஜிஆரை வரச்சொல்லுங்க என்றார்.


மோகன் வேகமாக அரங்கத்தின் வெளியே வந்தார். அப்போது எம்ஜியாரும் அஞ்சலிதேவியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ஷாட் ரெடி டைரக்டர் வரச்சொன்னார் என்று திடுதிப்பென்று தெரிவித்துவிட்டு மோகன் உள்ளே நடந்தார்.
எம்ஜிஆருக்கு கொஞ்சம் அதிர்ச்சி! மெதுவாக சிரித்தார்.. இவன் புதுபையன் போல என்ற உணர்வுடன் அரங்கத்தினுள் சென்றார்.
முதல் ஷாட் முடிந்தது. ஒகே என்றார் இயக்குனர். எம்ஜிஆர் மோகனைக் காட்டி நீலகண்டனிடம் யார் இந்தப் பையன்?
ஏன் எதுக்கு கேட்குறீங்க? என்றார் நீலகண்டன். இல்லை சொல்லுங்க என்றார் எம்ஜிஆர்.
பேரு மோகன் பெரிய தேசிய பரம்பரையிலே வந்த பையன். கலைவாணருக்கு ரொம்ப வேண்டியவன். அவர்தான் சேர்த்துவிட்டாரு.. காலேஜிலிருந்து நேரடியாக சினிமாவுக்கு வந்திருக்கான் என்றார் நீலகண்டன்.
அதானே பார்த்தேன் என்று சிரித்த எம்ஜிஆர்.. வந்தான்.. ஷாட் ரெடின்னான்.. டைரக்டர் கூப்பிடுறான்னு போயிட்டான்.. என்றார்.
எப்படி கூப்பிடுறதுங்கற சினிமாத்தனம் அவனுக்குத் தெரியாது என்றார் நீலகண்டன். முகத்திற்கு முன்னே பணிவு, குனிவு, நெளிவு, சுளிவு.. ஆனால் முதுகுக்கு பின்னே ஏதேதோ பேசுறதுங்கற சினிமாத்தனம் அவருக்கு புரிந்திருந்தது.
பையனின் நேர்மையான தோற்றமும், அவன் உடுத்தியிருந்த கதரின் எளிமையான தூய்மையும், அது தெரிவித்த தியாக பாரம்பரியமும் எம்ஜிஆரை ஈர்த்திருக்க வேண்டும்.
உடனே அவர் சொன்னார். ரொம்ப நல்லது.. அப்பா.. சினிமாத்தனம் உனக்கு வர வேண்டாம்பா! சினிமாத்தனம் இல்லாமலேயே இரு என்று மோகனை வாழ்த்தினார்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஒரு படப்பிடிப்பில் காத்திருந்தார். அப்போது அவர் வளர்ந்து வரும் ஹீரோ. காலை ஏழு மணிக்கு மேக்கப்புடன் எம்ஜிஆர் ரெடியாக இருப்பார். ஆனால் அவருக்கு ஷாட் வராது. காரணம் அந்தப் படத்தின் ஹீரோயின்தான் காரணம். அவர் எம்ஜிஆரை விட ரொம்பவும் பிசியானவர். இந்திப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். சென்னைக்கும், பம்பாய்க்கும் மாறிமாறி பறந்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவருடைய கால்சீட்டை தவறவிட்டாலும் மறுபடியும் அவரிடம் கால்ஷீட் வாங்குவது மிகவும் அபூர்வம். அதனால் அவருக்கு முன்னுரிமை கொடுத்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் எடுத்துக் கொண்டிருந்தனர். அதன்பிறகுதான் மற்ற நடிகர்களின் காட்சிகளை எடுப்பார்கள்.
எம்ஜிஆர் காலை ஏழு மணிக்கெல்லாம் மேக்கப்புடன் ரெடியாக இருக்கிறார். ஹீரோயின் வரவில்லை. மணி ஒன்பதாகிறது. ஷாட்டும் எடுக்கவில்லை. மதியம் இரண்டு மணி ஆகிவிட்டது. காலையிலிருந்து சாப்பிடாமல் ஹீரோயின் எந்த நேரத்திலும் வந்துவிடலாம். ஷாட்டுக்கு கூப்பிடுவார்கள் என்பதால் எம்ஜிஆர் சாப்பிடாமலேயே போட்டிருந்த சரித்திர உடையுடன் இருந்ததால் அந்த உடைகளும் உடம்பை அரிக்க கொஞ்சம்கூட சலிப்பில்லாமல் பொறுமையுடன் எம்ஜிஆர் காத்திருந்தார். மணி 3 ஆனதும் ஹீரோயின் வர தாமதமாகும். நீங்க சாப்பிடுங்க என உதவி இயக்குனரான (மோகன் காந்திராமன்) சொல்லியுள்ளார்.
நல்ல பசியோடு இருந்த எம்ஜிஆர் சாப்பாட்டில் கைவைத்து ஒரு வாய் சாப்பிடுகின்ற நேரம் ஹீரோயின் வந்தாச்சு. ஷாட் ரெடி என்ற குரல் கேட்டதும் எம்ஜிஆர் சாப்பிடாமல் அப்படியே போட்டுவிட்டு எழுந்து கையை கழுவிட்டு ஷாட்டுக்கு போய்விட்டார். இரண்டே ஷாட்கள்தான் எடுத்தார்கள். ஹீரோயின் கிளம்பி போய்விட்டார்.
அன்றைய படப்பிடிப்பு முடிந்தது. களைப்புடன் திரும்பிய எம்ஜிஆரிடம் என்னன்னே காலையில் இருந்து ரொம்ப களைப்பாயிருக்கீங்க.. என்று மோகன் காந்திராமன் சொன்னார். அதற்கு பரவாயில்லை மோகன். எனக்கும் ஒரு காலம் வரும். அப்ப இந்த சினிமா உலகம் முழுவதுமே எனக்காக காத்திருக்கும். அப்படி ஒரு நாள் வரத்தான் போகுது என்று சிரித்துக் கொண்டே தன்னம்பிக்கையுடன் எம்ஜிஆர் சொல்லிவிட்டு காரில் ஏறிப்போய்விட்டாராம். எம்ஜிஆர் சொன்னது பிற்காலத்தில் நடந்தது. அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். தமிழ் திரையுலகமே எம்ஜிஆருக்காக ராமாவரம் தோட்டத்தில் காத்திருந்தது.

எம்ஜிஆர் ஒரு மனிதன்

பொது உடமைக்கட்சியின் மாபெரும் தலைவர் ப.ஜீவானந்தம். அவர் தாம்பரம் கஸ்தூரிபாய் நகரில் குடிசைப் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். அவர் பத்திரமாக பாதுகாத்து வந்த அரிய புத்தகங்கள் மழை வரும் போது நனைந்து விடும். இதைத்தடுத்து எல்லா புத்தகங்களையும் பாதுகாக்கும் நோக்கத்தில் வீட்டுக்கு புதிதாக ஓலை கட்ட வேண்டும் என்று மோகன் காந்திராமனிடம் கூறியிருக்கிறார்.
ஒரு படப்பிடிப்பில் இருந்த எம்ஜிஆரை சந்தித்த மோகன்காந்திராமன் இந்த செய்தியை எம்ஜிஆரிடம் கூறியிருக்கிறார். தமிழகத்தின் மாபெரும் தலைவர் ஒரு சிறு வீடு கூட இல்லாமல் வாழ்நாள் முழுவதும் சேவை செய்து வருகிறார் என்று கூறிய எம்ஜிஆர். ஜீவாவுக்கு தானே தன் செலவில் ஒரு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்தார். மோகன்காந்திராமனும் எம்ஜிஆரும் தாம்பரம் செல்கிறார்கள். இவர்கள் சென்ற கார் ஜீவாவின் வீட்டின் அருகே நின்றது. ஜீவாவிற்கு இன்ப அதிர்ச்சி. வந்த நோக்கத்தை அவரிடம் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதால் உண்மையை மறைத்து, படப்பிடிப்பிற்கு தாம்பரத்தில் ஒரு இடம் பார்க்க வந்தோம் என்று எம்ஜிஆரும், மோகன் காந்திராமனும் சொன்னதும் ஜீவாவும் நம்பினார். இருவரும் திரும்பி வந்துவிட்டனர்.
ஜீவாவின் வீட்டு வேலையை உடனே ஆரம்பிக்குமாறு மோகன்காந்திராமனிடம் கூறிய எம்ஜிஆர், அதற்காகும் முழுப்பணத்தையும் தானே தருவதாகவும், இது வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்றும் மோகன் காந்திராமனிடம் கூறியிருக்கிறார்.
அடுத்தநாள் முதல் வீட்டு வேலை ஆரம்பம். விரைவில் கட்டி முடிக்கப்பட்டது. பொன்மனச்செம்மலின் உதவியால் புதிய வீட்டில் ஜீவா குடியேறினார். அவரது புத்தகங்களுடன். ஆனால் இந்த வீடு யாரால் கட்டப்பட்டது என்று ஜீவாவிற்குத் தெரியாது.
இவ்வாறு மாற்றுக் கட்சித்தலைவருக்கு யாருமே அறியாது ஒரு வீடு கட்டிக் கொடுத்த பெருந்தன்மை எம்ஜிஆரைத் தவிர வேறு யாருக்கும் வராது.
கம்யூனிசத் தந்தை ஜீவா மறைந்தபோது பிராட்வே பகத்ஹவுசிலிருந்து ராயபுரம் மயானம் வரை ஊர்வலத்தில் நடந்தே வந்த எம்ஜிஆர் நூறு ஆண்டுகள் மட்டுமல்ல.. மேலும் பல நூறு ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்வார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button