அரசியல்

அவைத்தலைவருக்கு பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளதா..?

தமிழக அரசியல் களத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நடைபெற்ற சம்பவங்கள் தான். அந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கொண்டு வந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்ததாக சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக கூறுவதாக ஆவேசமாக பேசினார்கள். அதன்பிறகு பன்னீர்செல்வத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவியும், பழனிச்சாமியின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் காலாவதியாகிவிட்டது எனவும் பேசினர்.

இவர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டதை பொதுக்குழு நிராகரித்ததால் இவர்கள் பதவிகள் காலாவதி ஆகிவிட்டது என்றால், இவர்கள் இருவரும் ஒப்புதல் வழங்கிய அதே பொதுக்குழு உறுப்பினர் பதவிகளும் செல்லாது என்பதை சண்முகமும், முனுசாமியும் உணரவில்லையா? என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது. பன்னீர்செல்வம் பெற்ற நீதிமன்ற தீர்ப்பால் பதட்டமடைந்த எடப்பாடி தரப்பினர் குறிப்பாக சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இருவரும் பழனிச்சாமியை பதட்டமடைய செய்து சட்ட சிக்கல்களுக்கு ஆளாக்கியுள்ளனர் என சில அதிமுக நிர்வாகிகள் கூறிவருகின்றனர்.

இதுசம்பந்தமாக தென்மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நம்மிடம் கூறுகையில்..

அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தையும், புதிய தலைமை வருகிற 11ஆம் தேதி கூட்டுகிற பொதுக்குழுவில் மற்ற 23 தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்றார் கே.பி.முனுசாமி. நீதிமன்ற உத்தரவில் 23 தீர்மானங்களைத் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது. வேண்டுமானால் விவாதிக்கலாம் என்று தான் கூறப்பட்டுள்ளது. ஆனால் வருகிற 11ஆம் தேதி ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற நீதிமன்ற அனுமதி கிடைத்துவிட்டதா? புதிய தலைமை என்று எதை வைத்து பேசுகிறார் முனுசாமி. அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டது நீதிமன்ற உத்தரவை அவமதித்தது ஆகாதா? அவைத்தலைவருக்கு பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் உள்ளதா? பொதுச்செயலாளர் அதிகாரத்தை பெற்றிருக்கிற ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருக்கும்போது அவைத்தலைவர் பொதுக்குழுவை எப்படி கூட்ட முடியும் என்கிற பல்வேறு கேள்விகள் எழுகிறது.

உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பொதுக்குழுவில் அங்கீகாரம் பெற வேண்டும் என்கிறார்கள். அங்கீகாரம் அளிக்கும் அதிகாரம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு இல்லை. ஒப்புதல் தான் அளிப்பார்கள். ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டபோது மாண்புமிகு அம்மா அவர்களை வாழ்த்தி பெருமை கொள்கிறது இந்த பொதுக்குழு என்றுதான் தீர்மானம் இருந்திருக்கிறது. ஆகையால் அங்கீகாரம் தேவையில்லை. கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்று அதில் இருவரும் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தி, தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டது. ஆகையால் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட பன்னீர்செல்வம், பழனிச்சாமி இருவரது பதவிகளும் தற்போது வரை நீடிக்கிறது. ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் பழனிச்சாமி தரப்பினர் எதுவும் செய்யமுடியாது.

அவைத்தலைவருக்கு பொதுக்குழுவை வழிநடத்துவதற்கு மட்டுமே அதிமுக சட்டதிட்டவிதிகள் அதிகாரம் வழங்கியுள்ளது. மற்றபடி வேறு எந்த அதிகாரமும் அவைத்தலைவருக்கு இல்லை என்பதும் தமிழ் மகன் உசேனுக்கும் தெரிந்திருக்கும். தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. நடைபெற்ற பொதுக்குழுவிற்கு பிறகு பன்னீர்செல்வம் சட்டரீதியாக தன்னை பாதுகாத்துக் கொண்டதாகவும், பழனிச்சாமிக்குத் தான் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button