தமிழகம்

கொரோனா காலத்திலும் மே மாத ஊதியம் இல்லை : முதல்வர் கருணைக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

மத்தியஅரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இலவச கட்டாய கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

இதற்காக பாடத்திட்டத்துடன் கல்விஇணைச்செயல்பாடுகளான உடற்கல்வி ஓவியம் மற்றும் தொழிற்கல்வி(தையல், இசை, கணினிஅறிவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல்திறன்கல்வி ) பாடங்களை போதிக்க பகுதிநேர ஆசிரியர்களை மாநில அரசுகள் நியமித்துகொள்ள நிதிஒதுக்கி ஒப்புதல் அளித்தது.

இதன்படி இத்திட்ட வேலையில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அரசு 2011 -& 12ம் கல்வியாண்டில் ஆண்டொன்றிற்கு 99 கோடியே 29 லட்சம் நிதிஒதுக்கி 16,549 பகுதிநேர ஆசிரியர்களை 5000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமித்தது.

இவர்களுக்கு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2014ம் ஆண்டு 2000 ரூபாய் முதல்முறையாக ஊதியம்உயர்த்தி 7000 ரூபாயாக வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பின்னர் முதல்வரான எடப்பாடி பழனிசாமி 2017ம் ஆண்டு 700 ரூபாய் ஊதியத்தை உயர்த்தி வழங்கினார். இதனால் சம்பளம் 7700 ரூபாய் ஆனது.

இன்னும் இந்த 7700 ரூபாய் தொகுப்பூதியதோடு விலைவாசி உயர்வை எதிர்கொள்ள முடியாமல் வறுமையில் தவிக்கின்றனர். இதோடு சம்பளம் அதிகரிக்க தமிழகஅரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆரம்பம் முதலே ஒவ்வொரு வருடமும் மே மாதம் சம்பளம் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் ஒவ்வொருவரும் 61000 ரூபாய் சம்பளத்தை இழந்துள்ளனர். 16549 பகுதிநேர ஆசிரியர்களில் கிட்டத்தட்ட 5000 காலி இடங்கள் ஏற்பட்டும், அரசாணைப்படி அந்த இடங்களில் கூடுதலாக யாரையும் பணியமர்த்தவும் இல்லை. அப்பணியிடங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியும் சம்பள உயர்விற்காக பகிர்ந்து அளிக்கப்படவில்லை. 7வது ஊதியகுழு 30 சதவீத உயர்வும் கிடைக்க செய்யவில்லை. அனைவருக்கும் கிடைக்கும் போனஸ் ஒருமுறைகூட வழங்கவில்லை. மகப்பேறு விடுப்பும் வழங்கவில்லை.
இதனால் அரசு பள்ளியில் வேலை கிடைத்ததில் மகிழ்ச்சி அடைய வேண்டிய பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளில் கவலை அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நம்மிடம் பேசுகையில், “கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அரசே பள்ளிகளை மூடி வைத்திருக்கிறது.

பொதுமுடக்கக் காலத்திற்கான ஊதியத்தைக் எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
ஆனால், மத்தியஅரசின் சமக்ர சிக்சா திட்டவேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்கள் விஷயத்தில் இந்த உத்தரவைத் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லை. பகுதி நேர ஆசிரியர்கள் மாதம் வெறும் 7,700 ரூபாயைத்தான் தொகுப்பூதியமாகப் பெறுகிறார்கள்.

இந்த நிலையில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் போதும்கூட மே மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை இன்னும் ஏற்கப்படவே இல்லை. இதுகுறித்து முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எங்களுக்கு பெரும் சோதனையாக இருக்கும் மே மாத ஊதியத்தை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றார்.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button