அரசியல்

வெளிமாநிலத்தினருக்கு போலிச்சான்றிதழ் வழங்கிய வருவாய்த்துறையினர் கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : வ.கௌதமன்

தமிழ்நாடு அரசு கல்லூரிகளுக்கு உரிய துணைப்பேராசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு அரசின் ஆசிரியர் தேர்வாணையம் (Teachers Recruitment Board) வழியாக தேர்ந்தெடுப்பது மரபாக உள்ளது. அவ்வகையில் 1997-98 ஆம் ஆண்டுக்குரிய துணைப்பேராசிரியர் தேர்வுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பல பேராசிரியர்கள் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு அமர்த்தப்பட்டார்கள் என்பதனை உடனடியாக தமிழ்நாடு அரசு விசாரித்து பணி நீக்கம் செய்வதோடு அவர்களை கைதும் செய்ய வேண்டும்.

இதுகுறித்து தமிழ் பேரரசு கட்சியின் தலைவர் கௌதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

குறிப்பாக கல்லூரிகளின் தமிழ்த்துறையில் பணியாற்றும் பல பேராசிரியர்கள் பிற மொழியாளர்கள் மட்டுமல்ல பிற மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், சிதம்பரம் முகவரியில் தங்கியிருப்பதுபோல் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தாரிடம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் பெற்று, தமிழக அரசையும், கல்லூரிக் கல்வித்துறையையும், தமிழக மாணவர்களையும் ஏமாற்றி வேலையில் சேர்ந்துள்ளனர் என்று ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் தமிழ்நாடு அரசும் உயர்கல்வி துறையும் இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

பிற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் என்றால் அவர்கள் பொதுப்போட்டியில் (OC) தகுதிபெற்று, தமிழக அரசு கல்லூரிகளில் பணியேற்கலாம். ஆனால் அவர்கள் தமிழகத்தில் பிறந்தவர்கள் போல மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (MBC) போலியாகச் சான்றிதழ் பெற்று, அதனைத் தமிழக அரசிடம் கொடுத்து, பணிபுரிந்துவருகின்றனர். இதனால் தமிழகத்தில் பிறந்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) மாணவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளனர். தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கியுள்ளனர்.

இவ்வாறு கடலூர், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்ததுபோல் போலியான சாதிச் சான்று, இருப்பிடச்சான்று பெற்று கடலூர் பெரியார் கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அண்ணா கல்லூரி, திண்டிவனம் அரசு கல்லூரி, சி.முட்லூர் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும் முதல்வர்களாகவும் வேலையில் சேர்ந்துள்ள பிற மாநிலத்துக்காரர்கள் மீதும் அவர்களுக்கு இலஞ்சம் பெற்றுக்கொண்டு போலியாக சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் வழங்கிய தமிழகத்துக் கிராம நிர்வாக அலுவலர்கள், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சமூகநீதி ஆர்வலர்கள், கல்வியாளர்கள் இப் பிரச்சனையில் தலையிட்டு, கல்வி மோசடிகளில் ஈடுபட்டுள்ள பிற மாநிலத்தவர்கள், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின்முன் கொண்டுவந்து நிறுத்தி, தண்டிக்கப்பட வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உண்மை நிலை தெரிந்தும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க தாமதிக்குமனால் தமிழ் மொழியின் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுக் கொண்ட கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள், ஆசிரியர்கள், பேராசிரியர் பெருமக்கள் மற்றும் தமிழ் இனத்தின் இளைய தலைமுறைகள் என அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை தமிழ்ப் பேரரசு கட்சி கையில் எடுக்கும் என்பதையும் உரிமையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button