அரசியல்

சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற எஸ்.வி.சேகரின் ஆசையை அரசு நிறைவேற்றும் … : அமைச்சர் ஜெயக்குமார்

சில நாட்களுக்கு முன்பு பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில், “அதிமுகவில் அண்ணாவின் படத்தையும், பெரியார் படத்தையும் நீக்கிவிட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைத்து அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று கட்சி பெயரை மாற்றி அரசியல் செய்தால் தமிழகத்தில் அதிமுகவிற்கு குறைந்தபட்சம் ஒரு வாய்ப்பாவது இருக்கும்” என்றபடி பேசியிருந்தார்.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், எஸ்.வி.சேகர் கூறியுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஜெயக்குமார், ‘’ மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் ஜெயலலிதா இவரை அடையாளம் காட்டினார். அந்தத் தொகுதியில் அ.தி.மு.க. கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினார், அண்ணா பெயரைச் சொல்லி அம்மாவால் எம்.எல்.ஏ. ஆனார். உண்மையிலேயே எஸ்.வி.சேகர் மானம், ரோஷம், சூடு உள்ளவராக இருந்தால், அந்த ஐந்து வருட சம்பளத்தைத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும். அ.தி.மு.க. கொடியைக் காட்டி ஓட்டு வாங்கினேன். இந்தச் சம்பளம் எனக்குத் தேவையில்லை என்று அரசிடம் திரும்பக் கொடுத்திட வேண்டும். இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருந்ததால் பென்சன் கொடுக்கப் படுகிறது. அதை அவர் வாங்குகிறார். இந்த பென்சன் வேண்டாம் என்று எழுதி கொடுத்திட வேண்டும். இந்த இரண்டு கேள்விக்கும் அவரை பதில் சொல்லச் சொல்லுங்கள்’’ எனக் கூறியிருந்தார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டிக்குப் பிறகு எஸ்.வி.சேகர் ஒரு வீடியோ பதிவு போட்டுள்ளார்.

அதில், நான் ஜெயலலிதா காலில் விழுந்தவன் அல்ல. அவர் சொந்த சகோதரனைப் போல என்னைப் பார்த்துக் கொண்டார். ஒருவேளை அவர் இந்தச் சம்பளத்தை வாங்காதப்பான்னு சொல்லியிருந்தால் நான் வாங்கியிருக்கப் போவதில்லை. அதை நீங்க எப்படிச் சொல்ல முடியும். அவுங்களுக்கு முன்பு நீங்க, நான் எல்லோரும் ஒரே மாதிரிதான். இப்ப எப்படி திடீர்ன்னு நீங்க ஒரு படி மேலே ஆயிட முடியும்.

மக்களின் கருதுக்களை உங்களிடம் சொல்வதற்கான ஒரு வாய்ப்பாக வீடியோவைப் பயன்படுத்திக் கொண்டேனே தவிர, நான் மூன்றாம் தர அரசியல் செய்பவன் அல்ல. அதனால் நீங்கள் தி.மு.க.வைவிட வித்தியாசமானவர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்றால், பா.ஜ.க. கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று இருந்தால் நான் சொன்ன விசயங்கள் ரைட்.

அதலாம் இல்லை. கூட்டணி இல்லை. ஒன்றும் இல்லை. நாங்கள் எங்கள் இஷ்டம்போல பண்ணுவோம் எனச் சொல்லுங்கள். தேர்தல் நேரத்தில் மக்கள் ஓட்டுப் போடுவார்கள். அவ்வளவுதான். நீங்கள் இவ்வளவு கொந்தளிக்க வேண்டியதில்லை.

நான் யாருக்குமே விஸ்வாசி கிடையாது. ஒரு தடவை நமது எம்ஜிஆரில் அம்மாவின் உண்மை விஸ்வாசி என போட்டதற்கு நான் பணம் தரமாட்டேன் என்று சொன்னேன். எழுதிக் கொடுக்காத வார்த்தையைப் போடக் கூடாது. அப்படியென்றால் நான் 30 ஆயிரம் பணம் கட்ட மாட்டேன் என்று சொன்னேன். இது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

நிறைய பேர் அம்மா இருக்கிற வரைக்கும் அம்மா முகத்த நிமிந்துக்கூட பார்த்தது கிடையாது. பாதங்களை மட்டுமே பார்த்து வணங்கி பலன்களை அனுபவித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களுக்கு இவ்வளவு கோபம் தேவையில்லை. நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லை.

எம்.எல்.ஏ. சம்பளம், ஓய்வூதியம் நான் திரும்பித் தர மாட்டேன். அது என் உழைப்புக்கு அரசு கொடுத்த கௌரவம். அ.தி.மு.க. கட்சியில் வவுச்சர் போட்டு காசு வாங்கின மாதிரி சொல்றீங்க. தேர்தல் நேரத்தில் எனக்கு கொடுத்த பணத்துக்கு வவுச்சர் போட்டு கொடுத்தவன் நான். நீங்க யாராவது ரெக்கமன்ட் பண்ணி எனக்கு சீட் கிடைச்சதா? பணமே கட்டாமல் எனக்கு எலெக்சன்ல சீட் கொடுத்தது ஜெயலலிதா. நீங்க நினைச்சா திடீர்ன்னு அவுங்கள தூக்கி சுமப்பீங்க. வேண்டாம் என்றால் தொப்புன்னு போட்டு, ஸ்டாலின் வழிதான் என் வழி என்று போனீங்கன்னா, எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா ஆரம்பத்தில் நீங்கள் செய்ததைத் பார்த்து தேர்தலில் 120 சீட்டுக்கு மேலே வரும் என்றார்கள். இப்ப என்ன கணிப்பு இருக்கிறது என்று நீங்கள்தான் பார்த்துக் கொள்ளணும். கணிப்பு மாறிக்கொண்டே இருக்கும். உங்கள் வெற்றி தோல்வி மக்கள் கையில் உள்ளது. 100 ஓட்டில் வெற்றி பெற்றவர்கள் இருக்கிறார்கள். 10 ஓட்டில் தோற்றவர்களும் இருக்கிறார்கள்.

ஒரு ஆன்மீக அரசியலாக, ஒரு கட்சியாக அ.தி.மு.க. இருந்தால், மாறினால் உங்களுக்கு நல்லது. கூட்டணியில் இருக்கிறோம் என்று சொன்னால் நமக்கு நல்லது. இல்ல இல்ல உங்கள சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்றால் பார்த்துக் கொள்ளலாம். எல்லாவற்றிக்கும் காலம் பதில் சொல்லும் 2021. என்ன இருந்தாலும் நீங்கள் என்னுடை அருமை நண்பர் ஜெயக்குமார். டென்ஷன் ஆகாதீங்க. இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கு அதிமுக அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்திருந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எஸ்.வி. சேகர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்று கூட தெரியாது, அவர் நினைத்ததையெல்லாம் பேசுவார் ஆனால் வழக்குகள் வந்தால் ஒளிந்து கொள்வார் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவித்த விவகாரத்தில் எம்.ஜி.ஆர். களங்கப்படுத்தப்பட்டதாக அதிமுக விமர்சிப்பது குறித்து வீடியோவில் பேசிய எஸ்.வி.சேகர், ‘காவியை களங்கம் என சொல்லும் தமிழக முதல்வர் களங்கமான தேசியக் கொடியை ஆகஸ்டு 15 அன்று ஏற்றப்போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா’ என்றும் பேசியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நுங்கம்பாக்கம் ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். முதலமைச்சருக்கு பதில் அளிக்கும் வகையில், சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் எஸ்.வி.சேகர் தேசியக் கொடியையும், முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார் என அந்தப் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் நடிகரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகருமான எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசியக் கொடியை அவமதித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது தேசிய கௌரவ பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ”தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் பற்றி அவதூறாகப் பேசியதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. எஸ்.வி.சேகர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சிறைக்குச் செல்ல வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை, அரசு அதை நிறைவேற்றும்” என்று கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button