அரசியல்

கடன் சுமையை வைத்துவிட்டு செல்லப்போகிறது அதிமுக அரசு – : ப.சிதம்பரம்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்வ பெருந்தகையை ஆதரித்து குன்றத்தூரில் பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழக மக்களின் மீது பெரும் கடன் சுமையை வைத்துவிட்டு செல்லப்போகிறது அதிமுக என்று கூறினார்.

இது குறித்து ப.சிதம்பரம் பேசுகையில் “கடந்த 5 ஆண்டுகளில் எதைச் செய்தோம் என சொல்ல மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு, கட்டமைப்பு வசதி மேம்பாட்டிற்கு, வளர்ச்சிக்கு என்ன செய்தார்கள். எந்த மலையை உடைத்து குவாரியாக மாற்றலாம் என சிந்தித்தனர் அதிமுகவினர். இந்த ஆட்சியில் விவசாயிகள் விரக்தி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் 4.85 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டு எடப்பாடி பழனிசாமி செல்லப்போகிறார். வருவாய் பற்றாக்குறை 65 ஆயிரம் கோடியை பழனிசாமி வைத்துவிட்டு செல்லப்போகிறார். கடந்த 3 மாதங்களில் முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய கற்களை எல்லாம் எடுத்தால் ஒரு கட்டிடமே கட்டிவிடலாம்.

அதிமுக அரசு தமிழ்நாட்டு மக்களின் மீது பெரும் கடன் சுமையை வைத்துவிட்டுச் செல்லப்போகிறது. விவசாயிகளின் கடன் ரத்தாகாது, எடப்பாடி பழனிசாமி கூறுவதை யாரும் நம்ப வேண்டாம். விவசாயிகளின் கடனை ரத்துசெய்ய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் கடிதம் வந்துள்ளதா?. கடனை ரத்து செய்ய வேண்டும் என்றால் வங்கிகளுக்கு 12,110 கோடி ரூபாயை சுளையாக எடுத்து வைக்க வேண்டும்.

இந்தி மொழி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினர் நினைக்கின்றனர். தமிழ் மொழிக்கு பகைவன் பாஜகவினர். இந்தியைத் திணிப்பார்கள், இந்தி ஆட்சி மொழியாக மாறினால் தமிழ் மெல்ல அழிந்துபோகும்.

சனாதன கொள்கைகளை மதவெறியை புகுத்த முயற்சிப்போர் பாஜகவினர். சனாதன தர்மத்தில் 30 சதவீதம் பேருக்கு இடமில்லை என்பதே பாஜகவின் கொள்கை. வட மாநிலங்கள் கலவர பூமியாக மாறியதற்கு பாஜகதான் காரணம். பெரியார், அண்ணா, காமராஜர் போன்றோர் 100 ஆண்டுகள் சனாதான தர்மத்துக்கு எதிராக போராடி விடுதலை பெற்றுத்தந்தனர். பாஜகவுக்கு விழும் வாக்கு ஒவ்வொன்றும் பெரியார், அண்ணா, காமராஜரை மறந்துவிட்டுப் போடும் வாக்குகளாகும். குடியுரிமை திருத்தசட்டம் நிறைவேறியதற்கு காரணம், அதிமுகவும், பாமகவும் ஆதரவாக வாக்களித்ததுதான்.

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைய தேவையான கொள்கைகளும், தலைமையும் உள்ள கட்சி திமுகதான். பாஜகவின் பல்லக்கை சுமந்த அதிமுகவை நிராகரிக்க வேண்டும். இலங்கை தமிழருக்காக, தமிழர்களே வாழாத நாடுகள் கூட ஐ.நா.வில் குரல் கொடுக்கின்றனர்.

நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button