Uncategorized

சென்னையை அச்சுறுத்திய அமோனியம் நைட்ரேட்

லெபனான் நாட்டு துறைமுகத்தில் 150க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியான வெடி விபத்துக்கு காரணமான வெடிக்கும் தன்மையுடைய 740 கிலோ அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் சென்னை மணலியில் உள்ள சத்வா என்ற கண்டெய்னர் யார்டில் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

லெபனான் நாட்டு துறைமுகத்தில் 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் என்ற வெடிக்கும் தன்மையுடைய வேதிபொருள் வெடித்ததால் மிகப்பெரிய பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

இதே போல வெடிக்கும் தன்மையுடைய அமோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கரூரை சேர்ந்த அம்மன் கெமிக்கல் என்ற நிறுவனம் கொரியாவில் இருந்து இறக்குமதி செய்தது. விவசாய பயன்பாட்டுக்கு என்று ஏமாற்றி சட்டவிரோதமாக வெடி பொருள் தயாரிப்புக்கு அது இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து 37 கண்டெய்னர்களில் துறைமுகம் வந்த 740 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட் கண்டெய்னர்களையும் பறிமுதல் செய்த சுங்க இலக்கா அதிகாரிகள் அதனை சென்னை மணலி புதுநகர் அருகே சடையங்குப்பத்தில் உள்ள சத்வா என்ற சுங்க கிட்டங்கியில் கொண்டு வைத்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அங்குள்ள 740 டன் அமோனியம் நைட்ரேட்டையும் பொது ஏலம் விட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சுங்கத்துறை அதிகாரிகளோ தங்களது மெத்தனத்தால் அந்த 37 கண்டெய்னர்களையும் அப்படியே வைத்து விட்டனர்.
கடந்த 5 வருடமாக அந்த கண்டெய்னர்கள் அப்புறப்படுத்தப்படாமல் ஒரே இடத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக பாதுக்காப்பின்றி இருக்கும் நிலையில் லெபனான் குண்டு வெடிப்புக்கு நீண்ட நாட்களாக அமோனியம் நைட்ரேட் ஒரே இடத்தில் வைக்கப்பட்டதே காரணம் என்று வெளியான தகவலால், இந்த கண்டெய்னர்கள் இருக்கும் இடம் குறித்து காவல்துறையினர் விசாரித்த போது சென்னையின் புற நகர் பகுதியில் குடியிருப்புகளே இல்லாத மணலி பகுதியில் உள்ள சத்வா என்ற சுங்க கிட்டங்கியில் பாதுகாப்பாக வைத்துள்ளதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

உடனடியாக காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் அந்த கிட்டங்கியை சென்று ஆய்வு செய்த போது அமோனியம் நைட்ரேட் அடங்கிய 37 கண்டெய்னர்களையும் ஏதோ உப்பு லோடு ஏற்றப்பட்ட கண்டெய்னர்களை போல மொட்டை வெயிலில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்திருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

நீதிமன்ற உத்தரவில் 740 டன் என்று குறிப்பிட்ட நிலையில் அங்குள்ள கிட்டங்கி அதிகாரிகளோ கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கண்டெய்னர்களுக்குள் தண்ணீர் புகுந்து 50 டன் அம்மோனியம் நைட்ரேட் கரைந்து சென்று விட்டதாகவும் 690 டன் மட்டுமே தற்போது இருப்பதாகவும் விளக்கம் அளித்தனர். இதையடுத்து தீயணைப்பு அதிகாரிகள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது.

ஏனெனில் அமோனியம் நைட்ரேட் மீது தண்ணீர் பட்டால் அது பாறை போல உருமாறி விடும் என்றும் அதன் மீது உராய்வு ஏற்பட்டால் கூட வெடிக்கும் ஆபத்து உள்ளது என்று தெரிவித்த தீயணைப்புதுறையினர், இப்படிப்பட்ட விபரீதம் உள்ளதால் 37 கண்டெய்னர்களையும் அங்கிருந்து உடனடியாக அகற்றும் போது கவனக்குறைவு ஏற்பட்டால் தீப்பெட்டியில் குச்சியை உரசுவது போலாகும் என்று எச்சரித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் அந்த கண்டெய்னர்கள் வைக்கப்பட்டுள்ள கிட்டங்கியில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் ஆயிரக்கணக்கான வீடுகளும், 500 மீட்டர் சுற்றளவில் மணலி பெட்ரோ கெமிக்கல் உள்ளிட்ட ஆலைகளும் உள்ளதால் சுங்கத்துறையினர் காட்டிய மெத்தனம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஆய்வுக்கு பின் அறிக்கை வெளியிட்டுள்ள சுங்கத்துறை இணை ஆணையர் சுமையா முரளி என்பவர், நகர் பகுதியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வீடுகளே இல்லை என்றும் தவறான அறிக்கை வெளியிட்டதால் கண்டனம் எழுந்துள்ளது.

உறங்கும் எரிமலையாக கண்டெய்னர்களுக்குள் இருக்கும் அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றாவிட்டால் அது அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட பகுதி மக்களுக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்று அங்கு குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து விரைவாக அந்த 37 கண்டய்னர்களையும் அங்கிருந்து அகற்ற வேண்டும்.. அதே நேரத்தில் இது போன்ற விபரீதங்களை தவிர்க்க குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்து விதியைமீறி அமைக்கப்பட்டுள்ள கண்டய்னர் யார்டுகளை அங்கிருந்து முழுவதுமாக காலி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

மூன்றாவது கட்டமாக அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருள் 15 கண்டெய்னர்களில் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டதன் மூலம், முழுமையாக அப்புறப்படுத்தப் பட்டுள்ளது.

சென்னை மணலி கிடங்கில் இருந்த 697 டன் அம்மோனியம் நைட்ரேட்டை, மின்னணு ஏலம் நடத்தி ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சுங்கத்துறை விநியோகித்தது. சால்வோ வெடிப்பொருள் மற்றும் கெமிக்கல்ஸ் எனும் பெயரில், ஐதராபாத் திரிமுல்கேரியில் செயல்படும் அந்த நிறுவனத்திற்கு இரண்டு கட்டங்களாக ஏற்கனவே டிரக்குகள் மூலம் 22 கண்டெய்னர்களில் 397 டன் அம்மோனியம் நைட்ரேட் கொண்டு செல்லப்பட்டது.
மீதமுள்ள 300 டன் அம்மோனியம் நைட்ரேட் 15 கண்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய அம்மோனியம் நைட்ரேட் முழுமையாக அகற்றப்பட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button