கொலை களமாகிறதா பல்லடம்..? – வருவாய் துறையினரை களம் இறக்க கோரிக்கை …
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், கோழிப்பண்ணை, நூற்பாலைகள் அதிக அளவில் இயங்கி வருகிறது. மேலும் இதனை நம்பி உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
இதனிடையே பல்லடம் திருப்பூர் எல்லை பகுதியாக கரைப்புதூர் ஊராட்சியில் லட்சக்கணக்கான பேர் குடியிருந்து வருகின்றனர். கரைப்புதூர், அருள்புரம், உப்பிலிபாளையம், குன்னங்கல்பாளையம், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறை, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் அதிக அளவு வெளிமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதிக அளவு வாடகை வீட்டில் குடியிருந்து வரும் இவர்களின் முகவரிக்கான அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தலையில் வெட்டு காயங்களுடன் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டு இது வரை போலீசாரால் அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் வடமாநில பெண் ஒருவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அருள்புரம் பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கொலை, அடிதடி என அதிக அளவில் நடைபெற்று பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியிருக்கும் அருள்புரம் பகுதியில் உடனடியாக புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வெளி மாநில தொழிலாளர்கள் குறித்து வருவாய் துறை மூலமாக கணக்கெடுத்து புதிதாக வந்து வேலைக்கு சேருபவர்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் அவரவர் மாநில ஆவணங்களை சமர்பித்து உண்மை தன்மை அறிந்து பின்னர் சான்றளித்த பிறகு நிறுவனங்களில் பணியமர்த்த ஆவண செய்யவேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
– நமது நிருபர்