என்ன நடக்கிறது திமுகவில்…
திமுக முக்கியத் தலைவர்கள் எல்லோரும் ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளும்போது வெற்றியை ஈட்டித் தரக்கூடிய செயல்வீரர் அழகிரி என்று தெரிந்திருந்தும் அண்ணனை அரவணைக்க தயங்குகிறாரா? ஸ்டாலின் திமுகவின் வளர்ச்சியில் ஸ்டாலின் ஆற்றிய பங்களிப்புகளை தெரிந்து வைத்திருந்தும் ஏன் ஸ்டாலின் கண்ணில் விழுந்த தூசியாகவே இருக்க விரும்புகிறார் அழகிரி! என்று பல கேள்விகள் அழகிரியைச் சுற்றி அணி வகுக்கின்றன.
திமுக தலைவர் கருணாநிதிக்கு அடுத்து அவரது குடும்பத்தில் இருந்து முதலில் அரசியலுக்கு வந்தவர் முரசொலி மாறன். பின்னாளில் வரப்போகும் அரசியல் வாரிசு விமர்சனங்களுக்கெல்லாம் அடித்தளமிட்ட காலம் அது.
1967 ல் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்த போது அண்ணா தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர்.
முதல்வர் பதவியை ஏற்க நேரிட்டதால் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டார் அண்ணா. பிறகு தென் சென்னை மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அண்ணாவின் இடத்திற்கு யாரை நிறுத்தப்போகிறது திமுக என்கிற கேள்வி எழுந்தபோது திமுகவின் உயிர்நாடி கோரிக்கையான திராவிட நாட்டின் அவசியத்தை வலியுறுத்தி “ஏன் வேண்டும் இன்ப திராவிடம்” என்கிற நூலை எழுதி மாநில சுயாட்சி முழக்கத்தை வலியுறுத்தி ‘மாநிய சுயாட்சி’ என்கிற கொள்கை விளக்கப் புத்தகத்தை எழுதி திமுகவின் அறிவு ஜீவிகளில் ஒருவராக விளங்கிய முரசொலி மாறனை தென் சென்னை திமுக வேட்பாளராக அறிவித்தார் அண்ணா. அந்தவகையில் திமுகவின் வாரிசு அரசியலுக்கு முதல்புள்ளியாக கருதப்படும் முரசொலிமாறன் அண்ணாவின் அனுமதியோடுதான் பதவிக்கு வந்தார் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
முரசொலி மாறனுக்கு அடுத்து கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் மு.க.முத்து. கருணாநிதிக்கும் அவரது முதல் மனைவி பத்மாவதிக்கும் மகனாகப் பிறந்தவர் மு.க.முத்து. தனது தந்தையின் பெயரான முத்துவேலுவைச் சுருக்கு முத்து என பெயர் வைத்து இருந்தார் கருணாநிதி. இவர்தான் கருணாநிதியின் முதல் மூத்த மகன். அரசியல் பக்கம் அதிகாரப்பூர்வமாக வந்திராத இந்த மு.க.முத்துவை மையமாக வைத்து திமுகவை வாரிசுப் புயல் தாக்கியது. அந்தப் புயலின் நீட்சியே எம்ஜிஆர் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். மு.க.முத்துவை அரசியலுக்கு கொண்டு வரப்பார்க்கிறார் கருணாநிதி. எம்.ஜி.ஆருக்கு போட்டியாக மு.க.முத்துவை திரைத்துறையில் நுழைத்து அதன்மூலம் எம்ஜிஆரை ஓரங்கட்டப் பார்க்கிறார் கருணாநிதி என்றெல்லாம் எழுபதுகளின் தொடக்கத்தில் ஏராளமான சர்ச்சைகள் வந்தன.
திரையுலகின் முடிசூடா மன்னனான எம்ஜிஆருக்கு முகமுத்துவின் திரைப்பட நுழைவு கொஞ்சம் பதற்றத்தைக் கொடுத்தது. அது ஆளுனரிடம் அவர் கொடுத்த புகார் பட்டியலில் தெரிந்தது. கருணாநிதியின் மகன் பெயரில் தொடங்கப்பட்ட மு.க.முத்து மன்றம் அமைச்சக அந்தஸ்து உள்ள பெரிய மனிதரான என்.வி.நடராஜனால் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார் எம்ஜிஆர். அதன்மூலம் மு.க.முத்துவின் சினிமா நுழைவும் அவருடைய ரசிகர் மன்றமும் எம்ஜிஆருக்குள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிந்தது. இதுபோன்ற சர்ச்சைக்குறிய சம்பவங்களின் அணி வகுப்பே திமுகவிற்குள் விரிசலை ஏற்படுத்தி எம்ஜிஆரை தனிக்கட்சி தொடங்க வைத்தது. அந்தவகையில் அரசியலுக்கே வராத மு.க.முத்து திமுகவின் திசை வெளிப்பாதையில் ஒரு திருப்புமுனைக்கு காரணமாகி இருந்தார். மு.க.முத்து ஒதுங்கியிருந்த போது திமுகவிற்குள் வாரிசு அரசியல் என்ற பேச்சே பெரிதாக எழவில்லை. அப்போது கருணாநிதி , தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்று ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை.
மூத்த மகனுக்கு தன் அரசியல் ஆசானும், திராவிட இயக்கத்தினரால் அஞ்சா நெஞ்சன் என்று கொண்டாடப்பட்டவருமான பட்டுக்கோட்டை அழகிரிசாமி என்ற பெயரை சுருக்கி அழகிரி என்று பெயர் வைத்தார் கருணாநிதி. அடுத்து பிறந்த ஆண்குழந்தைக்கு அய்யாத்துரை என்று பெயர் வைக்க விரும்பினார் கருணாநிதி. ஆனால் அந்த சமயத்தில் புரட்சியாளர் ஸ்டாலின் மரணமடைந்து இருந்ததால் அவருடைய நினைவாக ஸ்டாலின் என்று பெயர் வைத்தார் கருணாநிதி.
நான் வீரத்தோடு இருக்கும் போது பிறந்த குழந்தை அழகிரி என்றும், எனக்குள் விவேகமும் சேர்ந்து கொண்டபோது பிறந்த குழந்தை ஸ்டாலின் என்றும் மேடைகளில் பலமுறை சொல்லி இருக்கிறார் கருணாநிதி. இவர்கள் தவிர செல்வி, தமிழரசு என்ற இரண்டு பிள்ளைகள். கருணாநிதி ராசாத்தி தம்பதியின் மகள் கனிமொழி. மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய மூவரும் கருணாநிதி வீட்டில் வீசிய அரசியல் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தார்களே தவிர நேரடி அரசியலுக்கு வரவில்லை. எழுபதுகளின் மத்தியில் இந்திராகாந்தி எமர்ஜென்சியை அமல்படுத்தியபோது மிசா சட்டத்தின் கீழ் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அதன்மூலம் தீவிர அரசியலுக்கு வரவேண்டிய நிர்பந்தம் மு.க.ஸ்டாலினுக்கு உருவானது. ஆனால் அப்படிப்பட்ட நெருக்கடி ஏதும் அப்போது அழகிரிக்கு கிடையாது.
எழுபதுகளின் தொடக்கத்தில் திமுக இளைஞர் அணி உருவாக்கப்பட்டு அதை நிர்வகிக்கும் பொறுப்பை மு.க.ஸ்டாலின், திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, வாலாஜா அசேன் உள்ளிட்டோரிடம் ஒப்படைத்தது திமுக தலைமை. இன்னொருபக்கம் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மதுரைப்பதிப்பு தொடங்கப்பட்டது. அதை நிர்வகிக்கும் பொறுப்பை மு.க.அழகிரியிடம் ஒப்படைத்தார் கருணாநிதி. அதுநாள் வரை சென்னையில் இருந்த அழகிரி மதுரைக்கு குடும்பத்தோடு இடம் பெயர்ந்தார். அப்போது காந்தி என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார் அழகிரி. தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் சம்பந்தி என்று கருணாநிதி மேடையில் சொல்லிக் கொள்ள காரணம் அழகிரியின் மனைவி காந்தி. அழகிரி காந்தி திருமணத்திற்கு ஜெகஜீவன் ராம் உள்ளிட்ட பெருந்தலைவர்களெல்லாம் வந்திருந்தனர். மதுரைக்கு வந்த புதிதில் திமுகவின் முன்னணி தலைவர்களான பொன்.முத்துராமலிங்கம், காவேரி மணியம் போன்றோர் அழகிரியிடம் பழகத் தொடங்கினர்.
கட்சிக்காரர்களிடமும், பொதுமக்களிடமும் இயல்பாக பேசுவது ஸ்கூட்டரிலேயே பயணம் செய்வது, முரசொலி நிர்வாகத்தை கவனிப்பது என்று இயங்கிய அழகிரி நேரடி கட்சி அரசியலில் ஈடுபடவில்லை. அதற்கான வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது மதுரை திமுகவில் நிலவிய கோஷ்டி அரசியல். அப்போது மதுரை திமுகவில் பொன் முத்துராமலிங்கம், பிடிஆர் பழனிவேல்ராஜன் என இரண்டு பிரிவுகள் இருந்தன. ஆரம்பகாலம் முதலே அழகிரியிடம் பழகிவந்த பொன்முத்துராமலிங்கம் இப்போது அழகிரியிடம் நெருக்கமாகத் தொடங்கினார்.
பொதுக்கூட்டம் நடத்துவது, தேர்தல் பணிகள் அரசியல் காய் நகர்த்தல்கள் எல்லாம் அழகிரிக்கு அத்துப்படியாக தொடங்கின. அழகிரி பொன் முத்துராமலிங்கம் நெருக்கம் பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கு பிடிக்க வில்லை. ஆகவே அழகிரிக்கு பிடிஆர் பழனிவேல் ராஜனை பிடிக்கவில்லை. அது 1989 திமுக வேட்பாளர்கள் பட்டியலில் எதிரொலித்தது. ஆம் மதுரை மேற்குத் தொகுதியில் பொன் முத்துராமலிங்கம் போட்டியிட பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமில்லை. அதன் பின்னணியில் அழகிரி இருந்தார் என்பது அப்போது பரபரப்பாக பேசப்பட்ட சர்ச்சை. அதன்பிறகு திமுக ஆட்சி அமைந்ததும் அமைச்சரவையில் அழகிரியின் ஆதரவாளரான பொன் முத்துராமலிங்கத்திற்கு தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்பட்டது தான். அதன்பிறகு கட்சி மேலிடத்தில் காரியம் சாதிக்க அழகிரியின் ஆசி அவசியம் என்கிற எண்ணம் மதுரையைத் தாண்டி தென் மாவட்ட திமுக முழுவதும் பரவியது. அழகிரி நினைத்தால் எம்எல்ஏக்களையும், அமைச்சர்களையும் உருவாக்க முடியும் என்கிற தோற்றம் உருவானது. அது அழகிரியின் அரசியல் செல்வாக்கை உயர்த்தியது.
தென்மாவட்ட திமுகவின் மாவட்ட ஒன்றிய, நகர செயலாளர்கள் பலரும் அழகிரியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கினர். அழகிரியுடன் தொடர்பு வைத்திருப்பது திமுக தலைமையிடம் தொடர்பு வைத்திருப்பதற்கு சமம் என்றே கருதினர். இங்கே தென்மாவட்டம் என்பது நாற்பதுக்கும் அதிகமான சட்டமன்ற தொகுதிகளையும், பத்திற்கும் அதிகமான மக்களவை தொகுதிகளையும் உள்ளடக்கியது என்பது புரிந்தால் அழகிரியின் அரசியல் செல்வாக்கை உணர்ந்து கொள்ள முடியும்.
அழகிரியின் செல்வாக்கை மதுரை மாவட்ட திமுகவினர் உணர்ந்திருந்தாலும் திமுக தலைமை உணர்வதற்கான வாய்ப்பு வைகோ சர்ச்சையான போதுதான் உருவானது. ஆம் வைகோவின் ஈழப்பயணம் அதற்குப் பிறகான வைகோவின் செயல்பாடுகளும் திமுகவிற்குள் புகைச்சலை கிளப்பின. குறிப்பாக மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வைகோவிற்கான ஆதரவு களம் பெரிதாக இருந்தது. சரியாகச் சொன்னால் அழகிரிக்கு நெருக்கமானவரான பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்டோரே வைகோவின் பக்கம் இருந்தனர். வைகோவிற்காக பொன் முத்துராமலிங்கம் ஏற்பாடு செய்த பொதுக்கூட்டம் திமுகவிற்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பொன் முத்துராமலிங்கம் வீட்டுத் திருமணவிழாவில் கருணாநிதியும், ஸ்டாலினும் விமர்சிக்கப்பட்டனர். இப்படி திமுகவிற்குள் கிளம்பிய புயல் வைகோவின் நீக்கத்தில் வந்து முடிவடைந்தது. மதிமுக என்கிற புதிய கட்சி உருவானது.
மதுரை, நெல்லை, குமரி மாவட்ட திமுக செயலாளர்கள் பொன் முத்துராமலிங்கம், வி.ஏ,கே.இலக்குமணன், இரத்தினராஜ் உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் வைகோ பக்கம் சென்றனர்.
வைகோவின் விலகல் மதுரை மாவட்ட திமுகவை அசைத்துப் பார்த்தது. அப்போது திமுகவை கட்டிக்காக்கும் கடமை அழகிரியின் கைகளுக்குள் வந்தது. மதுரை மாவட்ட திமுகவில் மூத்த முன்னணித் தலைவர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசி அவர்களை திமுகவில் தக்கவைக்கும் முயற்சியில் அழகிரி ஈடுபட்டார். வைகோவின் வெளியேற்றத்தால் 1996 தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று பலரும் கணித்த நிலையில் அதிகபெரும்பான்மையுடன் அதிக இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது திமுக. குறிப்பாக மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட திமுக மிகப்பெரிய வெற்றியை பிடித்தது. அந்த வெற்றிக்கு அழகிரியின் பங்களிப்பு இருந்ததை அங்கீகரிக்கும் வகையில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த பலருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கினார் முதல்வர் கருணாநிதி. அதேபோல் அழகிரியின் அரசியல் எதிரிகளுள் ஒருவரான பிடிஆர் பழனிவேல்ராஜன் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. மாறாக தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் பொறுப்பு பிடிஆர் பழனிவேல்ராஜனுக்கு தரப்பட்டது. தந்தை கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனையன் அழகிரி மதுரை அரசியலின் மையப்புள்ளியாக இருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் அழகிரியின் பிறந்தநாள் விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அமைச்சர்கள் முன்னணி தலைவர்கள் என பலரும் அழகிரியின் வீடு தேடி வந்தார்கள்.
உள்ளாட்சி தேர்தலிலும் அழகிரியின் ஆதிக்கம் மிகுதியாக இருந்தது. அதேசமயம் அழகிரியின் ஆதரவாளர்கள் சிலர் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுவது சர்ச்சையை உருவாக்கியது. உச்சகட்டமாக ஒரு கொலை வழக்கில் மதுரை திமுக பிரமுகர் மிசாபாண்டியன் சம்பந்தப்படவே அவர் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்தது. மிசா பாண்டியன் என்பவர் அழகிரிக்கு நெருக்கமானவர். ஆம் மிசா பாண்டியன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்ததை அழகிரி விரும்பவில்லை. பகிரங்கமாகவே எதிர்குரல் எழுப்பினார் அழகிரி. மிசா பாண்டியன் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதிக்கும், அழகிரிக்கும் இடையே உருவான கருத்து வேறுபாடு ஸ்டாலின், அழகிரி இடையேயான மோதலாக வெடித்தது.
மதுரை மாவட்டத்தின் திமுகவினருக்குள் அழகிரி கோஷ்டி, ஸ்டாலின் கோஷ்டி என கோஷ்டி அரசியல் உருவானது. ஸ்டாலின் ஆதரவாளர்கள் அழகிரியை விமர்சிப்பதும் அதற்கான எதிர்வினையை அழகிரி ஆதரவாளர்கள் ஆற்றுவதும் தொடர்ந்து அரங்கேறியது.
தொடரும்..
- டூயட் பாபு