அரசியல்

கமலின் திமுக விமர்சனம் : முரசொலியில் பதிலடி!

சட்டப்பேரவையில் தான் சட்டையை கிழித்துக் கொள்ள மாட்டேன் என்றும், அப்படி கிழிந்தாலும் வேறு சட்டையை மாற்றிக் கொண்டு தான் வெளியே வருவேன் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசியிருந்தார். சென்னையில் நடைபெற்ற இளைஞர்களுக்கான நிகழ்ச்சியில் அவர் இதனை தெரிவித்தார்.
திமுக குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரை விமர்சித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கமலின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு புதுச்சேரியில் பதில் அளித்த மு.க.ஸ்டாலின், தான் அரசியல் மட்டுமே பேசுவதாக தெரிவித்தார். இந்நிலையில் திமுக மீதான கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு பதில் கூறும் விதமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது.
‘கமலின் அரசியல் அரைவேக்காட்டுத்தனம்’ என்ற தலைப்பில் அந்தக்கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், ‘’கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பதை போல கமல்ஹாசன் நிதானமின்றி பிதற்றுகிறார். கமல் பேசுவது என்ன? ஏன் இப்படி பேசுகிறார் என்று புரியாது. கேட்போரைத் தான் சட்டையை கிழித்துக்கொள்ள வைப்பாரே தவிர அவர் ஒருநாளும் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டார். கிராம சபைக் கூட்டத்தை ஸ்டாலின் காப்பியடித்ததாகக் கூறியதன் மூலம் கமல்ஹாசன் தனது அரசியல் கத்துக்குட்டித்தனத்தை வெளிச்சம் போட்டுகாட்டியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ‘’இந்த கிராமசபைக்கூட்டத்தை கருணாநிதி முதல்வராக இருந்தபோதே தனது அமைச்சரைவையில் உள்ள அமைச்சர்களைக் கொண்டு நடத்தியுள்ளார். கமல்ஹாசனுக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்லை; அந்தக்காலக்கட்டத்தில் அவர் ஏதாவது கதாநாயகியுடன் டூயட் பாடி, ஆடிக்கொண்டிருந்திருப்பார். திமுக வரலாற்றை கமல்ஹாசன் படித்தறிய வேண்டும். அரசியல் கட்சி துவங்கி எதனை நோக்கிச் செல்கிறோம், பின்னால் வருபவர்களை எங்கே அழைத்துச்செல்ல போகிறோம் என்று தெளிவற்றுத்திரியும் கமல்ஹாசன், மற்றவர்களை பார்த்து வெட்கமில்லையா எனக்கேட்பது கேலிக்கூத்து’’ என்றும் கடுமையான பதிலை முரசொலி நாளிதழ் தெரிவித்துள்ளது.
திமுகவை விமர்சித்தால், கமல்ஹாசனுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மேலும், திமுகவின் கிராம சபைக் கூட்டம் மற்றும் ஸ்டாலின் மீதான கமலின் விமர்சனம், அறியாமையின் வெளிப்பாடு என்றும் சாடியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button