உயிருக்கு ஆபத்தாகும் மீன்பண்ணைகள்…
பொள்ளாச்சி அருகே செடிமுத்தூர் என்ற ஊரில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட மீன்களை பண்ணைக்குட்டைகள் அமைத்து வளர்ப்பதாக செய்தி அறிந்து பொள்ளாச்சி தாசில்தாருக்கு நமது செய்தியாளர் தகவல் கொடுத்தார். இதனையடுத்து கோவை மாவட்ட சப்-கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் தாசில்தார்,வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் சோதனை மேற்கொண்டனர்.
விவசாய நிலத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஆப்பிரிக்க கேட்பிஸ் மீன்கள் வளர்க்கப்பட்டதை அறிந்தனர். கோழிக்கழிவுகள், அழுகிய நாய் போன்றவைதான் இந்த மீன்களுக்கு உணவாக வழங்கப்பட்டது தெரியவந்தது. இந்த வகை மீன்கள் ஒரு சில காலத்தில் அதிக எடை கொண்ட மீன்களாக வளரக்கூடியவை. இந்த மீன்கள் நீர்நிலைகளுக்கு சென்றால் அங்கு உள்ள அனைத்து உயிரினங்களையும் கொன்று திண்ணும் கொடூர குணம் கொண்டவை. மீன்கள் கிடைக்காவிட்டால் பாசி வகைகளை உணவாக உட்கொள்ளும். இதனால் மீன்உற்பத்தி பாதிக்கும் என்பதால் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வகை மீன்களை வளர்ப்பதற்கு தடை விதித்துள்ளது.
தடையைமீறி செடிமுத்தூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் பண்ணை அமைத்து கொடூரமான மீன்களை வளர்த்து வந்த உரிமையாளரிடம் மீன் பண்ணையை உடனடியாக அழிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட மீன்களை வளர்ப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மீன் வளர்ப்பு குளங்கள் மற்றும மீன்கள் முற்றிலும் அகற்றப்படும் என்றும் சப்கலெக்டர் வைத்தியநாதன் எச்சரித்தார். மீன்பண்ணைகளில் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்ட கட்லா, சாதாக்கெண்டை, புல் கெண்டை, வெள்ளிக் கெண்டை போன்ற மீன்களை வளர்த்து பயனடையலாம்.
தமிழகத்தைப் பொருத்தவரை இந்த வகை மீன்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து ஒரு சில சமூக விரோதிகள் மூலம் இங்குள்ள விவசாயிகளைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி இதுபோன்ற கொடிய மீன்களை கொடுத்து வளர்த்து கொடுக்கும்படி அறிவுரையை வழங்கியதோடு இதனால் அதிக லாபம் பெறலாம் என ஆசையை தூண்டிவிட்டு இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த மீன்கள் குறைந்த விலையில் அதாவது 80 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீனின் சுவை ஆட்டு இறைச்சியின் சுவையைப் போல் இருப்பதால் இந்த வகை மீன்களை மக்கள் அதிகம் வாங்கி உட்கொள்கின்றனர். மேலும் ஹோட்டல்களில் ஃபிங்கர்ஃபிஷ் கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வகை மீன்களைத்தான் பொறித்துக் கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்த வகை மீன்களை உட்கொள்ளும் சிறுவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாகவும், பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் இந்த மீனை உட்கொள்ளும்போது உடல் உபாதைகள் மட்டுமல்லாது நுரையீரல் பகுதியில் நோய்த் தொற்று ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய மீன்களின் உண்மைத் தன்மையை அறிந்து உடல்நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
இதுபோன்ற மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட மீன்களை பண்ணைகள் அமைத்து கோவை மாவட்டத்தில் ஏராளமான இடங்களில் வளர்த்து வருவதாக தெரிகிறது. சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட பெரிதும் மக்களுக்கு உயிருக்கு ஆபத்தான மீன் பண்ணைகள் அனைத்தையும் அழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
- சாகுல்ஹமீது