அரசியல்தமிழகம்

தொகுதிப் பொறுப்பாளர்களை ஏன் நீக்கினார் ஸ்டாலின்?

நாடாளுமன்றத் தொகுதிகளுக்காக நியமிக்கப்பட்ட 80 பொறுப்பாளர்களையும் பதவியிலிருந்து நீக்கிவிட்டார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ‘இனி மாவட்டச் செயலாளர்களே தொகுதி நிலவரங்களை கவனிக்கட்டும்’ என ஆத்திரத்தையும் வெளிக்காட்டியிருக்கிறார். ‘இதன் பின்னணியில் பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் இருக்கின்றன’ என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.
‘தமிழ்நாடு – புதுவை மாநில நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு கழக தேர்தல் பொறுப்பாளர்கள் அறிவிப்பு – மாவட்ட கழகச் செயலாளர்களோடு இணைந்து பணியாற்ற தலைமைக் கழகம் வலியுறுத்தல்’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது அண்ணா அறிவாலயம். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் பிளஸ் புதுவை மாநிலம் என 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தலா 2 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் முக்கியப் பணியாக சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருந்தார் ஸ்டாலின். அதன்படி, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பூத் கமிட்டி நிலவரங்களை ஆராய்வது, தொகுதிப் பிரச்னைகளை அறிவது, கட்சியின் கிளைக் கழகத்தை வலுப்படுத்துவது போன்றவற்றைச் சுட்டிக் காட்டியிருந்தார்.
அதன்படி, தொகுதிப் பொறுப்பாளர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று பூத் கமிட்டிப் பணிகளை ஆராய்ந்து தலைமைக்கு அறிக்கை கொடுத்தனர். அப்படி அளிக்கப்பட்ட அறிக்கையின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

‘தொகுதிகளின் உண்மை நிலவரத்தை ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவில்லை. பல வாக்குச்சாவடிகளில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை எல்லாம் முகவர்களாக நியமித்துள்ளனர். பல இடங்களில் போலியாகவும் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைமையைக் குளிர்விப்பதற்காக பொய்யான அறிக்கையைக் கொடுத்துள்ளனர்’ என்றெல்லாம் அறிவாலய நிர்வாகிகள் ஆதங்கப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் மௌனமாக கவனித்து வந்தார் ஸ்டாலின். இந்நிலையில், நடந்த தி.மு.க மா.செ-க்கள் கூட்டத்தில், தொகுதிப் பொறுப்பாளர்கள் என்ற ஒன்றைக் கலைப்பதாக அறிவித்துவிட்டார் ஸ்டாலின். இந்த அறிவிப்பின் பின்னணியில், ‘ஸ்டாலின் கோபப்படும் அளவுக்கு சில விஷயங்கள் நடந்தன’ என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.
“தொகுதிகளிலிருந்து வந்த அறிக்கைகளின் உண்மைத்தன்மை மீது தலைமைக்குச் சில சந்தேகங்கள் இருந்தன. தொகுதிப் பொறுப்பாளர்களும் தலைமை கொடுத்த வேலையைச் சரியாகச் செய்யவில்லை. விழுப்புரம், சிதம்பரம், நீலகிரி, திருநெல்வேலி உட்பட பல தொகுதிகளிலிருந்து ஏராளமான புகார்கள் வந்தன. அதிலும், விழுப்புரம் தொகுதிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவருக்கும் பொன்முடிக்கும் இடையில் நடந்த மோதல்தான், பொறுப்பாளர்கள் குழு கலைப்பு என்ற முடிவை நோக்கிச் சென்றது”; என விவரித்த தி.மு.க நிர்வாகிகள் சிலர், “விழுப்புரம் தொகுதியின் நிலவரம் குறித்து அந்தத் தொகுதி பொறுப்பாளர் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். இதை பொன்முடி விரும்பவில்லை. தொகுதிப் பிரச்னைகளைக் குறிப்பிட்டு, ‘20 வருடமாக இந்தத் தொகுதியில் கழகம் தோற்கிறது என்றால் இவர்தான் காரணம்’ என ஸ்டாலினிடம் கூறிவிட்டார் தொகுதிப் பொறுப்பாளர். இதனால் ஆத்திரமடைந்த பொன்முடி, நீ யார் என்னைப் பற்றிச் சொல்வதற்கு.. நீ ஒரு குடிகாரன்’ எனக் கூறிவிட்டு, கடுமையான வார்த்தைகளை பிரயோகம் செய்திருக்கிறார். இந்த விவகாரம், சாதிரீதியாகவும் உருமாறிவிட்டது.அதே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பராஜுவும் தொகுதிப் பொறுப்பாளருடன் இணைந்து கொண்டார் என்பதுதான் பொன்முடி தரப்பினர் வைத்த குற்றச்சாட்டு. இதைத் தொடர்ந்து ஸ்டாலினிடம் நேரில் புகார் கூறியிருக்கிறார் பொன்முடி. அப்போது,சாதிரீதியாகத் திசைதிருப்புகிறார். தண்ணி அடித்துவிட்டு வந்து, பெண்களைக் கேட்கிறார்’ என்றெல்லாம் தொகுதிப் பொறுப்பாளர் ஒருவர் மீது புகார் கூறியிருக்கிறார். இதையடுத்து, தொகுதிப் பொறுப்பாளரை அழைத்து ஸ்டாலின் விசாரணை செய்தார். அப்போது, தொகுதி தோற்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வியைக் கேட்டதால் இப்படியெல்லாம் அவதூறு பரப்புகிறார் பொன்முடி. அவரோடு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ எனத் தெளிவுபடுத்திவிட்டார். இருப்பினும்,இதெல்லாம் சரிப்பட்டு வராது. தொகுதிப் பொறுப்பாளர்களை நீக்குங்கள்’ என விடாப்பிடியாகக் கூறியிருக்கிறார்”; என்றவர்கள்,
`விழுப்புரத்தில் மட்டுமல்லாமல், பல தொகுதிகளிலும் இதே பிரச்னைதான். சிதம்பரம் தொகுதிக்கு வழக்கறிஞர் நீலகண்டனைப் பொறுப்பாளராக நியமித்தார் ஸ்டாலின். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு பயந்து அந்தப் பக்கமே நீலகண்டன் தலைவைத்துப் படுக்கவில்லை.எங்கே மாவட்டப் பொறுப்பாளர்?’ எனக் கட்சிக்காரர்களே தேடும் நிலை ஏற்பட்டது. திருநெல்வேலி தொகுதிக்குக் குத்தாலம் அன்பழகனை நியமித்திருந்தனர். அவருக்கு சரியாக அறை வசதிகூட செய்து தரவில்லை எனக் கூறி, ஆய்வுக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டார். நீலகிரி தொகுதிக்கு சரவணனை நியமித்திருந்தனர். அவர், ஆ.ராசாவுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் நீக்குமாறு பரிந்துரை செய்திருக்கிறார். இதை ஸ்டாலின் ரசிக்கவில்லை.
தொகுதிப் பொறுப்பாளர்களை ஸ்டாலின் நியமித்தபோது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தவர் தென்சென்னை மா.செ அன்பழகன். ‘நாங்கள் இருக்கும்போது புதிதாக இவர்கள் எதற்கு?’ எனக் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தைத் தலைமைக் கழகம் உணர்ந்துவிட்டது. பல தொகுதிகளில் பணம் வாங்கிக் கொண்டுதான் பொறுப்பாளர்கள் சிலர் வேலை பார்க்கிறார்கள் என்ற மனநிலைக்கு ஸ்டாலின் வந்துவிட்டார். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து தொகுதிப் பொறுப்பாளர்களை நீக்கும்படி செய்துவிட்டது. ஒன் மேன் ஆபரேஷன் என்ற பெயரில் கட்சி சீரமைப்புக்காக உருவாக்கப்பட்ட ‘தொகுதிப் பொறுப்பாளர்கள்’ என்ற திட்டமும் தோல்வியில் முடிந்துவிட்டது”; என்கின்றனர் நிதானமாக.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button