சிறப்பு டிஜிபி பாலியல் சீண்டல்… : புகார் அளித்த பெண் எஸ்.பி.,
தமிழக காவல்துறையில் பெண் எஸ்.பி ஒருவர் தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மீது கொடுத்த பாலியல் சீண்டல் புகாரால் தமிழக காவல்துறையே பரபரப்பானது. சமூக வலைதளங்களிலும் இந்த விஷயம் பரபரப்பாக வைரலானது. உடனடியாக இந்த புகாரை விசாரணை செய்ய 6பேர் கொண்ட விசாகா குழுவை அமைத்தது பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. அதோடு ராஜேஸ்தாஸின் சிறப்பு டிஜிபி பதவியையும் பறித்து அவரை கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைத்து உத்தரவிட்டார் உள்துறைச் செயலாளர்.
ராஜேஸ்தாஸ் மீது ஏற்கனவே சில சர்ச்சைகள் நிலுவையில் இருந்த நிலையில் தான் கடந்த அக்டோபர் மாதம் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அதேபதவியில் திரிபாதி இருக்கும் போது எதற்காக சிறப்பு டிஜிபி பதவி என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் முதல்வர் பழனிச்சாமியின் செல்வாக்கு ராஜேஸ்தாசுக்கு இருந்ததால் அவர் அந்தப் பதவியில் நீடித்தார்.
இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்திற்காக டெல்டா மாவட்டத்தில் இருந்து வடமாவட்டங்களுக்கு சென்றார். முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்காக ராஜேஸ்தாஸ் சாலை மார்க்கமாக விழுப்புரம் நோக்கி பயணமானார். அப்போது உயரதிகாரி தங்கள் மாவட்டத்திற்கு வரும்போது மாவட்ட எஸ்பிக்கள் அதிகாரிகளுடன் வரவேற்பு கொடுப்பது வழக்கம். அதேபோல் தான் பெண் எஸ்பி ஒருவரும் மரியாதை செலுத்துவதற்காக சாலையில் காத்திருந்திருக்கிறார்.
பெண் எஸ்பியை பார்த்ததும் என் காரில் வாம்மா உன்னிடம் பேச வேண்டும் என்று காரில் ஏற்றி பயணித்திருக்கிறார். அருகில் அமர்ந்த பெண் எஸ்பியிடம் பாலியல் ரீதியாக பேசி சீண்டியிருக்கிறார். ராஜேஸ்தாசின் பாலியல் சீண்டல்களை தடுத்ததோடு அவரிடம் இருந்து தப்பிக்க போராடியிருக்கிறார். அதற்குள் உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடி வந்துவிட்டது டிஜிபியின் கார். அங்கு வடக்கு மண்டல ஐஜி, விழுப்புரம் டிஐஜி, கள்ளக்குறிச்சி எஸ்பி ஆகியோர் நின்றிருக்கிறார்கள். கார் நின்றதும் கதவைத் திறந்து பதற்றத்துடன் இறங்கி சக அதிகாரிகளுக்கு பின்னால் நின்றிருக்கிறார் அந்த பெண் எஸ்.பி.
இந்தத் தகவலை வடமாநிலத்தில் பணிபுரியும் தனது ஐஏஎஸ் கணவரிடம் சொல்லி அழுதிருக்கிறார். உடனே அவரது கணவர் மத்திய உள்துறை அதிகாரியிடம் புகார் கொடுத்திருக்கிறார். பெண் எஸ்பி தமிழக டிஜிபி, உள்துறைச் செயலாளர் ஆகியோரிடம் நேரில் புகார் கொடுக்க சென்னைக்கு செல்லும்போது செங்கல்பட்டு எஸ்பி கண்ணனை வைத்து பரனூர் சுங்கச் சாவடியில் வைத்து தடுத்து நிறுத்தும்படி கூறியிருக்கிறார் ராஜேஸ்தாஸ். கண்ணனும் பெண் எஸ்பியை தடுத்து நிறுத்தி நான் சொல்லும்வரை இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்று மிரட்டியிருக்கிறார். தொடர்ந்து பெண் எஸ்பியை வற்புறுத்தி ராஜேஸ்தாஸிடம் போனிலும் பேச வைத்திருக்கிறார். கண்ணனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முழுவதையும் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து ஐபிஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ்அப் குழுவில் அனுப்பியுள்ளார்.
புகார் கொடுத்து இரண்டு நாட்களாகியும் ராஜேஸ்தாஸ் மீது எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. பெண் எஸ்பி கொடுத்த புகாரின் நகலை எதிர்கட்சி பிரமுகர் கைப்பற்றிவிட்டதாக தகவல் ஆளும் தரப்புக்கு தெரிய வந்ததும்தான் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக தெரிய வருகிறது. இந்த நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரை விசாரணை செய்வதற்காக இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளார் தமிழக டிஜிபி திரிபாதி. மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை புகார் கொடுக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் உள்பட ராஜேஸ்தாஸ்க்கு ஆதரவாக செயல்பட்ட மற்ற அதிகாரிகளை விசாரணை செய்ய சிபிசிஐடியினர் முடிவு செய்துள்ளனர். இந்தப் புகாரில் டிஜிபி ராஜேஸ்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக எதற்கெடுத்தாலும் அம்மாவின் அரசு என்று சொல்லும் பழனிச்சாமி தலைமையில் இருக்கும் இந்த ஆட்சியில் தான் பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம் நடந்தது ஜெயலலிதாவின் பிறந்த நாளை பெண்கள் பாதுகாப்பு தினம் என்று கூறும் முதல்வர் பழனிச்சாமியின் அரசில் ஒரு பெண் காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம் பாதுகாப்பான மாநிலம் என்று மத்திய அரசு பாராட்டுகிறது என்று வெட்கமில்லாமல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
– சூரியன்