அரசு வழங்கும் இலவசங்களை விற்பனை செய்யும் ஆவியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்
அரசுப் பள்ளிகள் அனைத்தும் தனியார் பள்ளிக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் என்றும் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகள் இயங்கி வருவதாக தொலைக்காட்சிகளில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபகாலமாக முழங்கி வருகிறார். ஆனால் அரசுப் பள்ளியின் அவலம் என்ற தலைப்பில் ஆவியூர் அரசுப் பள்ளியைப் பற்றி போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.
இதுகுறித்து ஆவியூர் அரசுப் பள்ளியில் தங்களது குழந்தைகளுக்கு நேர்ந்த அவலங்களைப் பற்றி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் நம்மிடம் கூறுகையில்,
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 387 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. கழிப்பறை வசதி, குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்களும், மாணவிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். பள்ளியின் வகுப்பறைகளை முறையாக பராமரிப்பது கிடையாது. ஆனால் அரசுப் பள்ளியில் கல்வி கட்டணம் என்ற பெயரில் மாபெரும் வசூல் வேட்டையில் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்கள்.
2019 ஆம் ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கையின் போது ஆறாம் வகுப்பிற்கு ரூபாய் 700 , ஏழு மற்றும் எட்டாம் வகுப்பிற்கு ரூ 400, ஒன்பதாம் வகுப்பிற்கு ரூபாய் 450, பத்தாம் வகுப்பிற்கு ரூபாய் 500 என்றும், பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரூபாய் 600, 800 என நிர்ணயித்து தனியார் பள்ளிகளைப் போல் வசூல் செய்து கல்விக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த 2016 – 2017 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற வகுப்பு மாணவர்களிடம் இதே தொகையை வசூல் செய்தார்கள்.
தமிழகம் முழுவதும் இயங்கும அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இலவச பாடபுத்தகங்களையும் வழங்குகிறது. அரசு இலவசமாக வழங்கும் பாட புத்தகங்களுக்கு தலா 100 ரூபாய் ஒவ்வொரு மாணவ, மாணவிகளிடமும் கட்டாய வசூல் செய்கிறார்கள். இதேபோல் அரசு இலவசமாக வழங்கிய, மடிக்கணிணியை 96 மாணவ, மாணவிகளிடம் தலா 100 ரூபாய் என்று நிர்ணயித்து 9600 ரூபாய் கட்டாய வசூல் செய்தார் தலைமை ஆசிரியர். இந்தப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு முடித்து வெளியே செல்லும் மாணவ, மாணவிகள் தங்களது ( TC ) மாற்றுச்சான்றிதழை பெற 120 ரூபாய் வசூல் செய்தார்கள்.
இந்நிலையில் அரசுப் பள்ளியில் நடைபெறும் கட்டணக் கொள்ளை பற்றி கேள்விப்பட்ட இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விசாரித்த போது, நாங்கள் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் பேசிவிட்டுத்தான் வசூல் செய்கிறோம். இதைப்பற்றி கேள்வி கேட்க நீங்கள் யார்? என்று திமிராக பேசினாராம். அதனால் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இதுபற்றி கடந்த 10 ந்தேதி புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் 14 ஆம் தேதி மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் புகார் மனு கொடுத்திருக்கிறார்கள்.
இதுவரை யாரும் இதுசம்பந்தமாக விசாரணை கூட நடத்தாததால் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் புகார் கொடுத்து இருக்கிறார்கள். இதனை அறிந்த ஆசிரியர்கள் புகார் கொடுத்தவர்களை அடியாட்களை வைத்து மிரட்டியிருக்கிறார்கள். மாணவர்களிடம் தாங்கள் வசூல் செய்த பணத்திற்கு தற்காலிக ரசீதையும் தற்போது வழங்குகிறார்கள். அப்படி வழங்கும் தற்காலிக ரசீதில் அரசு முத்திரை எதுவும் இல்லை. காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரை ஒன்றுமில்லாமல் செய்வதற்காக இவர்களால் கையால் எழுதி கொடுக்கும் ரசீதை புகார் கொடுத்தவர்கள் ஏற்காததால் பிரச்சனை பெரிதானதாக கூறுகிறார்கள்.
இந்நிலையில் வாரத்தின் முதல்நாளில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களின் அடாவடித்தனத்தைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மாணவ, மாணவிகளை சமாதானம் செய்து வகுப்பறைக்கு அழைத்துச் செல்லாமல் மாணவ, மாணவிகள் மீது காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்கள். ஆவியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரும் உடனே பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியருக்கு ஆதரவாக செயல்பட்டு ஒரு மாணவியை கடுமையாக திட்டி மிரட்டியிருக்கிறார். இதனால் கொந்தளித்த மாணவ, மாணவிகளும் ஊர் பொதுமக்களும் இன்ஸ்பெக்டரின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
ஏற்கனவே இது குறித்து நமது செய்தியாளர்கள் மாவட்டக் கல்வி அதிகாரியிடம் தகவல் தெரிவித்திருந்த காரணத்தால் அவரும் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். பிறகு தாசில்தாரும் அங்கு வந்துவிட்ட காரணத்தால் அனைவரும் கூடிப்பேசி சமாதானம் செய்து பிரச்சனையை முடித்து வைத்துள்ளனர். பிறகு தலைமை ஆசிரியரிடம் நடந்த விசாரணையில் அவர் மீது மேலே கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் ஒப்புக் கொண்டு மாணவ, மாணவிகளிடம் வசூல் செய்த பணம் முழுவதையும் ஒருவாரத்திற்குள் திருப்பி கொடுத்து விடுவதாக அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மத்தியில் தலைமை ஆசிரியை மன்னிப்பு கேட்டிருக்கிறார். தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் அவர் செய்த தவறு சரியாகிவிடுமா? தலைமை ஆசிரியை மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
ஏற்கனவே அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மெத்தனப் போக்கால் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்புவதையும் பெற்றோர்கள் விரும்புவதில்லை. இதனால் பெரும்பாலான அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலையில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களை காட்டிலும் அதிகமாக சம்பளம் வாங்கிக் கொண்டு வேலையும் செய்யாமல் சம்பளம் போதாது என்று அடிக்கடி போராட்டம் நடத்துவதால் பொதுமக்கள் மத்தியில் இவர்களுக்கு கெட்ட பெயர் இருக்கிறது.
இவர்களைப் போன்ற ஒரு சில அரசுப்பள்ளி ஆசிரியர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டு மொத்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயரை உருவாக்குகிறது.
தமிழக அரசும் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த, மாணவ மாணவிகளுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் இலவசமாக வழங்கி மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், அதிகாரிகளும் பாடுபடுகிறார்கள். ஆனால் ஆவியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாதிரி ஆட்கள் இருக்கும் வரை அரசின் நோக்கம் நிறைவேறுவது கடினம்தான்.
ஆவியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் முறைகேடுகளை விசாரித்து தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவார்களா? சம்பந்தப்பட்ட அமைச்சரும், அதிகாரிகளும்..
நடவடிக்கை எடுப்பார்களா என்ற நம்பிக்கையோடு நாமும் காத்திருப்போம்.
- ஏ.கே.ஆர்