கருவறையும்-வகுப்பறையும் ஆன்லைனில் நடிகர் தாமு .

நாடு முழுவதும் 74 வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக வழக்கம் போல் இல்லாமல் இந்த ஆண்டு சமூக இடைவெளியை பின்பற்றி எளிமையான முறையில் சுதந்திர தின விழாவினை கொண்டாட மத்திய மாநில அரசுகள் முடிவெடுத்துள்ளன .
தமிழகத்தில் ஆண்டு தோறும் தமிழ்நாடு முதலமைச்சர் கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றுவார்.
இந்நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் யாரும் சுதந்திர தின விழாவில் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் சுதந்திரப் போராட்ட தியாகிகளை கொளரவிக்கும் வகையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று பொன்னாடை அணிவித்து அவர்களை கொளரவப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் அறிவுறுத்தலின் படி பொது சுகாதார விதிமுறைகளை கடைபிடித்து பரமக்குடியில் இயங்கிவரும் வ.உ.சி. மேல்நிலைப்பள்ளி சுதந்திர தின விழாவினை கொண்டாட இருக்கிறது.
அனைத்து வெள்ளாளர் சபையினரால் புதிய தொழில்நுட்பத்துடன் தரமான கல்வியை கற்பித்து வருகிறது வ.உ.சி.மேல்நிலைப்பள்ளி. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு

அனைத்து மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தில் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்திவருகிறார்கள்.
இந்த ஆண்டு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக கருவறையும்-வகுப்பறையும் என்ற தலைப்பில் திரைப்பட நடிகரும் ,முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சீடருமான நடிகர் தாமு ஆன்லைனில் சிறப்புரையாற்றுகிறார்.
இந்த சிறப்பு மிக்க கருத்தரங்கில் மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் ஆன்லைனில் மெகா டிஜிட்டல் திரையை அமைத்துள்ளது இந்த வ.உ.சி. பள்ளி நிர்வாகம்.