இராமேஸ்வரம் திருக்கோவிலின் தலைகீழான தலவரலாறு
இந்தியாவின் 12 ஜோதி லிங்க தலங்களின் ஒன்றாக திகழும் தென்னகத்தின் காசி என்ற பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலின் தலைகீழான வரலாறு.
இராமேஸ்வரம் புண்ணியஸ்தலம் பித்ரு கர்மாக்கள் செய்து வருவதற்கும் பூர்வ புண்ணிய பாவங்களை போக்குவதற்கும் தோஷப்பரிகாரங்கள் செய்யவும் புகழ் பெற்ற தலம். இங்கு மூர்த்தி, தீர்த்தம், தலம் மூன்றுமே பிரசித்தி பெற்றது. ஆனால் தற்பொழுது மிகவும் அருவருக்கத்தக்க செயல்களால் பக்தர்களும், யாத்திரைவாசிகளும் நிராகரிக்கப்பட்டு வருவது வேதனையளிக்கின்றது.
சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய வழி முறைகள் என்னவென்றால், தங்கள் பாவங்களை போக்க தோஷ நிவர்த்திகள் செய்து அக்னி தீர்த்தக் கடலில் புண்ணிய நீராடவேண்டுமானால், அதாவது இராமேஸ்வரம் நகரின் தங்கும் விடுதிகள் மற்றும் ஊரின் பிரதான கழிவுநீர் கலக்கும் சாக்கடை நீராய் மாறிப்போன கடலில்தான் நீராட வேண்டும். பின்னர் அடுத்த கட்டமாக திருக்கோவிலின் உள்ளே அமைந்துள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட நபர் ஒன்றுக்கு ரூ.25/& கட்டணமாக பெறப்பட்டு முதல் தீர்த்தமான மகாலெட்சுமி தீர்த்தம் ஆட மகிழ்ச்சியுடன் ஆரம்பித்து 22வது தீர்த்தம் கோடி தீர்த்தம் ஆடி முடிக்கையில் சிறிது மனஉளைச்சலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.அதன்பின்பு திருக்கோவிலின் உள்ளே அமைந்திருக்கும் உடை மாற்றும் அறை எச்சில், சிறுநீர் கழிக்கப்பட்டு மிகவும் அசுத்தமாகவும் துர்நாற்றத்துடனும் பக்தர்களை வரவேற்கிறது.
சரி என்ன செய்வது என்று தரிசனம் செய்வதற்கு சென்றால் கொடி மரம் முன்பு பணம் கொடுத்தால் யானையின் தும்பிக்கை ஆசிர்வாதம் இல்லை என்றால் யானைப்பாகனின் வார்த்தைகள் தான் ஆசிர்வாதம்.
இங்கு சாமி தரிசனம் செய்ய இரண்டு வழிமுறைகள் உள்ளது. ஒன்று பொது தரிசனம் மற்றொன்று சிறப்பு தரிசனம். அதாவது பொது தரிசனம் இலவசமாகவும், சிறப்பு தரிசனம் நபர் ஒன்றுக்கு ரூ.50/& வசூலிக்கப்படுகிறது. சரி சாமியையாவது நிம்மதியாக தரிசித்து செல்வோம் என்று நினைத்து ரூபாய் 50/& சிறப்பு தரிசனம் டிக்கெட் எடுத்து வரிசையில் நின்றால் பொது தரிசனமும் அல்லாத சிறப்பு தரிசனமும் இல்லாமல் தனிவழி ஒன்று இடைத்தரகர்களால் இயக்கப்படுகிறது.
கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் பல்வேறு நிறுவனங்களில் வேலை பார்த்துக் கொண்டு அந்த வேலைகளை பார்க்காமல் இடைத்தரகர் வேலை செய்பவர்கள், சிலர் நிறுவனத்தை சாராதவர்கள். சிலர் தேவஸ்தான ஊழியர்களால் இயக்கப்படுபவர்கள்தான் இடைத்தரகர்கள். சிறப்பு தரிசனம் டிக்கெட் எடுத்தவர்களை பல மணி நேரம் காக்க வைத்தும் வேகமாக செல்லுங்கள் என்று விரட்டியும், கோபமாக பேசுவார்கள்.
சில நேரங்களில் வரிசையில் காத்துக்கிடப்பவர்களைவிட இடைத்தரகர்கள் தரிசனத்திற்கு கூட்டி வருபவர்களை கோவில் அதிகாரிகள், பூசாரிகள் பார்த்தவுடனே மிகுந்த மரியாதையுடனும் கவனிப்போடும் நடத்துவார்கள். ஏனென்றால் சுவாமி தரிசனம் செய்ய இடைத்தரகர்களால் ரூபாய் 50 கட்டணத்திற்கு மேலாக நபர் ஒன்றுக்கு ரூபாய் 200, 300, 500 என்று வசூலிக்கப்பட்டு திருக்கோவிலின் அறங்காவலருக்கு நடத்தப்படும் மரியாதை போல சுவாமி தரிசனம் செய்து வைப்பார்கள். அந்த சமயம் உள்ளுர் வாசிகளுக்கு தெரிந்த உறவினர்களோ அல்லது நண்பர்களோ சுவாமி தரிசனம் செய்ய வந்தால் சன்னதியில் உள்ள அதிகாரிகள் அவர்களை கண்டுகொள்வதில்லை. அப்படி கண்டுகொண்டு அதிகாரிகள் அனுமதித்தால் சன்னதியில் உள்ள தலைமை குருக்கள் அந்த உறவினர்கள், நண்பர்கள் முன்பே உள்ளுர் வாசிகளை சீக்கிரமாக செல்லுங்கள். பணம் வரும் நேரத்திலே ஓசியிலே சுவாமி தரிசனம் செய்ய கூட்டிக்கொண்டு வந்துவிட்டீர்கள் என்று உள்ளுர்வாசிகளை திட்டி அனுப்புகின்றனர்.
தலைமை குருக்களை பற்றி செல்ல வேண்டியதே இல்லை. உள்ளுர் மக்கள் அனைவரும் அறிந்ததே. பகலில் பண வேட்டை, இரவில் மது ஆட்டம் என்று இருப்பவர். எல்லாம் நேரம் என்று மனதிற்குள்ளே நினைத்துக் கொள்வார்கள். நமது கஷ்டங்களை தீர்க்க விமோசனம் கிடைக்கும் என்று எண்ணி இங்கு வந்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. மேலும் மிகுந்த மன உலைச்சலுடன் தான் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது என்றும், இனிமேல் இராமேஸ்வரம் வருவதை நிறுத்திவிட வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். இதில் என்ன வெட்கக்கேடு என்றால் இவை அனைத்தும் நிர்வாகத்திற்கு தெரிந்துதான் நடக்கிறதா? தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறார்களா? என்று பக்தர்களும், யாத்ரீகர்களும், சமூக ஆர்வலர்களும் புலம்புகின்றனர்.
என்று மாறும் இந்த தலைகீழாய் மாறிப்போன தலவரலாறு? காத்திருப்போம் நாமும்.