இது பசுமை வழிச்சாலையே இல்லை: தமிழக அரசை கண்டித்த நீதிபதிகள்…
அரசு என்பது மக்கள் நலனுக்காகத்தானே தவிர, வளர்ச்சி என்ற பெயரில் கண்ணை மூடிக்கொண்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கு அல்ல என்று உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
எட்டு வழிச்சாலை தொடர்பாக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. அத்துடன் அதற்காக கையப்படுத்தப்பட்ட நிலங்களை உரிமையாளர்களிடம் 8 வாரங்களுக்குள் திரும்பக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்நிலையில் எட்டுவழிச்சாலை தீர்ப்பின் முழுவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், இந்தச் சாலை அமைக்கப்படுவதால் விலங்குகள் பாதிக்கப்படும் என்றும், மனிதர்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த அவசரகதியில் மாநில அரசு செயல்பட்டுள்ளதாகவும், அதற்கு கடும் கண்டனத்தையும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவையில்லை என்ற மத்திய அரசு வாதத்தை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அத்துடன் இது பசுமை வழிச்சாலையே இல்லை என்றும் சாடியுள்ளனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள், வனப்பகுதிக்குள் சாலை அமைத்து, அதற்கு சுற்றுச்சூழல் ஆய்வின் ஒப்புதல் தேவையில்லை என்பது, ‘வண்டியை முன்னே செல்லவிட்டு, குதிரையை பின்னால் கட்டும் கதையாக உள்ளதாகவும்’ நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
மேலும், அமைதி வழியில் போராடியவர்களை காவல்துறை கொண்டு அடக்கியதாகவும், நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்னரே அது நிறுத்தப்பட்டதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்கள் நல அரசு என்பது விவசாயத்தையும், பொதுநலனையும் தான் பாதுகாக்க வேண்டுமே தவிர, வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் கண்ணை மூடிக்கொண்டு எதையும் செயல்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுபற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், கூறும்போது, ’’இந்த தீர்ப்பு, ஓரளவுக்கு மக்களுக்கு கிடைத்த வெற்றிதான். இந்த வழக்கில், ஆரம்ப கட்டத்தில் இருந்தே சட்ட நடைமுறைகள் ஒழுங்காகப் பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பதுதான் பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிலத்தைக் கையகப்படுத்தும் முன் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டம். சுற்றுச்சூழல் அனுமதி என்பது, மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தி அவர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே வழங்கப்படும். இந்த திட்டம் வந்தால் என்னென்னச் சூழலியல் பிரச்னைகள் உருவாகும் என்பது பற்றிய அறிக்கையை சுற்றுச்சூழல் அமைப்பு மக்களிடம் வழங்குவார்கள். பெருவாரியான மக்கள் அதை நிராகரித்தால், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பதுதான் சட்ட நடைமுறை.
இந்த அரசாணை செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. இதனால் அரசு, இதை பாடமாக எடுத்துக்கொண்டு திட்டத்தை கைவிட வேண்டும். இல்லை, நடைமுறைபடுத்தியே தீருவோம் என்று அரசு நினைத்தால் அது எளிதானதாக இருக்காது. புதிய திட்டத்தை கொண்டு வந்தாலும் அதற்கும் சுற்றுச்சூழல் அனுமதி வாங்க வேண்டும்’’ என்றார்.
நீதிமன்றத் தீர்ப்பு விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. பாதிக்கப்பட்ட சேலம் விவசாயிகள் தங்களுக்குள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடினர். நெடுஞ்சாலைத்துறையால் நடப்பட்டு இருந்த அளவீடு நடுகற்களை பிடுங்கி எறிந்தனர்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “உயர்நீதிமன்றம் தடை விதித்தால் அரசு சார்பில் மேல்முறையீடு செய்வார்கள். சாலை வசதி என்பது இன்று சமூகத்தினுடைய கட்டமைப்புக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் மிக அவசியம். அதற்காகத் தான் முதலமைச்சர் பழனிசாமி ‘இந்தப் பத்து வழிச்சாலை’ திட்டத்தையே கொண்டு வந்தார். மற்றபடி, இதில் எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது.
விவசாயத்திற்கு எத்தனையோ இடங்கள் இருக்கிறது. அங்கு விவசாயம் செய்யலாம். விவசாயத்தை பாதிக்கும் அளவிற்கு எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு தகுந்த இழப்பீடும் கொடுக்கின்றார்கள். எனவே இதுதொடர்பாக என்ன செய்யலாம் என அனைத்துக் கட்சிகள் மற்றும் அதிகாரிகளை அழைத்துப்பேசி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் முடிவு செய்வார்கள். அவர்கள் யாரும் பாதிக்காத அளவிற்கு தான் முடிவெடுப்பர்கள்.