மகன்களை கொள்ளி வைக்க விடாதீர்கள்..! : கடிதம் எழுதி பெற்றோர் தற்கொலை
பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசித்தவர்கள்., குணசேகரன் – செல்வி தம்பதி…. இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். 60 வயதாகும் குணசேகரன் ஆரம்பத்தில் கார்பெண்டராகப் பணிபுரிந்தார். சில நாட்களுக்கு முன்பு வரை காவலாளி வேலைக்குச் சென்று வந்தார்.
இவர்களின் முதல் இரண்டு மகன்களும் திருமணமானபின் தாய்- தந்தையரைப் பிரிந்து அவரவர் மனைவியின் இஷ்டப்படி தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். மூன்றாவது மகன் ஸ்ரீதருக்கு திருமணமாகாத நிலையில் பெற்றோருடன் வசித்து வந்தார்.
மதுவுக்கு அடிமையான ஸ்ரீதர் பணம் தேவைப்படும்போது மட்டும் வேலைக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டு மற்ற நேரங்களில் ஊதாரியாக ஊர் சுற்றியுள்ளார். குடிக்கப் பணம் இல்லாதபோது வயதான தாய்- தந்தையிடமும் சண்டையிட்டு பணம் பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தான் கொரோனா ஊரடங்கால் குணசேகரன் பார்த்துவந்த செக்யூரிட்டி வேலையும் பறிபோனது. இதனால், போதிய வருமானமில்லாமல் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி உள்ளார். கால் வயிற்றுக் கஞ்சிக்குக் கூட வழி இல்லாமல், அந்த வயதான தம்பதியர் தவித்தனர்.
கடைசி காலத்தில் உழைத்து கஞ்சி ஊற்றுவார்கள் என்று நம்பி ஆண் குழந்தைகளுக்காக தவம் இருக்கும் பெற்றோர் இங்கு பலர் உண்டு. ஆனால், குணசேகரன் – செல்வி விஷயத்தில் மூன்று மகன்களைப் பெற்றும் கடைசி காலத்தில் மூவருமே கைவிட்டு விட்டது தான் சோகம்.
இந்த நிலையில், வாழ வழியின்றி தவித்த பெரியவர் குணசேகரன், தனக்குப் பின் மனைவி தனியாக இந்த உலகில் கஷ்டப்படக் கூடாது என்று எண்ணி, மனைவியுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்…
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
அவர்கள் எழுதிவைத்த கடிதத்தில், “தங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் தங்களது சடலங்களுக்கு மகன்கள் கொள்ளி வைக்கக் கூடாது என்றும் உருக்கமாக குறிப்பிட்டு இருந்த அந்த தம்பதியர் தங்கள் உடலை காவல்துறையினர் தான் அடக்கம் செய்யவேண்டும்” என்றும் தெரிவித்து இருந்தனர்.
இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் பெற்றவர்களை கடைசி காலத்தில் கவனிக்காமல் தவிக்க விட்ட அந்த பொறுப்பற்ற மகன் மற்றும் மருமகள்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குணசேகரன்- செல்வி தம்பதியரின் கடைசி விருப்பத்தின்படி, உதவி ஆணையர் சுரேந்தர் தலைமையில் அவர்களின் உடல் அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பெண்குழந்தை பிறந்தால் செலவு என்றும், ஆண்குழந்தை பிறந்தால் வரவு என்றும் சொல்லி வளர்க்கப்படுகின்ற நமது சமூகத்தில, ஆணோ பெண்ணோ பற்றும் பாசமும் வைத்திருந்தாலும் பெயருக்கு சொத்தும், உதவிக்கு சொந்தமும் இருந்தால் மட்டுமே கடைசி வரை பெற்றோரை கைவிடாமல் பிள்ளைகள் காத்து நிற்பார்கள் என்பதே கசப்பான உண்மை..!
- விஜயகுமார்