கணக்கே இல்லாத வங்கியிலிருந்து, வாங்காத கடனுக்கு நோட்டீஸ்..! : விவசாயி அதிர்ச்சி!
திருவாரூரில் கணக்கே இல்லாத கிளையில் இருந்து, வாங்காத கடனுக்கு வட்டியோடு அபராதம் கேட்டு விவசாயிக்கு நோட்டீஸ் அனுப்பிய ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம், அவர் வேறொரு கிளையில் வைத்திருக்கும் கணக்கில் இருந்து அபராதம் வசூலித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மதுரா நகரை சேர்ந்த விவசாயி பாண்டியன், அங்குள்ள ஸ்டேட் வங்கியில் கணக்கு தொடங்கி வீட்டு கடன் பெற்று மாதம்தோறும் தவணை செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அருகிலுள்ள விளமல் ஸ்டேட் வங்கிக் கிளையில் இருந்து பாண்டியனுக்கு கடந்த மாதம் 26ஆம் தேதி நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது.
அதில் விளமல் வங்கிக் கிளையில் பாண்டியன் 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும் அதற்கான வட்டித் தொகையை சரிவர செலுத்தாததால் 2 விழுக்காடு அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
விளமல் கிளையில் கணக்கே இல்லாத நிலையில், வாங்காத கடனுக்கு வட்டியோடு அபராதமும் கேட்டு வந்த கடிதம் பாண்டியனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட கிளைக்குச் சென்று விசாரித்தபோது, அவர்கள் அலட்சியமாகவும் ஒருமையிலும் பதிலளித்ததாகக் கூறுகிறார் பாண்டியன்.
இதனையடுத்து தாம் வாங்கியதாகக் கூறப்படும் கடன் தொகை குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விளமல் கிளை மேலாளரிடம் பாண்டியன் கேட்டுள்ளார். அதற்கு முறையான பதில் கிடைக்காத நிலையில், வேறொரு வங்கியிலிருந்து அந்தக் கடன் குறித்த விவரங்களைப் பெற்றவருக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது விளமல் கிளையில் வாங்கியதாகக் கூறப்பட்ட கடனுக்கான அபராதத் தொகையாக பாண்டியனின் திருவாரூர் கிளை கணக்கில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 4 ஆயிரத்து 602 ரூபாய் எடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்கச் சென்றபோதும் வங்கித் தரப்பில் இருந்து மீண்டும் அலட்சிய பதிலே கிடைத்திருக்கிறது.
விவசாயி பாண்டியனின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளமல் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் விசாரித்தபோது, வங்கி ஊழியர்களின் தவறால் ஏற்பட்ட பிழை என்றும் பாண்டியன் கணக்கில் எடுக்கப்பட்ட பணம் மீண்டும் வரவு வைக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். ஊழியர்கள் செய்ததாகக் கூறப்படும் அந்த தவறால் தேவையற்ற அலைச்சலுக்கும் கடும் மன உளைச்சலுக்கும் ஆளானதாகக் கூறுகிறார் பாண்டியன்.
பாண்டியன் போன்ற கொஞ்சம் விவரம் அறிந்தவர்கள் சட்டப்பூர்வமாக அணுகி வங்கியின் தவறுகளை கண்டறிந்து அதற்கான தீர்வையும் பெற்று விடுகிறார்கள். ஆனால் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் வங்கியில் ஏழை எளிய மக்களே பெரும்பாலும் கணக்கு வைத்திருப்பவர்கள் என்கிற நிலையில், ஊழியர்களின் இதுபோன்ற அலட்சியமான தவறுகளால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை யார் கண்டறிவது என்கிற கேள்வி எழுகிறது.
& சாகுல்ஹமீது