அதிரவைக்கும் ‘நீட்’ ஆள்மாறாட்டம்… : பயிற்சி மையத்திற்கு ரூ.20 லட்சம் என வாக்குமூலம்?
நீட் தேர்வு ஆள்மாறாட்ட புகாரில் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் பல புதிய தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. உதித் சூர்யா போன்று மேலும் 6 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
சென்னையை சேர்ந்த உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். உதித் சூர்யா நீட் தேர்வை எழுதவில்லை என அவரின் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு கடந்த 11-ம்தேதி 2 மெயில்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
தகவல் அறிந்து, உதித் சூர்யா அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன், தாய் கயல்விழி உள்ளிட்டோர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டனர். பின்னர் திருப்பதியில் தலைமறைவாக இருந்த 3 பேரையும் கைது செய்து, தேனிக்கு அழைத்து வந்தனர் காவல்துறையினர். இவர்கள் மீது ஆள்மாறாட்டம், கூட்டுச் சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையில் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தையும் மருத்துவருமான வெங்கடேசன் ஒப்புக்கொண்டதாக தெரியவந்தது. இதையடுத்து தந்தையையும் மகனையும் கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர் அவர்களை தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டனர். உதித் சூர்யாவின் அம்மாவுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால் அவரை விடுவித்தனர்.
இந்நிலையில் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. உதித் சூர்யாவை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க, ஆள்மாறாட்டம் செய்வதற்காக சென்னை மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 2 இடைத்தரகர்கள் மூலம் 20 லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாக அவரது தந்தை வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் உள்ள நீட் பயிற்சி மையம் மூலம், அங்குள்ள ஒரு நபரை வைத்துதேர்வு எழுதியதும், தேர்வுக்கு முந்தைய நாள் வரை ஆள் மாறாட்ட திட்டத்தை உதித் சூர்யாவுக்கே தெரியாதபடி அவரின் தந்தை காய் நகர்த்தியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மும்பையில் உதித் சூர்யாவுக்குப் பதில் வேறு ஒரு நபர் தேர்வு எழுதினார். ஆனால் இதைத் தொடர்ந்து கவுன்சிலிங் மற்றும் கல்லூரியில் சேர்க்கையின்போது உதித் சூர்யா பங்கேற்றதை அலட்சியத்தின் காரணத்தால் சம்மந்தப்பட்டவர்கள் கண்டுபிடிக்கவில்லை என்பதும் அம்பலமாகியுள்ளது.
இது குறித்து தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, பணிச்சுமை காரணமாக மாணவர் சேர்க்கையின்போது ஆவணங்களை சரிபார்க்க கல்லூரி துணை முதல்வர், உதவிப் பேராசிரியர், ஸ்டெனோ ஆகியோரை நியமித்ததாய் வாக்குமூலம் அளித்திருப்பதாக சிபிசிஐடி தப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆவணங்களை சரிபார்த்து உதித் சூர்யாவிடம் கல்லூரி நிர்வாகம் புகைப்படம் கேட்டபோது, அவர் தனக்குப் பதில் தேர்வு எழுதிய நபரின் புகைப்படம் இல்லாததால் தன்னுடைய படத்தை கொடுத்ததால் கையும் களவுமாக மாட்டியதாக தெரிகிறது.
முறைகேட்டிற்கு உதவிய மும்பையைச் சேர்ந்த நீட் பயிற்சி மையம் மற்றும் ஆள்மாறாட்டம் செய்து நீட் நுழைவுத் தேர்வு எழுதிய இளைஞர் குறித்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி தனிப்படை காவல்துறையினர் மும்பை சென்றுள்ளனர். உதித் சூர்யா போன்று மேலும் 6 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் தொடர்புடைய இடைத்தரகர்கள் யார் யார்? மும்பையில் தேர்வு எழுதிய நபர் யார்? மேலும் இதுபோன்று ஆள்மாறாட்டம் செய்தவர்களை கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது சிபிசிஐடி.