ஸ்டெர்லைட் கடந்த காலத்தில் ஆதரித்தவர்கள் இன்று சில புற சூழல் நிலையில் எதிர்க்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி தான்.
தூத்துக்குடி ஸ்டெர்லைடை திறக்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது மகிழ்ச்சியே. வைகோ, ஜார்ஜ் பெர்ணாண்டஸ் போன்றவர்களெல்லாம் இதை மூட வேண்டும் என்று துவக்கத்தில் குரல் கொடுத்து, வைகோ அதைத் தொடர்ந்து போராடி வந்தார். கடந்த1995- 96 அகர்வால் ஸ்டெர்லைடை நடத்தியகாலத்தில் இதெல்லாம் நடந்தது.
பின்பு வேதந்தா நிறுவனத்திற்கு கை மாறியது. ஆரம்ப கட்டத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களிலும் ,வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முன்னெடுப்புக்கு முழுமையாக பணியாற்றியவன் என்ற நிலையிலும் இதற்காக ஆரம்ப கட்டத்தில் எதிர்ப்பை தெரிவித்து போராடியவர்கள் எங்களை போல Green Peace அமைப்பு, ஆண்டன் கோமஸ், பூவுலகின் நண்பர்கள் நெடுஞ்செழியன் போன்றவர்கள் எல்லாம் இப்போது இல்லையென்றாலும் அவர்களுடைய பணிகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தவர்கள் யார்? அதை துவக்கி வைத்தவர்கள் யார்? என்பதையும் சமீப காலமாக அதை குறித்து பேசத் தொடங்கியவர்களுக்கு இதைக் குறித்து பழைய வரலாறெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை. வேதாந்தா நிறுவனத்திற்கு ஆதரவாக சட்ட ஆலோசனையெல்லாம் வழங்கியவர், 2009ல் ஈழத் தமிழர்கள் மடிந்த போது குரல் கொடுக்காதவர், மேலும் மத்திய அரசில் பதிவியில்லாத போது ஒப்புக்கு பல விஷயங்களுக்கு கருத்துச் சொல்பவர் ஸ்டெர்லைட்டை பற்றி வாயே எப்பவும் திறப்பது இல்லை. அவருக்கு இது தமிழக பிரச்சனை இல்லையா?
இருப்பினும் ஸ்டெர்லைடை கடந்த காலத்தில் ஆதரித்தவர்கள் இன்று சில புற சூழல் நிலையில் எதிர்க்கிறார்கள் என்ற மாற்றம் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி தான். நாசகார ஸ்டெர்லைட் ஒழிந்து மனித இனம் பாதுகாக்கப்படுவது குறித்து மகிழ்ச்சி தான்.
இருபத்தி இரண்டு ஆண்டுகாலம் தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் நிறுவனம், ஒரு அடி நிலத்தைக் கூட சொந்தமாக வாங்கவில்லை.
தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில்தான் குத்தகை அடிப்படையில் தொழில் நடத்துகிறார்கள். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமையகம் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் அமைந்துள்ளது. இந்தியாவிற்கான தலைமை அலுவலகம் மும்பையில் அமைந்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் பணியாளர்கள் குடியிருப்பு கூட, அருகிலுள்ள வீரபாண்டியபுரம், மீளவிட்டான், மடத்தூர், பண்டாரம்பட்டி, குமரெட்டியாபுரம் கிராமங்களில் அமைக்கப்படவில்லை. சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே கட்டப்பட்டுள்ளது. அக்குடியிருப்பில் உயர் அலுவலர்கள் தங்குவதில்லை.
இத்தனை முன் எச்சரிக்கையோடு இருக்கும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் சொல்கிறது, நாங்கள் பாதுகாப்பான ஆலையை நடத்துகிறோம். எங்களால் சுற்றுச்சூழலுக்கும், இயற்கைக்கும், உயிரினங்களுக்கும், மனிதர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லையென்று.
- கே.எஸ்.ராதாகிருஷ்ணன்