அரசியல்தமிழகம்

ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் மக்கள் போராட்டங்களும்

சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் பெரும் தீங்கை விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர்.
காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 200 இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் கிணறுகளைத் தோண்டி வைத்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதற்காக பல இடங்களில் விளைநிலங்களைத் தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. காவிரி, கொள்ளிடம் ஆகிய இரு ஆறுகளிலும் ஏராளமான இடங்களில் குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் கொள்ளை அடிக்கப்படுகிறது. அதேநேரத்தில் இரு ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்டும் திட்டத்தை செயல்படுத்த அரசு மறுக்கிறது. இத்தகைய சூழலில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் செயல்படுத்தப் பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்க வேண்டியது அங்கு வாழும் ஒவ்வொருவரின் கடமை ஆகும். மத்திய அரசுக்கு கங்காணியாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த உரிமம் பெற்றுள்ள வேதாந்தா போன்ற நிறுவனங்களின் கூலிப்படையாகவும் செயல்பட்டு வரும் தமிழக அரசு, இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தவர்களை கைது செய்து கொடுமைப்படுத்தியிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு இதைவிட மிக மோசமான நம்பிக்கைத் துரோகத்தை எவராலும் இழைக்க முடியாது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான விழிப்புணர்வு துண்டறிக்கைகளை மக்களிடம் குழுவாக சென்று தான் வழங்க முடியும். அவ்வாறு கொடுத்ததற்காகத் தான் அவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் 151&ஆவது பிரிவின் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலத்தில் இந்த சட்டப்பிரிவு வேறு எங்கும் பயன்படுத்தப்பட்டதாக நினைவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராகத் தான் இந்த சட்டப்பிரிவு அதிக முறை ஏவப்பட்டது.
தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால், மறுபுறத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகின்றனர். அவர்களின் இரட்டை வேடம் வெகுவிரைவில் மக்களிடம் அம்பலமாகி விடும். காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்பதில் ஆட்சியாளர்களுக்கு அக்கறை இருந்தால் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும். போராடுபவர்கள் மீதான வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button