தமிழகம்

அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் பலி!

சுத்தம், சுகாதாரம், நோயாளிகளின் உயிர்மீது நம்பகத்தன்மை என்ற வார்த்தைகளுக்குப் பொருள்தேடி அரசுமருத்துவமனைக்குச் சென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனென்றால் அரசு ஆண்டுதோறும் பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு நிதியை அதிகரித்து வந்தாலும் அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு மற்றும் அலட்சியம், நர்சுகளின் மெத்தனப்போக்கால் சுகபிரசவம் ஆன கர்ப்பிணித்தாய் ராதா இறந்துவிட்டார் என்ற பகீர் தகவல் வர நாம் அங்கு சென்றோம்.


பாதிக்கப்பட்ட வன்னிக்குடியைச் சேர்ந்த இறந்த ராதாவின் மாமனார் சேது நம்மிடம் கூறியதாவது:
இராமநாதபுரம் அருகே உள்ள வன்னிக்குடி கிராமத்தில் குடும்பத்துடன் விவசாய கூலிவேலை செய்து பிழைத்து வருகிறேன். எனக்கு வீரம்மாள் என்ற மனைவியும் முருகேஷ், பாண்டித்துரை ஆகிய மகன்களும், தாமரைச்செல்வி என்ற மகளும் உள்ளனர். எனது மகன் பாண்டித்துரைக்கும் (வயது 35), பனையடியேந்தலைச் சேர்ந்த கருப்பசாமி மகள் ராதாவுக்கும் (வயது 27), கடந்த 11.7.2016 அன்று திருமணம் நடந்ததது, எனது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறான். ராதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவரை கடந்த மூன்று நாட்களுக்கு முன் அவரது தந்தை இராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இந்த நிலையில் 01.06.2018 அன்று வெள்ளிக்கிழமை மாலை சுமார் 3.10, மணியளவில் சுயபிரசவத்தில் பெண் குழந்தைபிறந்து உள்ளது. தாயும் குழந்தையும் நல்ல உடல் நலத்துடன் இருந்துள்ளனர். திடீர் என்று சுமார் மாலை 6.00 மணியளவில் ராதா இறந்து விட்டதாக அங்குள்ள நர்சுகள் தெரிவித்துள்ளனர். வேறு வழி தெரியாத நாங்கள் அரசு மருத்துவமனைக்கு முன்னால் இறந்ததற்கு காரணம் தெரிவிக்ககோரியும் அதற்கு உரிய நிவாரணம் வழங்கவும் சுமார் 200 பேர் சாலை மறியல் செய்தோம். போலீஸ் அங்கு குவிக்கப்பட்டு எங்களை கலைக்க திட்டமிட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஆர்.டி.ஓ எங்களிடம் சமரசப்பேச்சு வார்த்தை நடத்தி அதற்க்கு உரிய நடவடிக்கையும், நிவாரணமும் பெற்றுத்தருகிறேன் என்று வாக்குறுதி அளித்ததின் பேரில் நம்பிக்கை வீண் போகாது என்று நம்பிய நாங்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டோம். ராதா இறந்ததற்கு காரணம் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரின் மெத்தனப்போக்கே காரணம் என்று சொல்லிக்கொண்டே மற்றொரு பகீர் தகவலையும் கொட்டித்தீர்த்தார். “பட்ட காலிலேயே படும் கெட்டகுடியே கெடும்” என்ற பழமொழிக்கு ஏற்ப கடந்த 13.10.2014 ம் தேதிஅன்று எனது மகள் தாமரைச்செல்வியும் இதே இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது ரத்தப்போக்கு ஏற்பட்டு ரத்தம் ஏற்றும் போது ரத்தம் ஒவ்வாமையால் ஆஸ்பத்திரியிலேயே இறந்து போனார். அந்த தகவலைக்கூட சொல்லாமல் என்மகளை நான் பார்ப்பதற்கு பலமுறை முயற்சித்தும் வார்டு முகப்பில் நின்ற நர்சுகள் தடுத்து விட்டனர். நேரம் ஆக ஆக நர்சுகளின் வார்த்தைகளின் சந்தேகம் கொண்ட நாங்கள் நர்சுகளை விலக்கிக்கொண்டு கதவைத்திறந்து பார்த்தபோது எனது மகள் தாமரைச்செல்வி இறந்த நிலையில் பிணமாக காணப்பட்டார். ஆனால் அன்று எனது மகள், இன்று எனது மருமகள், சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறும், தவறு செய்தவருக்கு தண்டனையும், துறைரீதியான நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட எனக்கு நீதிவழங்க வேண்டும் என்றார். ஆனால் இதற்கு முன்பு இறந்த எனது மகளுடைய குழந்தையான அகிலாமுனிஸ்ரீ க்கு தற்போது 4 வயதாகிறது. அந்த குழந்தையை வளர்ப்பதற்கு நாங்கள் பட்டபாடு படைத்த ஆண்டவனுக்குத் தான் தெரியும். அந்தவடு மறைவதற்குள் “தீப்பட்ட காயத்துல வேலைப்பாய்ச்சுவது போல மீண்டும் இப்படி ஒரு நிலையென்றால் நாங்கள் யாரிடம் சொல்லி எங்கள் வேதனையை தீர்த்துக்கொள்வது. இப்போது பிறந்த குழந்தையை நாங்கள் எப்படி வளர்த்து எடுக்கப்போகிறோம் என்று தெரியல.. அதற்கு ஆண்டவன்தான் துணைநிற்க வேண்டும் என ஒரு வித ஆதங்கத்துடன் மனவேதனையோடு கூறினார்.
அதுமட்டுமில்ல இன்னும் தொடர்ந்து எனது மருமகள் இறப்பு குறித்து அதற்கான அரசு உதவி கேட்டு தினமும் அலுவலகம் தேடி அலைகிறோம். ஆனால் வாய்மொழி உத்தரவு கொடுத்த அரசு அதிகாரிகள் செய்துதருகிறோம் என்ற ஒற்றை வார்த்தை பதில் மட்டுமே வருகிறது என மிகவும் மனம் தடுமாறியபடியே பதில் கூறினார் .
இதுகுறித்து விளக்கமறிய சமூகப்பணியாளர் தளபதிராஜ்குமாரிடம் கேட்டபோது:
தமிழகத்தில் மருத்துவஅறிவியல்துறை இயக்குனரகத்தின்(பி.எம்.எஸ்) 32 தலைமை மருத்துவமனைகள், 160 க்கும் மேற்ப்பட்ட தாலுகா மருத்துவமனைகள், 79 இதர மருத்துவமனைகள், 10 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நலமருத்துவமனைகள் மேலும் மருத்துவக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் 25க்கும் மேற்ப்பட்ட மருத்துவக்கல்லூரிகள், 35 க்கும் மேற்ப்பட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. பொதுவாக மருத்துவமனையில் 8 நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் நியமிக்கப்படவேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் விதி உள்ளது, தமிழக மக்கள் தொகையில் சுமார் 8 கோடி இவர்களில் வெறும் 10 சதவிகிதம் பேர் மட்டும் அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களாக எடுத்துக்கொண்டால் கூட 8 லட்சம் பேர்தான் வருகிறார்கள். ஆனால் அரசு மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள நர்ஸ்களின் எண்ணிக்கை சுமார் 19 ஆயிரத்துக்குள்தானாம். இதில் சில பேர் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். ஆக 411 நோயாளிகளுக்கு ஒரு நர்ஸ் என்ற நிலையே உள்ளது.
சுகாதாரத்துறையில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக செயல்பட்டுவருகிறது என மூச்சுக்கு முன்ணூறு முறை பேசிவரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவமனைகளின் சாதாரண நோய்களுக்கு கூட சிகிச்சைக்காக செல்லும் போது ஏற்படும் மரணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லாலிடம் விளக்கமறிய பலமுறை அலுவலகம் சென்று கேட்டபோது மீட்டிங்கில் இருக்கிறார். விடுப்பில் இருக்கிறார் என்ற பதிலும், தொடர்பு நம்பர் கேட்டபோது எங்களிடம் இல்லை என அலுவலக உதவியாளர் அவசர வார்டு பகுதிக்கு சென்று கேளுங்கள் என சாதரணமாக பதில்கூறுவது அவர்கள் செய்யும் பணியின் மெத்தனப்போக்கை காட்டுகிறது. நம் செய்தி அச்சாகும்வரை அந்த பதில் மட்டுமே இருந்தது.
கடவுளுக்கு சமமாக கருதப்படும் மருத்துவமனையும், மருத்துவர்களும் உயிர் விலை மதிக்கத்தக்கது என்று அந்த கடவுள்தான் பதில்கூற வேண்டும் !!!
இன்னும் எத்தனை அப்பாவி மக்களின் உயிர் பறிபோகிறதோ! …. பாவம் சாமானிய மக்களுக்கு யாருதான் உறுதுணையாக இருப்பது…
இதற்கு முன் இந்த இறப்பு போல எத்தனை நடந்திருக்கும் என்பது சந்தேகத்துக்கு உரியதாக கருதவேண்டி உள்ளது.
இதற்கு முற்றுபுள்ளி வைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்…

– இரா.சிவசாமி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button