குடிநீர் தட்டுப்பாட்டில் கொடைக்கானல் : நல்லா இருந்த நடைபாதையை உடைத்து காசு பார்க்கும் அரசியல்வாதிகள்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி மிகவும் பழமையான ஏரி கொடைக்கானல் நகரத்தின் மையப் பகுதியில் அறுபது ஏக்கர் நிலத்தில் 1863 ஆம் ஆண்டு மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக செயற்கையாக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. படகு சவாரி செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகளைக் கவரக் கூடிய இடமாகும். குதிரை சவாரி செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு ஏரியை சுற்றிச் சாலைகள் சிறந்த இடமாக அமைந்துள்ளது. கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளதால் இங்கு குளுமையான தட்ப வெப்பம் நிலவுவதோடு மலைகளின் இளவரசியாகவும் திகழ்கிறது.
இங்கு பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கு வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்ற பெயர் வந்ததாம். ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டுமே அனுபவித்து வந்த கோடை வாசத்தலம். இப்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க வேண்டிய ஏராளமான இடங்கள் உள்ளன.
இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் சுற்றுலாப் பயணிகளை நம்பியே தங்களது தொழில்களை அமைத்துக் கொண்டனர். இங்கு குடியிருக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது குண்டாறு ஏரிதான். கொடைக்கானல் மலைப்பகுதி என்பதால் குன்றுகள், மேடான, பள்ளமான பகுதிகள் உள்ளன. அதனால் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் சீராக கிடைக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருந்தாலும் பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். கொடைக்கானலின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் கீழ் குண்டாறு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் 67 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்களுககு குடிநீர் தினமும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதற்காக வட்டக்கனல், பிரகாசபுரம் பகுதிகளில் மேல்நிலைத் தொட்டிகள் கட்ட வனத்துறையிடம் அனுமதி பெற்று பணிகளும் நடந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கி உள்ளார். கீழ் குண்டாறு திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் லிட்டர் தண்ணீர் தாராளமாக கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். குடிநீர் 2 நாட்களுக்கு ஒரு முறையாவது வழங்கி இருக்கலாம். அதன்பிறகு கீழ் குண்டாறு திட்டத்தின் கீழ் நடந்த பணிகள் நிறுத்தப்பட்டன.
தற்போது கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பதினைந்து அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது.
கொடைக்கானலில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி அகலப்படுத்தினால் மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் தண்ணீர் சேமிக்கப்பட்டு கோடைக்காலங்களில் மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யலாம். ஏரியில் கலக்கும் மழைநீர் தற்போது நிரம்பி வீணாக வழிந்தோடுகிறது. வீணாகும் நீரை தேக்கி வைக்கக் கூடிய அளவுக்கு எதிர்காலத்தில் ஒரு திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும். தமிழக அரசும் கொடைக்கானல் பகுதி மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும்.
கொடைக்கானலில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பியே வாழ்ந்து வருகிறார்கள். கடந்த ஐந்து மாதங்களாக கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வருவதில்லை. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வருகிறார்கள். அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக நன்றாக இருக்கும் ஏரியை சுற்றிய நடைபாதைகளை உடைத்து சீரமைத்ததாக கணக்கு காட்டி சம்பாதிக்கிறார்கள். இதுபோன்ற தேவையற்ற பணிகளுக்கு ஒதுக்கப்படும் பணத்தை கஷ்டப்படும் மக்களின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாம்.
ஜெயலலிதா அனுமதி வழங்கிய குண்டாறு திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு ஜெயலலிதாவின் ஆட்சி என்று அடிக்கடி கூறிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள். ஏரியை தூர்வாரி நீரை சேமிக்க வழிவகை செய்யாமல் ஏரியச் சுற்றி நன்றாக இருக்கும் வழித்தடங்களை உடைத்து மறுசீரமைப்பு செய்கிறார்கள். இதனால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. நடைபாதைகளை உடைத்து சீரமைக்க செலவு செய்யும் பணத்தை மக்களுக்கு பயன்படும் ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதே கொடைக்கானல் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
& ரபீக் அஹமது