திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பதியை கொன்று புதைத்த சகோதரி
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் வீட்டுக்குத் திருமண அழைப்பிதழ் வைக்க வந்த தம்பியையும் அவரது மனைவியையும் சொத்து தொடர்பான முன்விரோதத்தில் உடன்பிறந்த சகோதரியே கொலை செய்து புதைத்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்தில் சகோதரியும் அவரது மருமகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஈசநத்தம் அருகே உள்ள தாசநாயக்கனூரை சேர்ந்த செல்வராஜ் – வசந்தாமணி தம்பதியர் நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெறவிருந்த தங்களது மகன் பாஸ்கரின் திருமண அழைப்பிதழ்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 10 ந்தேதி திருப்பூர் அடுத்த வெள்ளகோவில் உத்தண்டகுமார வலசு கிராமத்தில் வசித்து வரும் மூத்த சகோதரி கண்ணம்மாளுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க மனைவி வசந்தாமணியுடன் செல்வராஜ் சென்றிருந்தார்.
அதன் பின்னர் அவர்களது தொடர்புகள் துண்டிக்கப்பட்டு வீடு திரும்பாத நிலையில், அவர்கள் சென்ற இண்டிகா கார் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி சாலை பிரிவு சாலையில் கேட்பாரின்றி நின்றிருந்தது. காரைப் பறிமுதல் செய்து விசாரித்த போலீசார், தம்பதியர் இருவரும் கடைசியாகச் சென்ற கண்ணம்மாளின் வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரிடம் கண்ணம்மாள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். அதேநேரம் அவரது வீட்டுக்குப் பின்புறத்தில் குழி ஒன்று புதிதாக வெட்டப்பட்டிருந்ததற்கான அடையாளங்கள் தெரியவே, அதனை ஆய்வு செய்தபோது, செல்வராஜ் – வசந்தாமணியின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கண்ணம்மாளிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கண்ணம்மாள், செல்வராஜின் தந்தையான காளியப்பன், தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை மகன் செல்வராஜ் பெயரில் எழுதிவைத்ததாகவும் அந்த நிலத்தை 43 லட்ச ரூபாய்க்கு செல்வராஜ் விற்றதாகவும் கூறப்படுகிறது. அந்த 43 லட்ச ரூபாயில் கண்ணம்மாள் பங்கு கேட்டபோது கொடுக்க மறுத்த செல்வராஜ், ஒரு லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த கண்ணம்மாள், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பியையும் அவரது மனைவியையும் மருமகன் நாகேந்திரனுடன் சேர்ந்து தலையில் அம்மிக் கல்லைப் போட்டு கொலை செய்து புதைத்ததை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து கண்ணம்மாளை கைது செய்த போலீசார், ஈரோடு சென்று நாகேந்திரனையும் கைது செய்தனர்.
இதனிடையே தடய அறிவியல் துறையினர், கண்ணம்மாளின் வீட்டில் வந்து தடயங்களை சேகரித்துச் சென்றனர். காங்கேயம் வட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் தம்பதியரின் சடலங்கள் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன.
இதேபோல், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சொத்துக்காகவும் வங்கியிலுள்ள பணத்துக்காகவும் பெற்ற தாய் தந்தையை திட்டம்போட்டு 6 மாத இடைவெளியில் அடுத்தடுத்து கொலை செய்த கொடூர மகன் கைது செய்யப்பட்டான்.
கண்ணங்கோட்டை நாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் – செல்லாயி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களின் மூத்த மகன் முத்து கண்பார்வை அற்ற மாற்றுத்திறனாளி. இளைய மகனான சோனை முத்து, கடந்த 2016ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்துள்ளான். திருமணமாகி மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில், வேலைக்குச் செல்லாமல் மதுவுக்கு அடிமையாகி ஊர் சுற்றி வந்துள்ளான் சோனைமுத்து.
இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ஆறுமுகம் உயிரிழந்தார். அவர் இயற்கையாக மரணமடைந்ததாகக் கூறி ஊர்மக்கள் முன்னிலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களுக்கு முன் அவரது மனைவி செல்லாயி உயிரிழந்தார்.
தனது தாய் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும் போதை அதிகமாகி, அதன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாகவும் கூறி, அவரது உடலையும் அடக்கம் செய்துள்ளான் சோனைமுத்து.
இந்த நிலையில்தான் பார்வையற்ற மாற்றுத்திறனாளியான மூத்த மகன் முத்து, தனது தாயின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக ஊர் மக்களிடம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் சார்பில் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
இறந்துபோன ஆறுமுகத்துக்குச் சொந்தமாக திருச்சி – ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் 16 செண்ட் நிலம் இருந்துள்ளது. இதில் 6 செண்ட் நிலம் சாலை விரிவாக்கப் பணிக்காக நெடுஞ்சாலைத் துறையால் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான இழப்பீடாக 7 லட்ச ரூபாய் ஆறுமுகத்தின் வங்கிக் கணக்கில் கடந்த ஆண்டு செலுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பணத்தை தனக்குத் தருமாறு சோனைமுத்து தந்தை ஆறுமுகத்திடம் கேட்டு அவ்வப்போது தகராறு செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள 10 செண்ட் நிலத்தையும் கேட்டு சோனைமுத்து தகராறு செய்து வந்துள்ளான். குடித்துவிட்டு ஊரைச் சுற்றிவந்ததால் பணத்தையோ நிலத்தையோ தர முடியாது என ஆறுமுகமும் செல்லாயியும் மறுத்து வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த சோனைமுத்து 6 மாதங்களுக்கு முன் தந்தை ஆறுமுகத்தை வயல்காட்டில் வைத்து அடித்தே கொலை செய்துவிட்டு, இயற்கை மரணம் என நாடகமாடியுள்ளான். உடனடியாக தாயையும் கொன்றால் சந்தேகம் வரும் என எண்ணி 6 மாதங்கள் கழித்து ஆட்டுக் கொட்டகையில் வைத்து தாயை கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, மதுவை அவர் மீது தெளித்துவிட்டு, போதையில் உயிரிழந்துவிட்டதாக நாடகமாடியுள்ளான்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இந்த உண்மைகளை அவன் ஒப்புக்கொண்டதை அடுத்து, இருவரது உடல்களும் தோண்டியெடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
“பணம் பத்தும் செய்யும் என்பார்கள்”. அந்தப் பணம் பெற்ற தாய் தந்தையரையும் கூட கொலை செய்யத் தூண்டும் என்பது இந்த சம்பவம் மூலம் நிரூபணமாகியுள்ளது.
- முத்துப்பாண்டி, ராஜா