வருடத்திற்கு 1,500 பேர்.. 20 கோடி வசூல்? : அதிர வைக்கும் நீட் கோச்சிங் சென்டர் ரெய்டு
நீட் தேர்வு முறைகேடு வழக்கு தமிழகத்தையே பரபரப்பில் வைத்திருக்கிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடு செய்ததாக இதுவரை 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்னும் வேறு யாராவது நீட் தேர்வில் முறைகேடு செய்து, மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளார்களா எனத் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில் தொடங்கி, கல்லூரி முதல்வரிடம் விசாரணை, கோச்சிங் சென்டர்கள் பின்னணி எனப் பல கோணங்களில் விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மொத்தம் 17 நீட் பயிற்சி மையங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில், 30 கோடி ரூபாய் ரொக்கமும், 150 கோடிக்கும் அதிகமான கணக்கில் வராத ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, பிரபலமான ‘க்ரீன் பார்க்‘ கோச்சிங் சென்டரின் அனைத்து இடங்களிலும் இந்தச் சோதனை நடந்திருக்கிறது.
தமிழகத்தில் 17 நீட் கோச்சிங் சென்டர்களில் அக்டோபர் 11-ம் தேதி காலை தொடங்கிய வருமான வரித்துறையினரின் ரெய்டு, தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்றது. குறிப்பாக, நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ‘க்ரீன் பார்க்’ கல்விக் குழுமத்தின் சென்னை, கரூர், ஈரோடு ஆகிய அனைத்து பள்ளிகளிலும் இந்த ரெய்டு நடைபெற்றது. நாமக்கல் போதுபட்டியில் உள்ள இந்தப் பள்ளியில் இயக்குநர்கள், பணியாளர்களிடம் விசாரணை நடத்தியும், பள்ளியின் வங்கிக் கணக்குகள் உள்ள வங்கிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலிருந்து சென்னிமலை செல்லும் சாலையில், கொரக்காட்டு வலசு பகுதியில் உள்ள இந்தத் தனியார் பள்ளியில், ஆசிரியர்களை வெளியே விடாமல், இரண்டு நாள்களாகத் தீவிர விசாரணை நடத்தியிருக்கின்றனர். பள்ளி மாணவர்கள் வெளியே வந்து சொன்ன பிறகுதான் ரெய்டு விஷயமே வெளியே தெரிய வந்தது. நீட் பயிற்சிக்காக எத்தனை மாணவர்கள் சேர்ந்தனர்? எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டது? அதற்கான கணக்குகள் எனப் பலவற்றையும் வருமான வரித்துறையினர் அலசியிருக்கின்றனர். கரூர் மாவட்டம், மண்மங்கலம் சேலம் பைபாஸ் சாலையிலிருந்து ஒரு கி.மீ தூரத்தில் இருக்கிறது அந்த தனியார் மேல்நிலைப் பள்ளி.
இங்கு, பள்ளியின் நுழைவு வாயிலை இழுத்துப் பூட்டிக்கொண்டு, செய்தியாளர்கள் உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்கக்கூட முடியாத அளவுக்கு ‘டைட்’ செய்திருந்தனர். இங்கே, நீட் கோச்சிங் சென்டரும் இயங்கிவந்ததால், குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாயில் இருந்து, இரண்டு லட்சம் வரை கட்டணம் வசூல் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்தப் பள்ளி, கணக்கில் காட்டாமல் பலகோடி ரூபாய் முறைகேடு செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதையொட்டி நடைபெறும் இந்த ரெய்டில், கணக்கில் வராத சில கோடிகளும், பலகோடிகளுக்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
க்ரீன்பார்க் கல்விக் குழும கோச்சிங் சென்டரில், நீட் தேர்வுகளுக்கான பயிற்சி கொடுத்துவருகின்றனர். இந்த கோச்சிங் சென்டர்களில் படித்த மாணவர்கள் பலருக்கு மெடிக்கல் சீட் கிடைக்க, கோச்சிங் சென்டருடைய பெயர் நாலாபுறமும் பரவியிருக்கிறது. அந்த வகையில், இந்த கோச்சிங் சென்டரின் சென்னை, நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய கிளைகளில் ஒவ்வொரு வருடமும் சுமார் 1500 மாணவர்கள் நீட் பயிற்சி பெற்றிருக்கின்றனர். ஒரு மாணவருக்கு ரூ.1,50,000 வரை கட்டணமாக வசூலித்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆண்டுக்கு கோடிகணக்கான பணம் இதில் புழங்கியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. வரிமான வரித்துறையினர், கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் கணக்கிட்டு சரிபார்த்த பிறகுதான் வரி ஏய்ப்பு செய்த தொகையின் அளவு தெரிய வரும். இதைப்போலவே, தமிழகத்தில் உள்ள கோச்சிங் சென்டர்கள் மற்றும் பிரபலமான தனியார் பள்ளிகளிலும் அடுத்தடுத்து ரெய்டு நடைபெற வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
இந்த தொடர் ரெய்டு தொடர்பாகவும் கல்வி கட்டணங்கள் தொடர்பாகவும் தெரிந்துகொள்ள க்ரீன் பார்க் கல்வி நிறுவனத்தை தொடர்புகொண்டோம். அப்போது போனை எடுத்துப் பேசிய பெண் ஊழியர் ஒருவர், `தற்போது ரெய்டு நடைபெற்று வருகிறது. அதனால் விளக்கம் சொல்லும் மனநிலையில் நாங்கள் இல்லை’ என்பதோடு முடித்து கொண்டார்.
- செந்தில்குமார்