தமிழகம்

அரசுப்பள்ளி மாணவர்களை குறிவைத்து லட்சக்கணக்கில் வசூலிக்கும் காலாவதியான விளையாட்டு சங்கங்கள்

தமிழ்நாட்டில் தற்போது பரவலாக பேசப்படும் விஷயம் பள்ளியில் மகாவிஷ்ணு பேசிய விவகாரம். இதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போன்று ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தான் கட்டுப்பாடுகளை விதிப்பது பள்ளி கல்வித்துறைக்கு வாடிக்கையாகிவிட்டது.

தமிழக அரசு பள்ளி செல்லும் குழந்தைகள் நலனில் அக்கரை கொண்டு சீருடை, உணவு, புத்தகம் முதல் கல்லூரி படிப்பு வரை இலவசமாக நல உதவிகளை செய்துவருகிறது. மேலும் விளையாட்டு துறையில் சாதிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பரிசுத்தொகை, அரசாங்க துறையில் வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை செய்து தருகிறது.

இந்நிலையில் அரசுப்பள்ளிகளில் தடகளம் உள்ளிட்ட விளையாட்டு பயிற்சி அளிக்க உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்காப்பு கலையான சிலம்பம், கராத்தே போன்ற விளையாட்டுக்களுக்கு வெளியாட்களை கொண்டு அரசுப்பள்ளி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே அரசு சார்பில் ஆண்டு தோறும் 3 மாதங்கள் தற்காப்பு கலை சிறப்பு வகுப்புகள் இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட்டுவரும் நிலையில் தனியாக பள்ளி மாணவர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் தற்காப்பு கலையான சிலம்பம், கராத்தே சங்கங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அங்கீகாரம் வழங்கபடவில்லை என்பது எத்தனை பெற்றோர்களுக்கு தெரியும்.

இதனிடையே மாவட்ட, மாநில போட்டிகள் நடத்தப்படுவதாக கூறி அங்கீகாரமற்ற வகையில் போட்டிகளை நடத்தி சுமார் 1000 பேரிடம் நபர் ஒன்றிற்கு 500 வீதம் ரூ.5 லட்சம் வசூலிக்கபடுகிறது. பெரும்பாலும் பள்ளி மைதானத்தில் நடத்தப்படும் போட்டிகள் பாதுகாப்பற்ற முறையில் நடத்தப்பட்டு பதிவு காலாவதியான சங்கங்கள் பெயரில் சான்றிதழ்கள் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு நடத்தப்படும் சங்கம் சார்ந்த போட்டிகளின் சான்றிதழ்கள் வெற்றுப்பேப்பர் தான். அதனால் எந்த பயனுமில்லை.

மேலும் தற்காப்பு கலை வகுப்புக்கள் எடுப்பதாக கூறி அரசுப்பள்ளி வளாகத்தில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் பாதுகாப்பற்ற சூழலில் வகுப்புக்கள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணம் சம்பாதிப்பதை குறிக்கோளாக கொண்டு அரசு பள்ளி வளாகத்தை பயண்படுத்தி மாணவர்களிடம் உலக சாதனை, போட்டிகள் நடத்துவதாக கூறி மாணவர்களிடம் செல்லாத சான்றிதழ்களை கொடுத்து லட்சக்கணக்கில் வசூலிப்பதை வேடிக்கை பார்க்காமல் பள்ளி கல்வித்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலன் காக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button