தமிழகம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டு..! : தொடரும் உயிரிழப்புகள்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

ஆன்லைன் சூதாட்டமான ரம்மி மூலம் ஏற்பட்ட இழப்பு காரணமாக மதுரையைச் சேர்ந்த தம்பதிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியன் (41). ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவருக்கும், மதுரையைச் சேர்ந்த பட்டு மீனாட்சி (33) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை நிறைவு செய்த வேங்கட சுப்ரமணியன் டேட்டா அனலைஸிஸ் எனும் தரவுப் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்துள்ளார். பல்வேறு அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் தரவுப் பகுப்பாய்வு பணிகளைச் செய்து வந்ததுடன், தன்னுடைய துறை சார்ந்த ஆய்வில் பல மாணவ மாணவியரையும் அவர் வழிநடத்தி வந்தார்.
ஆய்வு மாணவியாக வேங்கட சுப்பிரமணியனிடம் சேர்ந்தபோது இவருக்கும் மீனாட்சிக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். நாகமலை என்.ஜி.ஜி.ஓ காலனியின் வசித்து வந்த இவர்களின் வீடு கடந்த சில நாட்களாக ஆள் அரவமின்றிக் காணப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.
இதுதொடர்பாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் நாகமலை காவல்துறைக்கு, தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்து வீட்டை ஆய்வு செய்த காவலர்கள், கதவைத் திறந்து மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கே வேங்கட சுப்பிரமணியனும், பட்டு மீனாட்சியும் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சடலங்களை கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்வுக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் இறந்து 5 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தம்பதிகள் மரணம் தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தம்பதிகள் இருவரும் யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல், வாழ்ந்து வந்தனர். திடீரென இவ்வாறு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. கம்ப்யூட்டர், ஆன்லைன் தொடர்பான வேலைகளை கணவனும் மனைவியும் சேர்ந்தே செய்து வந்தனர். மிக ஆடம்பரமாக வாழ்ந்த இவர்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலமாக பணத்தை இழந்துவிட்டார்கள். ஆகையால் அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்திருக்கலாம் என்று அக்கம் பக்கத்தினர் கூறினர்.
மேலும் இவர்களுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை பிறக்கவில்லை. அதன் காரணமாகவும் மனம் நொந்து இந்த முடிவை மேற்கொண்டிருக்கக்கூடும் எனவும் அக்கம் பக்கத்து வீட்டார் போலீஸார் விசாரணையில் தெரிவித்தனர். நாகமலை தம்பதிகள் மரணம் தொடர்பாக அவர்கள் வசித்து வந்த வீட்டில் கிடைத்த ஆவணங்களைக் கைப்பற்றிய போலீஸார், இந்த மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். தம்பதிகளுடன் ஆன்லைனில் ரம்மி விளையாண்டது யார்? உடன் விளையாடியவர்கள் யாருக்கேனும் இந்த தற்கொலையில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தம்பதிகளின் தற்கொலை நாகமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைப்போலவே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த பொறியாளர் ஒருவர், தாயுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் அருள்வேல். மென் பொறியாளரான இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் மாதம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆன்லைனில் சூதாட்டம் விளையாடத் தொடங்கிய அருள்வேல், தொடக்கத்தில் சிறிய தொகையை கட்டி ரம்மி விளையாடியுள்ளார். ஆரம்பத்தில் வெற்றி மேல் வெற்றி கிடைத்ததால், கையில் இருந்த பணம் முழுவதையும் செலுத்தி ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி வந்தார். முதலில் வெற்றி முகமாக இருந்த ஆன்லைன் சூதாட்டம், நாட்கள் செல்லச் செல்ல தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியது.
பணம் முழுவதையும் இழக்கத் தொடங்கினார் அருள்வேல். சூதாட்டத்திற்கு அடிமையான அவர், திறமையாக விளையாடினால், இழந்த பணத்தை மீட்டு விடலாம் என நினைத்துள்ளார். அதனால் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்களிடம் சிறுக சிறுக கடன் வாங்கி, அதை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடியுள்ளார்.
இறுதியில் பணம் அத்தனையும் இழந்த அவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்த வேலையும் பறிபோனது. செய்வதறியாது திகைத்த அருள்வேல், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றுவிட்டார். ஆனால், கடன் கொடுத்த நபர்கள் வீட்டிற்கு வந்து, பணத்தை திரும்பத் தர வேண்டுமென நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அருள்வேலையும், தாய் ராஜலட்சுமியையும் மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியுள்ளது.
நிலைமை கையை மீறி சென்றதாக நினைத்த இவரும், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நடந்த விசாரணையில், ராஜலட்சுமி எழுதிய கடிதத்தின் மூலம் தற்கொலை தொடர்பாக விவரங்கள் தெரியவந்ததாக கூறப்படுகிறது. ஆன்லைனில் உள்ள சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் கண்காணிப்பு மேற்கொண்டு, அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button