செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பத்திரிகையாளர்களை புறக்கணிக்கும் காவல்துறை !.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் தொலைக்காட்சி நிருபர் நேசப்பிரபுவை கொடூரமாக வெட்டிய சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே வசித்து வருபவர் நேசப்பிரபு. விவசாய குடும்பத்தில் பிறந்த நேசப்பிரபு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக நியூஸ் ஜெ தொலைகாட்சியிலும் பின்னர் நியூஸ் 7 தொலைகாட்சியிலும் பல்லடம் மற்றும் சூலூர் தாலுக்கா நிருபராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி இரவு காமநாயக்கன்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வைத்து கும்பல் ஒன்று நேசப்பிரபு மீது திட்டமிட்டு கொடூர தாக்குதலை அரங்கேற்றியுள்ளது. சுமார் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தியுடன் சுற்றி வளைத்து நேசப்பிரபுவை 64 இடங்களில் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளது. இந்நிலையில் நேசப்பிரபு தாக்கப்பட்ட விவகாரம் ஊடகங்கள் வாயிலாக அறிந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த நேசப்பிரபு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 28 யூனிட் வரை ரத்தம் செலுத்தப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் தங்களது கண்டன குரலை பதிவு செய்தன. பின்னர் தற்போது நேசப்பிரபு தாக்கப்பட்ட விவகாரம் காற்றில் கரைந்து மறைந்து விட்டது. இதனிடையே நேசப்பிரபு அழகு நிலையத்தை மிரட்டி பணம் பறித்ததாகவும், பார் உரிமையாளர்களிடம் ஜீ பே மூலம் பணம் பெற்றுவந்ததாகவும் அதனால் கூலிப்படை வைத்து நேசப்பிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. மேலும்.சம்பவம் நடைபெற்று 10 நாட்களுக்கு மேலாகியும் இது வரை காவல்துறை தரப்பில் நேசப்பிரபு தாக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தகவல் தெரிவிக்காமல் மவுணம் காத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கில் தொடர்புடைய சுமார் 11 பேர் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 4 பேருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பல்வேறு யூகங்கள் பரவி வரும் நிலையில் செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்போ, செய்திகுறிப்போ வெளியிடாமல் பத்திரிக்கையாளர்களை காவல்துறை புறக்கணித்து வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த வழக்கில் துவக்கத்தில் ஆய்வாளர், ரவி காதிருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டார், காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் என நடவடிக்கை எடுத்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனிடையே சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில் அண்ணாதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மனுவில் காவல்துறை சம்பவம் குறித்து எடுத்த நடவடிக்கைகள் குறித்து எந்த ஒரு தகவலையும் பொதுமக்களுக்கு அளிக்காத நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளதாகவும், எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து நடந்த சம்பவத்திற்கு யார் காரணம் ? நேசபிரபு குறித்து வெளியான தகவல்கள் உண்மையா ? இந்த விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு சம்பவங்களில் காவல்துறை தானாக முன்வந்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி பொதுமக்களுக்கு தகவல்கள் சென்றடைவதில் அக்கரை காட்டிய நிலையில், செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களை காவல்துற்றை புறக்கணிப்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது.