இரசாயனங்களால் பழுக்க வைக்கப்படும் பழங்கள்… : நடவடிக்கை எடுக்கப்படுமா..?
ஒரு காலத்தில் விவசாயம் இயற்கையை சார்ந்தே இருந்தது. காலப்போக்கில் செயற்கைத் தனம் பெருகிவிட்டது. பயிர் செய்வதற்கு முன் நிலங்களில் ஆடுகளையும், மாடுகளையும் பட்டி வைத்து சில இரவுகள் அடைத்து வைத்து இருப்பார்கள். அதன் கழிவுகளான சாணம் நிலத்திற்கு உரமாக இருந்தது. அதன்பிறகு உழவு செய்து விவசாயம் செய்தார்கள். ஆனால் தற்போது பெரும்பாலான இடங்களில் கால நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் இரசாயனக் கலவைகள் கலக்கப்படுகிறது. இதனால் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை உட்கொள்ளும் இன்றைய தலைமுறையினர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. நமது முன்னோர்கள் கடைபிடித்த இயற்கை விவசாய முறை படிப்படியாக மறைந்து இரசாயன விவசாயம் வளர்ச்சி அடைந்துவிட்டது.
பழங்கால உணவு முறைகளான அரிசி, கோதுமை, தினை, சாமை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களை நமது முன்னோர்கள் உட்கொண்டு எந்தவித நோய் நொடிகளும் இல்லாமல் அதிக ஆயுளுடன் திடகாத்திரமாக இருந்தார்கள். ஆனால் தற்போது துரித உணவு முறைக்கு (ஃபாஸ்ட் புட்) மக்கள் மாறியதால் நோய்கள் அதிகரித்து விட்டது. ஆனாலும் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள், பழங்கள் தான் நல்லது என்று மருத்துவர்கள அறிவுறுத்தினார்கள். ஆனால் தற்போது காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதற்கே மக்கள் பயப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இன்று பெருநகரங்களில் விற்பனையாகும் காய்கறிகள் அனைத்தும் இரசாயனங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்ட காய்கறிகள் தான் விற்பனை செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில் பெரும்பாலான விவசாயிகள் இயற்கை முறை விவசாயத்தை பயன்படுத்தி விவசாயம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் குறுகிய காலத்தில் விளையும் விதைகளை பயன்படுத்தி சில நிறுவனங்கள் பரிந்துரைக்கின்றன. இருந்தாலும் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களில், உரிய விலை கிடைக்காதாதால் ரோட்டுக்கு வந்து போராடும் அவல நிலையும் இங்குதான் நடக்கிறது.
காலப்போக்கில் குறுகிய காலத்தில் பலன் கிடைக்கும் விதைகளை விவசாயம் செய்தாலும் அதற்கு பயன்படும் உரங்களையும், பூச்சிக் கொல்லி மருநதுகளையும், அளவோடு பயன்படுத்தி விவசாயம் செய்தால் மக்களுக்கு நோய்கள் வராமல் தடுக்கலாம். பழங்களில் விலை மலிவாக கிடைப்பதும், ஏழைகள் அதிகமாக பயன்படுத்தும் வாழைப் பழத்திலும் தற்போது இரசாயனம் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக செய்திகள வருகிறது.
திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் ஏராளமான வாழைப்பழ மொத்த வியாபார கமிஷன் மண்டிகள் உள்ளன. இந்த வாழைப்பழ கமிஷன் மண்டிகளில் வாழைக்காய் தார்களை உடனுக்குடன் பழமாக மாற்றி விற்பனை செய்வதற்காக ஒருவித சிவப்புநிற திரவத்துடன் எத்தனால் வாயு பயன்படுத்தப்பட்டு வாழைப் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். இவ்வாறு இரசாயனக் கலவைகள் கலந்து பழுக்க வைத்த பழங்களை வாங்கி உட் கொள்ளும் மக்களுக்கு வயிறு சம்பந்தமான பல்வேறு நோய்கள் ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு சென்று வருகிறார்களாம்.
திருப்பூர் மாவட்டத்தின் மையப் பகுதிகளில் துவங்கிய இந்த இரசாயன முறைகேடு இன்று படிப்படியாக பெருகி தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட காய்கறி மார்க்கெட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறதாம். எதை சாப்பிட்டால் நோய்கள் தீரும் என்பதை விட, இதை சாப்பிட்டால் நோய்கள் வரும் என்ற பயத்தை உருவாக்குகிறது. பழங்களில் இரசாயனம் கலந்து விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி வரைமுறைப்படுத்த வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய முறையில் சோதனைகள் நடத்தி தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
பொதுமக்களின் உடல்நலனில் அக்கறை கொண்டு இரசாயன கலப்பட வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
- சௌந்திரராஜன்