வைகையில் தடுப்பணை கட்டினால் ஆபத்து: வல்லுனர்கள் எச்சரிக்கை
நகருக்குள் வைகை ஆற்றில் கட்டப்படும் தடுப்பணையால் சுற்றுச்சூழல் சீர்கேடுகளே அதிகரிக்கும் ஆகையால் இத்திட்டத்தை மதுரை மாநகராட்சி உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பொறியியல் வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மதுரை நகருக்குள் ஓடும் வைகை ஆற்றுப்படுகையில் ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அருகே ஒன்றும், ஒபுளா படித்துறை அருகே ஒன்றுமாக இரண்டு தடுப்பணைகள் கட்ட மதுரை மாநகராட்சி முடிவு செய்து தற்போது பொதுப்பணித்துறை மூலமாக அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் இருந்து ரூபாய் 21 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை தடுப்பணைகளை கட்டும் என்று கூறப்பட்டிருந்தது. இத்திட்டத்தை தற்போது ஒப்பந்ததாரர் மூலமாக செய்து வருவதைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், ஆற்றின் இருபுற குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர் உயரும் எனவும் ஏவி மேம்பாலம் அருகே கட்டப்படும் தடுப்பணை மூலமாக பனையூர் கால்வாய் வழியாக மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக நீர் தேக்கும் வசதி செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறும்போது, “இத்திட்டத்தைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல் பாதிப்புதான் அதிகம் ஏற்படும் போல் தெரிகிறது. காரணம், நகருக்குள் ஓடி வரும் வகையில் பல்வேறு இடங்களில் கழிவுநீரும் சாக்கடை நீரும் கலப்பதால் கட்டப்படும் தடுப்பணையின் முன்பாக இந்த கழிவு நீரே வந்து சேரும் என குற்றஞ்சாட்டினார். மேலும், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு சுற்றுச்சூழலும் வெகுவாக மாசடையும் ஆகையால் உடனடியாக இத்திட்டத்தை பொதுப்பணித்துறையும் மாநகராட்சியும் கைவிட வேண்டும் என்றார்.
இதையடுத்து, வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் வெங்கடசாமி கூறுகையில், வைகை ஆதிகாலம் தொட்டே ஜீவநதி கிடையாது. மழைக்கால நதியாகவே இருந்து வருகிறது என தகவல் தெரிவித்தார்.
மேலும், சித்திரை திருவிழாவின் போது மட்டுமே வைகையில் நீர் வருகிறது. வருடத்தில் சுமார் 30 நாட்கள் மட்டுமே இப்படி ஓடும் நீர் தான் ஓரளவு வைகை ஆற்றை சுத்தம் செய்வதோடு நிலத்தடி நீர் பெருகவும் வழிவகுக்கிறது என வெங்கடசாமி தெரிவித்தார்.
இப்படிப்பட்ட சூழலில் மதுரை நகருக்குள் கட்டப்படும் தடுப்பணைகளால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பில்லை என்று தெரிவித்தவர், கழிவுகளோடு தேங்கும் நீர், நிலத்தடி நீரோடு சேர்ந்தால் அது கேடுதான். பூமிக்குள் நீர் செல்லும்போது அது வடிகட்டப்படும் என்பது ஓரளவு உண்மை. நகருக்கு வெளியே தடுப்பணைகள் கட்டுவதே சரி, நகருக்கு உள்ளே இது போன்ற முயற்சிகளை கை விடுவது நல்லது என்றார்.