கருப்பர் கூட்டம் விவகாரம் : தேர்தலில் வெல்ல முடியாதவர்கள் அவதூறு மூலம் திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள் : கே.என். நேரு
சமீபத்தில் தமிழக பாஜக தரப்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் “கருப்பர் கூட்டம்“ என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோக்கள், இந்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளதாகவும், முருகக்கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்தும் மிகவும் அருவெருக்கத் தக்க ஆபாசமாக, ஹிந்து மதத்தையும் அதன் கடவுள் முருகரையும் அசிங்கப்படுத்தி மேற்கண்ட சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
மேலும், ஹிந்து மத தெய்வங்களையும் வழிபாட்டு முறைகளையும் இதிகாசங்களையும் புராணங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி பதிவு வெளியிடப்பட்டுள்ளதாகவும், மக்களின் மத்தியில் ஒருவித அசாதாரண சூழ்நிலையை இது ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறி, அதனை வெளியிட்ட சுரேந்திரன் நடராஜன் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது சாதி, மத, இன ரீதியான மோதலைத் தூண்டுவது, அவதூறு பரப்புதல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட வேளச்சேரியை சேர்ந்த செந்தில்வாசன், என்பவரை கைது செய்தது மத்தியகுற்றப்பிரிவு போலீசார்.
இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்ட சுரேந்திரன் என்கிற நாத்திகன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவர் மனுவில், கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும் பல்வேறு தகவல்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வெளியிட்ட பதிவு தொடர்பாக 6 மாதத்திற்குப் பிறகு ஜூலை 14 அளித்த புகாரில் தன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், வலதுசாரி சக்திகளுக்கு எதிராகத் தொடர்ந்து பணியாற்றி வருவதால் அதை முடக்கும் நோக்கில் தன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதால், அதில் கைதாவதிலிருந்து தவிர்க்க முன் ஜாமீன் வழங்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்குச் சென்ற சுரேந்தர் நடராஜன் சரணடைய வந்திருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் வழக்கு தமிழக காவல் நிலையத்தில் இருப்பதால் சுரேந்தர் நடராஜனை கைது செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டனர் அரியாங்குப்பம் போலீஸார். அதேசமயம் சுரேந்தர் நடராஜன் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் இருப்பதாக தமிழக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சுரேந்தருக்கு பாதுகாப்பு வழங்கியது புதுச்சேரி காவல்துறை தலைமை. அடுத்த சிலமணி நேரங்களில் காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரி வந்த குற்றப்பிரிவு காவல்துறையினர், சுரேந்தர் நடராஜனை கைது செய்து, சென்னை அழைத்துச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்தர் நடராஜன், “கந்தர் சஷ்டிக் கவசம் குறித்து நான் தவறாகப் பேசிவிட்டதாகக் கூறுகிறார்கள். கந்தர் சஷ்டிக் கவசத்தில் இருக்கும் வார்த்தைகளைத் தாண்டி ஒரு வார்த்தையைக் கூட நான் கூடுதலாகப் பேசவில்லை.
இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும் விமர்சிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குக் கிடையாது. நான் இந்து மதத்தில் பிறந்தவன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் வேலை செய்தவன் நான். பெரியார் இயக்கத்தின் தாக்கத்தால், நான் இப்போது பெரியார் இயக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இந்து-முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதுதான் இவர்கள் எண்ணம்’’ என்றார்.
சமூக ஊடகங்களில் பக்தர்கள் மனம் புண்படும்படி வெளியான இணைய காட்சிக்குப் பின்னணியில் திமுக இருப்பதைப் போல் தவறான தகவல் பரப்பப்படுவதாக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என். நேரு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் மத்தியில் திமுகவிற்கு உள்ள செல்வாக்கை பார்த்து கட்சியின் மீது களங்கம் கற்பிக்க முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மக்களை நேரில் சந்தித்து தேர்தலில் வெல்ல முடியாதவர்கள் அவதூறு மூலம் திமுகவை வீழ்த்த நினைப்பதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.
சமீப காலமாக இணையதளத்தில் வரும் விமர்சனங்கள் எல்லாவற்றிலும் திமுகவையும் சேர்த்துக் கோர்த்து விடும் போக்கை ஓர் உத்தியாகச் சிலர் திட்டமிட்டுச் செய்து வருகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் மனம் புண்படும்படி வெளியான இணைய காட்சிக்கு பின்னணியில் திமுக இருப்பதுபோல் சில அரசியல் அரைகுறைகள் பரப்பி வருகின்றனர்.
யாருடைய மனதைப் புண்படுத்துபவர்களோ, யாருடைய நம்பிக்கைக்கும் எதிரானவர்களோ திமுகவினர் அல்லர் என்றும் இத்தகைய அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பும் தீயசக்திகளை இணையதளங்களில் இயங்கும் தி.மு.க. தோழர்கள் அடையாளம் கண்டு ஒதுங்கிச் செல்ல வேண்டும்.
கொரோனா பரவலை முன்கூட்டியே தடுக்க முடியாத மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கோபம் பாயக் கூடாது என்பதற்காக திசை திருப்பும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் கே.என்.நேரு குற்றச்சாட்டியுள்ளார். இந்த தந்திர அரசியலை உணர்ந்து திமுகவினர் கருத்துச் சொல்ல வேண்டும். மேலும், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்தால் இவர்கள் அனைவரும் காணாமல் போய்விடுவார்கள் என்றும் கே.என். நேரு கூறியுள்ளார்.
- சிவா