தேர்தல் சட்ட திருத்தம் : தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு
‘தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2019’ மற்றும் ‘தேர்தல் நடத்தும் (சட்டத் திருத்தம்) விதிமுறை 2020’ ஆகிய இரண்டு திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது, இந்தியத் தேர்தல் ஆணையம். இந்தச் சட்டத் திருத்தத்தின்படி மூத்த குடிமக்களுக்கான வயது 80-லிருந்து, 65 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் தபால் வாக்குச் சீட்டுப் போடுவதற்கு தகுதியானவர்கள் என்றும் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மத்தியில் இந்தச் சட்டத்திருத்தத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவருவதாகத் தேர்தல் ஆணையம் சொல்கிறது. இதை மத்திய அரசும் வழிமொழிகிறது. தன்னாட்சி கொண்ட அமைப்பாகத் தேர்தல் கமிஷன் இருந்தாலும், மத்திய அரசின் குரலாகத்தான் செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு உண்டு. அகில இந்திய அளவில் பிரதான கட்சித் தலைவர்களிடம் இந்தச் சட்டத் திருத்தங்கள் பற்றி முன்கூட்டியே கருத்து ஏதும் கேட்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுக்கு சாதகமாகவும், எதிர்க்கட்சியினருக்கு பாதகமான அம்சங்கள் அதில் இருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றன.
‘’இந்தச் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், கணிசமான தபால் வாக்குகள் அதிகரித்து, தேர்தலில் முறைகேடான செயல்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. தேவையில்லாத இந்தச் சட்டத் திருத்தங்களால் அரசுக்கு கூடுதல் செலவுதான் ஏற்படும். தற்போதுள்ள மொத்த வாக்காளர்களில் 30% பேர் தபால் வாக்காளர்களாக மாற வாய்ப்புகள் இருக்கின்றன’’ என்று குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். எனவே, புதிய சட்டதிருத்தங்கள் இரண்டையும் ரத்து செய்ய வேண்டுமென இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா மற்றும் சுஷில் சந்திரா ஆகியோர்களுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதுபோலவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பொது முடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிவிப்புகள் அனைத்தும் மக்களாட்சியின் மாண்பை சீர்குலைப்பதாகவே இருக்கின்றன.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தேர்தல் ஆணைத்துக்கு சுயாட்சியாகச் செயல்படுவதற்கான அதிகாரங்களை வழங்கி இருக்கின்றது. நாடாளுமன்ற, சட்டமன்றங்களின் தேர்தல்களை எவ்வித சார்பும் இன்றி சீரிய முறையில் நடத்துவதுதான் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை என்பதை அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது.
இச்சட்டத் திருத்தத்தின்படி மூத்த குடிமக்களுக்கான வயது 80 லிருந்து, 65 ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள குடிமக்கள் அனைவரும் அஞ்சல் வாக்குச் சீட்டுப் போடுவதற்கு தகுதியானவர்கள் என்று விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையை குடிமக்களுக்கு உறுதி செய்யுமா? என்பது கேள்விக் குறி.
இந்தியாவில் தற்போதுள்ள தேர்தல் நடத்தும் விதிமுறை சட்டத் திருத்தங்கள் 1961-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு ஏற்ப அறிமுகப்படுத்தப்படுகின்றன.
மத்திய அரசு தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவந்தால், தேர்தல் ஆணையம் 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 60சி பிரிவின்கீழ் அதில் தலையிட அதிகாரம் உண்டு.
அஞ்சல் வாக்குச் சீட்டுப் பதிவு செய்வதற்கு வயது வரம்பை 65 என்று குறைத்து இருப்பது பல்வேறு முறைகேடுகளுக்கே வழிவகுக்கும். இந்த வயது வரம்பின் மூலம் சுமார் 10 விழுக்காடு வாக்காளர்கள் அஞ்சல் வாக்குச் சீட்டுப் பதிவு செய்பவர்களாகவும் மாறும் நிலை உருவாகும். இதனால் தேர்தல் செலவினங்களும் அதிகரிக்கும்.
மேலும், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்போது, 65 வயதுக்கு மேல் என்று வாக்காளர்கள் பதிவு செய்தால், பதிவு செய்யும் அலுவலர் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைதான் இருக்கும். இதனால் அஞ்சல் வாக்குச் சீட்டு அளிப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
இன்னொரு திருத்தத்தின் மூலம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர் என்ற சான்றிதழ் பெற்றவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திற்குரியவர்களும் அஞ்சல் வாக்குச் சீட்டைப் பதிவு செய்யலாம் என்பதும் பல்வேறு முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்.
தேர்தல் நடத்தும் விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ளும்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்துகளைக் கேட்டு, திருத்தங்களை வகுக்க வேண்டுமே தவிர, ஆளும் கட்சியின் அழுத்தங்களுக்குப் பணிந்துவிடக் கூடாது.
எனவே மத்திய அரசு விதிமுறைகளில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “64 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அஞ்சல் வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்திட, ஒருதலைப்பட்சமாக, இந்தியத் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பது, மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருத்தப்பட்ட விதிகள், “கோவிட்-19-ஆல் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர் அல்லது சந்தேகத்திற்குரியவர்”-களும் அஞ்சல் வாக்குகளுக்கு விருப்பம் தெரிவித்தால் அனுமதிக்க வேண்டும் என்று கூறுகிறது.
அனைத்து அரசியல் கட்சிகளுடனும் முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கலந்தாலோசனை எதுவும் செய்யாமல் இத்தகைய மாற்றங்களை ஒருதலைப்பட்சமாக அமல்படுத்துவதை தொடரக் கூடாது. இந்தியத் தேர்தல் ஆணையம் இதனை ஆக்கபூர்வமான முறையில் பரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பிற இடைத்தேர்தல்களில் 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் வாக்கு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், அதே சமயத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்போர், முன்னெச்சரிக்கையாக கொரொனாவால் தனிப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்போர் தபால் வாக்கு செலுத்தலாம் என்றும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
–சௌந்திரராஜன்