மாவட்ட பஞ்சாயத்து இயக்குநர் உமாசங்கர் மீது தூத்துக்குடி எம்.எல்.ஏ. கீதாஜீவன் பரபரப்பு புகார்..!
ஊழல், கொலை வழக்கு, பாலியல் புகாருக்கு உள்ளான மாவட்ட பஞ்சாயத்து இயக்குநர் உமாசங்கர் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ., கீதாஜீவன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,
தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர் தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் வைத்தது தான் சட்டம் என்று செயல்படுகிறார். குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு அந்தந்த பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள், பணியாற்றி வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கான அதிகாரம் அனைத்தையும் இவரே வைத்துக் கொண்டுள்ளார். காரணம் மாவட்ட அமைச்சரின் முழு ஆதரவு தனக்கு இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் தான்.
எடுத்துக்காட்டாக ஒரு ஊராட்சிக்கு வந்த பணம் ரூ. 4 லட்சத்தில் ரூ. 2 லட்சத்திற்கு கரோனா விழிப்புணர்வு இரும்பு போர்டு வைக்க இவரே வற்புறுத்தியுள்ளார். அதே போல ஒவ்வொரு ஊராட்சிக்கும் துப்புரவு பணிக்காக குப்பை தொட்டிகள் அனைத்தையும் இவரே மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு பில் போட்டு அந்தந்த ஊராட்சி செயலர்களிடம் சொல்லி அதற்குரிய பணத்தை செக் மூலம் இவரே எடுத்து சுருட்டியுள்ளார். ஆனால் குப்பை எடுக்க ஆள் இல்லாமல் குப்பை தொட்டிகள் வீணாக உள்ளது. இதே நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 405 ஊராட்சிகளின் நிதி இவரால் சுரண்டப்பட்டு வருகிறது.
அதுபோல கடந்த மாதம் புதுக்கோட்டை அருகே ஒரு அப்பாவி பெண்ணை தன்னுடைய காரை ஏற்றி கொலை செய்துவிட்டு அந்த பழியை கார் ஓட்டுநர் மீது போட்டுவிட்டு இவர் தப்பியுள்ளார். இவர் மீதும் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. மேலும் தன்னுடைய அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண் மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து அந்த பெண் அளித்த புகார் மீது இதுவரை இவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. காரணம் மாவட்ட அமைச்சரின் முழு ஆசி இருப்பதால் இவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
தனக்கே வானளாவிய அதிகாரம் என்ற நினைப்பில் ஊராட்சி பணத்தை கோடி கோடியாக கொள்ளை அடித்தும், கொலை வழக்கு எப்ஐஆர் இருந்தும், பாலியல் புகார் இருந்தும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று ஜாலியாக சுற்றிவரும் உமா சங்கர் மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஏன் என்றால் இவர் தான் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர் தேர்தலுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலராக இருந்து வெற்றி பெற்றவர்களை தோற்றவராக அறிவித்தவர்.
இவரைப் போன்ற அதிகாரிகளை இன்னும் விட்டு வைத்தால் என்னென்ன தில்லாலங்கடி வேலைகள் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார். எனவே உடன் நடவடிக்கை வேண்டும். இல்லாதபட்சத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
–நமது நிருபர்