சேலம் ரயில் கொள்ளை
இரண்டு ஆண்டுகள் பின்பு துப்பு துலங்கியது !
2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பலகோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுக்கள் 228 பெட்டிகளில் கொண்டு செல்லப்பட்டன. அப்போது நள்ளிரவில் ரயிலின் மேற்கூரையை உடைத்து பணம் கொண்டு செல்லப்பட்ட பெட்டிக்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ. 5.75 கோடியை கொள்ளையடித்து சென்றனர். ரயில் சென்னை எழும்பூர் வந்த பிறகுதான் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக முதலில் ரயில்வே போலீசார் விசாரித்தனர். பின்னர் அது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து பணப் பெட்டிகளுக்கு பாதுகாப்பாக சென்ற காவலர்கள், வேன் ஓட்டுனர்கள், வங்கி பணம் கையாண்டதில் தொடர்புடையவர்கள் மற்றும் ரயில்வே பார்சல் அலுவலக ஊழியர்கள், போர்ட்டர்கள் என பலரிடம் விசாரணை நடத்தினர். ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கொள்ளை சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுகள் ஆகியும் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார், ஓடும் ரயிலின் மேற்கூரை உடைக்கப்பட்டது எப்படி என்பது உள்ளிட்ட விவரங்கள் கண்டுப்படிக்கபட முடியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் சேலம் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் துப்பு துலங்கியுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொள்ளையை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து சிபிசிஐடி போலீஸ் ஒருவர் கூறும்போது “இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தொழில்நுட்ப ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சேலம் மற்றும் விழுப்புரம் இடையிலான ரயில்வே மார்கத்தில் மர்ம செல்போன் எண்கள் இயங்கி வந்தது தெரிய வந்தது. இந்த எண்களுக்கு இடையிலான ஒற்றுமையை கண்டறிந்தோம். அந்த எண்கள் மத்திய பிரதேசத்தில் இருந்தது தெரிய வந்தது. மேலும் தீவிரமாக விசாரித்ததில், மத்திய பிரதேசத்தில் குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த அவர்கள் நாடு முழுவதும் பல்வேறு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில் “இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நான்கு அல்லது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருக்கலாம். இப்போது நாட்டின் அனைத்து சாலைகளிலும் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்து வருகிறோம். இந்தக் கொள்ளையை யார் செய்தார்கள் என்பதை தெரிந்துக்கொண்டோம். அவர்கள் எங்கே சென்றாலும் தப்ப முடியாது. இந்த ரயிலில் இவ்வளவு பணம் கொண்டுச் செல்லப்படுகிறது என்ற தகவலை யார் கொடுத்தது என்றும் தெரியும். நிச்சயம் வங்கியின் உள்ளே இருப்பவர்தான் தகவலை தெரிவித்திருக்க வேண்டும்“ என்று அதிர்ச்சித் தகவலை தெரிவித்தார்.