மனிதநேயம் : வீடு தேடிச் செல்லும் உணவு…
சென்னை சூப்பர் சரவணாஸ்டோர் உரிமையாளர், தனது சொந்த ஊரில் 11 வருடங்களாக அன்னதானம் செய்து வரும் நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மேலும் 10 கிராமங்களைச் சேர்ந்த முதியவர்களுக்கு தினமும் 3 வேளை உணவை டிபன் கேரியர் மூலம் வீடு வீடாக தேடிச் சென்று வழங்கி வருகின்றனர்.
சென்னையில் உள்ள சூப்பர் சரவணாஸ்டோர் உரிமையாளர் ராஜரத்தினம். இவர் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் பணிக்க நாடார் குடியிருப்பில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு தினமும் 3 வேளையும் சுடச் சுட உணவு வழங்கி வருகிறார்.
உற்றார் உறவினர்கள்இல்லாத முதியோர், உறவினர்கள் வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருப்பதால் கவனிக்க ஆள்இன்றி தனிமையில் தவிக்கும் முதியோர், வேலைக்கு செல்ல இயலாத ஊனமுற்றோர் ஆகியோருக்குகடந்த 11 ஆண்டுகளாக வீடு தேடிச் சென்று டிபன் கேரியரில் உணவு வழங்கி வருகின்றனர்.
தற்போது கொரோனா ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் பசியுடன் தவிக்கும் பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்கள் பலர் தங்களுக்கும் உதவ கோரிக்கை வைத்ததை அடுத்து, தங்களின் அன்னதான சர்வீசை அவர்களது வீடுகளுக்கும் நீடித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களிடம் முகவரியை பெற்றுக் கொண்டு தங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களை போல அவர்களுக்கும் தினமும் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என உணவுவகைகளை காலதாமதமின்றி கொண்டு சேர்த்து வருகின்றனர்.
ஒரு மேலாளர், சமையல்காரர்கள் மற்றும் சர்வீஸ் பாய்ஸ் என 6 பேர் கொண்ட குழுவினரை கொண்டு முழு நேரப்பணியாக இந்த சேவையை செய்து வருகின்றனர். சூப்பர் சரவணா ஸ்டோர் உரிமையாளர் ராஜரத்தினம் அறிவுறுத்தலின் படி, தற்போது 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சமைக்க இயலாமல் தவிக்கும் முதியோர்களை அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் மூலம் கண்டறிந்து அவர்களது வீடுகளுக்கும் உணவு கேரியர்களை விரைவாக கொண்டு சேர்க்க தொடங்கியுள்ளனர்.தற்போது தினமும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களின் பசியாற்ற, டிபன் கேரியரில் சுடச் சுட அடைக்கப்பட்ட சாப்பாடு விரைவாக கொண்டு சேர்க்கப்படுகின்றது.
தன்னை போலவே காகமும் பசியாற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சாப்பாடு கேரியர் வந்ததும், பசியால் தன்னை தேடி வந்த காக்கைக்கு முதலில் உணவளித்து விட்டு பின்னர் உணவருந்தும் காட்சிகள் தானத்திற்கு முடிவில்லை, அது மனித நேயத்தின் தொடர்ச்சி என்பதை உணர்த்தியது.
செல்வந்தர்கள் இயன்ற உதவியை தங்களை சுற்றி இருப்பவர்களுக்கு செய்துவரும் நிலையில், மக்களை நேரடியாக சந்தித்து உதவி செய்ய இயலாதவர்கள், நெருக்கடி நிலையை உணர்ந்து பிரதமர் மற்றும் முதல் அமைச்சரின் நிவாரண நிதிக்கு அள்ளிக் கொடுப்பதன் மூலம் பல கோடி மக்களின் பசியை போக்குகின்ற பலன் கிடைக்கும்..!