கீழடியில் பிரமாண்டமாக அமையும் அருங்காட்சியகம்
கீழடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட அகழாய்வு பணிகளில், முதல் 3 கட்ட அகழாய்வு பணிகளை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டது.
பின், நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. நான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் பற்றிய ஆய்வு அறிக்கையை தமிழக தொல்லியல்துறை வெளியிட்டது. அதன் மூலம் வைகை கரையின் நகர நாகரீகம் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரியவந்தது. அதன் பின்னர் கீழடி அகழாய்வு பகுதிகளை விரிவுபடுத்தி அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த பகுதியில் முதுமக்கள் தாழிகள், ஓடுகள், குவளைகள், நாணயங்கள், எலும்புக்கூடுகள், எடைக்கற்கள், சங்கு, கண்ணாடி வளையல்கள், கல்மணிகள், உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை பாதுகாத்து பராமரிக்கும் வகையில், கீழடியில் அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கீழடியில் சர்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க பட்ஜெட்டில் 12 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2.10 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், கீழடியில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.