கொரோனா தொற்று : தடுப்பூசி அளிக்க தமிழக அரசு முடிவு
கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை முறையில் சித்த மருத்துவம் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், யோகா, இயற்கை மருத்துவம் என ஒரு பட்டியலை தமிழ்நாடு அரசு தயார் செய்து, அதைப் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்பில், “கொரோனா நோயாளிகளுக்குப் பிராண யோகா உள்ளிட்ட முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது அவர்களின் சுவாச திறனை வலிமைப்படுத்தும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
விஜயபாஸ்கர் இந்த தகவலை வெளியிட்டபோது, 200க்கும் மேற்பட்ட வல்லுநர்களைக் கொண்டு யோகா, இயற்கை மருத்துவம் போன்ற சிகிச்சை முறைகளும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே கொரோனா சிகிச்சையில் பலனின்றி சென்னை மாவட்டத்தில் மட்டும் 4 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, பட்டினபாக்கம், சப்-இன்ஸ்பெக்டர், மணிமாறன், வேப்பேரி கான்ஸ்டெபில் நாகராஜன், நுங்கம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆவர்.
அதேவேளையில் நோய்த் தொற்றின் ஆபத்தைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சண்முகம், ஜூலை 31ஆம் தேதி வரை சிறப்பு ரயில்களையும் இயக்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இதை ஏற்ற தெற்கு ரயில்வே சம்பந்தப்பட்ட ரயில்களை ரத்து செய்தது.
குறிப்பிட்ட ரயில்களில் செல்ல முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு, டிக்கெட் பணம் திருப்பி வழங்கப்பட்டது. டிக்கெட் பணத்தைப் பெற முடியாதவர்கள் 6 மாத கால அவகாசத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதே வேளையில் சென்னை செண்ட்ரலிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ராஜஸ்தான் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதேபோன்ற ரயில் டெல்லியிலிருந்து சென்னை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானச் சேவையைப் பொறுத்தவரைச் சென்னையிலிருந்து முக்கிய நகரங்களுக்கு 56 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதாவது சென்னை விமான நிலையத்திற்கு 28 விமானங்கள் பயணிகளை ஏற்றி வரவும், 28 விமானங்கள் வெளி நகரங்களுக்குச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருந்தாலும், தினமும் செய்திகளில் இதுவரை இல்லாத அளவு கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது என்றே தகவல் வெளியாகி வருகிறது. வெளியான தரவுகளின்படி மாநிலத்தில் 4 ஆயிரத்து 800 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 600 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 79 ஆயிரத்து 662 பேராக கொரோனா கணக்கு உள்ளது என அரசு குறிப்பிட்டுள்ளது.
இதுவரை 16 லட்சத்து 95 ஆயிரத்து 365 பேருக்கு மட்டுமே பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த கடந்த நாட்களில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 904 பேர் தமிழ்நாடு வந்தடைந்தனர். அறிகுறிகளின் அடிப்படையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில், 4 ஆயிரத்து 428 பேருக்குத் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி, ஹூயுமன் ட்ரையல் எனப்படும் மனித உடம்பில் செலுத்தும் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பரிசோதனைகள் எல்லாம் வெற்றிகரமாக முடிவடைந்து, கொரோனா வைரஸ் தடுப்பூசி சந்தைக்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகுமென தெரிகிறது. அதுவரை, கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து முதியோர்களை காப்பாற்ற. அவர்களுக்கு பிசிஜி தடுப்பூசியை அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இதற்கான பரிசோதனை முயற்சிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 60 முதல் 95 வயதுக்குட்பட்டோருக்கு முதலில் சோதனை அடிப்படையில் பிசிஜி தடுப்பூசி செலுத்தும் பணியை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது என்று அமைச்சர் தமது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
நம் நாட்டில் 40 வயதுக்குட்பட்டோரை ஒப்பிடும்போது முதியோர் கொரோனாவுக்கு அதிக அளவில் பலியாகின்றனர். அதாவது 40 வயதுக்குட்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகும் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு, இந்தியாவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தற்போது காசநோயை கட்டுப்படுத்தும் பிசிஜி தடுப்பூசி கட்டாயம் போடப்படுவதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பிறக்கும்போது பிசிஜி தடுப்பூசி போடப்படாத 60 வயதுக்கு மேற்பட்டோர் தற்போது இந்த தடுப்பூசியை செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் பயனாக, கொரோனாவால் ஏற்படும் முதியோர் இறப்புவிகிதத்தை கணிசமாக குறைக்க முடியும் என்று தமிழக அரசு நம்புகிறது.
& ப.வேல்மணி