சாத்தான் குளம் : விசாரணையை விரைவுபடுத்தும் மனித உரிமைகள் ஆணையம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணையக் டிஎஸ்பி குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார், ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிபிஐ இந்த வழக்கை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையம் சார்பாக டிஎஸ்பி குமார் இறந்துபோன பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனை மருத்துவர் வெண்ணிலா, மருத்துவர் வெங்கடேஷ், பாலசுப்பிரமணியம், கோவில்பட்டி ஜெயில் சூப்பிரண்டு சங்கர், தற்போது சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக உள்ள பெர்னாட் சேவியர், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலர் சந்திர குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து மனித உரிமைகள் டிஎஸ்பி குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை பென்னிக்ஸ் குடும்பத்தினர், மருத்துவர்கள், காவலர்கள், சிறைத்துறை அலுவலர்கள் என 20 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறைச்சாலையில் விசாரணை நடத்தப்படும். சாத்தான்குளம் தந்தை-மகன் சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் உறுதி அளித்தார்.
மேலும் மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயசந்திரன், டிஜஜி சுனில்குமார் ஆகியோருரிடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் என டிஎஸ்பி குமார் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் நகரத்துக்கு இதுவரை பெரியதாக எந்த அடையாளமும் இருந்ததில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரி ஆனந்தன் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது, சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதி அந்தஸ்த்தையும் இழந்து விட்டது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியாக சாத்தான்குளம் நகரம் உள்ளது.
தூத்துக்குடியிலிருந்து 70 கி.மீ தொலைவிலும் திருச்செந்தூரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவிலும் சாத்தான்குளம் நகரம் உள்ளது. பெரியதாக வன்முறை சம்பவங்கள் நடக்காத சிறிய நகராகவும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு சந்தை பகுதியாகவும் சாத்தான்குளம் இருந்து வந்தது. இந்த நகரில் நடந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் கொலையால் சாத்தான்குளம் என்ற பெயர் பட்டி தொட்டியெல்லாம் பரவி ஐ.நா. சபை வரைக்கும் எட்டியுள்ளது ஐ.நா சபை பொதுச் செயலாளர் அண்டானியோ கட்டர்ஸ் , சாத்தான்குளம் போலீஸாரின் அராஜகம் குறித்து அசிர்ச்சி தெரிவித்திருந்தார்.
வணிகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை காரணமாக தங்கள் ஊரின் பெயர் கெட்டுவிட்டதாக சாத்தான்குளம் மக்கள் கருதுகின்றனர். தங்கள் ஊரின் பெயரிலேயே ‘சாத்தான்’ என்ற சொல் இருப்பதுதான் இதற்கு காரணம் என்றும் ஊர் மக்கள் நினைக்கின்றனர். சாத்தான்குளம் ஊர் பழங்காலத்தில் திருக்கொழுந்துபுரம் என்றும் வீர மார்த்தாண்ட நல்லூர் என்வும் அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது, வீரமார்த்தாண்ட நல்லூர் என்ற பழைய பெயரிலேயே சாத்தான்குளம் அழைக்கப்பட வேண்டும். சாத்தான்குளம் என்ற பெயர் மாற்றப்பட வேண்டுமென்று அந்த நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெயர் மாற்றுவது குறித்து சாத்தான்குளத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வேணுகோபால் என்பவர் கூறுகையில், ‘’ 17 வது நூற்றாண்டு வரையில் வீர மார்த்தாண்ட நல்லூர் என்றே சாத்தான்குளம் அழைக்கப்பட்டது. இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே வர்த்தகம் நடைபெறும் முக்கிய பகுதியாகவும் சரக்குகளை கொண்டு வந்து சாத்தி வைக்கும் இடமாகவும் இந்த ஊர் இருந்துள்ளது. இதனால், சாத்துகுளம் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் பின்னர் சாத்தான்குளம் என்று ஆனதாகவும் சொல்கிறார்கள் ‘’ என்றார்.
- நமது நிருபர்