நெய்வேலி அனல் மின் நிலைய தீ விபத்து…
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் கடந்த ஜூலை 1 அன்று இரண்டாவது அனல் மின் நிலையத்தில் இருக்கும் யூனிட் 5ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், விபத்தில் சிக்கிய நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 16 பேருக்கு பலத்த காயங்களுடன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நடைபெற்ற நாளன்று, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் என்எல்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் இரண்டாவது முறை உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி, விபத்து நடைபெற்ற இரண்டாவது அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதில் இதுபோன்ற விபத்துகளில் தொடர்ந்து ஒப்பந்த ஊழியர்கள் அதிகமாக உயிரிழந்து வருவதால், உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து இரண்டாவது அனல்மின் நிலைய தலைமை அதிகாரி கோதண்டம் என்பவரை பணியிடை நீக்கம் செய்தது என்எல்சி நிர்வாகம்.
இதையடுத்து, என்எல்சி நிர்வாகம் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி, தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்கப்படும். மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஊழியர்களுக்கு முதற்கட்டமாக 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்குவதாக என்எல்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறினர்.
குடும்பத்தில் உயிரிழந்தவரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது. ஆனால், இதுபோன்ற இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் கொடுப்பதென்பது எங்களை போன்று வறுமையில் வாழும் குடும்பத்தினருக்கு தவிர்க்க முடியாதது என்று கூறும் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், இதை நம்பி வாழும் ஒவ்வொரு குடும்பத்தின் அடுத்த நபரின் நன்மைக்காக ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து தீ விபத்தில் முதன் முதலில் உயிரிழந்ததாக கண்டறியட்ட ஒப்பந்த ஊழியர் பத்மநாபன் என்பவரின் சகோதரர் சிவராஜ், “விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் இங்கே பணி செய்து கொண்டிருந்தவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் உயிரிழந்தவர்களின் மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகள் இனியும் புதிதாக வேலை தேடிக் கொள்வது, அதில் வருமானம் ஈட்டுவது என்பது பெரிய விஷயமாக இருக்கும்.
இங்கே பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர்கள். மாதம் 12,000 வருமானத்திற்கு வேலைக்குச் சென்ற குடும்பத்தில் இழப்பீடாக ரூ.30 லட்சம், அவர்களது பிள்ளைகளுக்கு நிரந்தர வேலை என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. அதனால் வேறு வழியில்லாமல் இதற்கு உடன்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கிறோம்,” என்கிறார்.
மேலும் “எல்லா தொழில் நிறுவனங்களிலும் எதிர்பாராமல் நடைபெறும் விபத்தை யாரும் பெரிய விஷயமாக பார்ப்பதில்லை. ஆனால், கடந்த இரண்டு மாதத்தில் இரண்டு முறை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முதல் முறை 5 பேர் உயிரிழந்தனர். தற்போது 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போன்று பாதுகப்பற்ற சூழ்நிலை வருங்காலத்திலும் நீடிக்குமானால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டிருக்கும்,” என தெரிவித்துள்ளார் தீ விபத்தில் உயிரிழந்தவரின் சகோதரர் சிவராஜ்.
பாதுகாப்பது நடவடிக்கைகள் குறித்து என்எல்சி நிர்வாக தலைவர் ராகேஷ்குமார் கூறுகையில், “இந்த விபத்திற்கான காரணத்தை ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது வருகிறது. மேற்கொண்டு இந்த விசாரணையின் முடிவில் இந்த தீ விபத்து தொடர்பாக யார் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நிர்வாகம் தயங்காது. இந்த விபத்தினால் பாதுகாப்பு நலன் கருதி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் விபத்து நடைபெற்ற யூனிட் மட்டுமில்லாமல், மேலும் மூன்று யூனிட் உட்பட மொத்தம் நான்கு யூனிட்டுகளில் மின் உற்பத்தி பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மூன்றாம் அதிகாரிகள் கொண்டு முழுவதுமாக பாதுகாப்பு தணிக்கை செய்து, அதில் என்எல்சி நிர்வாகம் முழுமையாகப் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும். வருங்காலத்தில் இதுபோன்று விபத்துகள் நடைபெறாது என பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும், அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் உத்தரவாதம் அளித்துள்ளோம்,” என தெரிவித்தார்.
- சிவா