10 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு : சுப்ரீம் கோர்ட் நல்ல தீர்ப்பு வழங்குமா ?
சிவகாசியில் 1500–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் 10 லட்சம் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்த்து 10 லட்சம் தொழிலாளர்கள் காத்திருக்கிறார்கள்.
காற்று, ஒலி, மாசு பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மாசு பாதிப்பு அதிகரிக்கும் பட்டாசுகளுக்கு பதிலாக குறைந்த ஒளி, ஒலி மற்றும் அபாயமில்லாத வேதிப் பொருட்களை தயாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ளது.
அதாவது பசுமை பட்டாசுகளை தயாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வலியுறுத்துகிறது. இந்த சுப்ரீம் கோர்ட்டின் கடுமையான கட்டுபாடுகளால் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் உள்ள 1500–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவின் தீப்பெட்டி உற்பத்தியில் 80 சதவீத தீப்பெட்டிகள் இந்த ஊரில் தான் தயார் செய்யப்படுகின்றன. மேலும் இந்தியாவில் தயாராகும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசியில் தான் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் அச்சுத்துறையில் 60 சதவீதம் சிவகாசியில் தான் அச்சக்கப்படுகின்றன. மேலும் சிவகாசி ஊர் மக்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் சிவகாசியாக உள்ளது.
1980–ம் ஆண்டு இங்கு குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக இருந்ததாக கணக்கிடப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது. சிவகாசியில் சுமார் 1500–க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் சுமார் 10 லட்சம் ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு பின்னர் பட்டாசு ஆலைகள் திறக்கப்படாததால் நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிவகாசி பட்டாசு தொழிலை மட்டுமே நம்பி இருந்த இந்த 10 லட்சம் தொழிலாளர்கள் இன்றைக்கு பட்டாசு ஆலைகள் எப்போது திறக்கப்படும் என்று சுப்ரீம் கோட்டின் நல்ல தீர்ப்பையும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.