கோவை சிறுமி பாலியல் கொலை : அரசின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கிறதா?
தமிழகம் ஒரு காலத்தில் அமைதிப்பூங்கா, தொழில் வளர்ச்சியில் முன்னேறிய மாநிலம், கல்வியில் சிறந்த மாநிலம், விவசாயத்தில் வளமான மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இவை அனைத்தும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக மாநிலத்தின் பாதுகாப்பு அஞ்சும் வகையில் நாளுக்கு நாள் அதிர்ச்சி அளித்து வருகிறது. மாலை நேரங்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். அந்த நிலைமைக்கு மாநிலத்தின் பாதுகாப்பு சென்று கொண்டு இருக்கிறது.
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்தவாரம் காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய அந்த மாணவி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென காணாமல் போனதால், அனைவரும் தேடியுள்ளனர்.
ஆனால் சிறுமி கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தடாகம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் போலீசாரும் உறவினர்களும் குழந்தையை தேடி வந்தனர். இரவு முழுவதும் குழந்தை கிடைக்காத நிலையில், காலையில் குழந்தையின் பெற்றோரான கனபிரதீப்-வனிதா வீட்டிற்கு அருகே காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட சிறுமியின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் வெளியான, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 5 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையில் கொலை பிரிவுடன், போஸ்கோ பிரிவையும் தடாகம் காவல் துறையினர் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 14 தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் சன்மானம் அளிக்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்தது. இந்த நிலையில் சந்தேகத்துக்கு இடமான 6 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதில் சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள பாட்டி வீட்டிற்கு சந்தோஷ்குமார் அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து மேலும் 4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேலும் யாருக்கும் தொடர்பு இல்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சிறுமி மாயமான நாளில்தான் சந்தோஷ் குமாரின் பாட்டி உயிரிழந்துள்ளார். போலீசார் விசாரணையின் சந்தோஷ் வீட்டில் இருந்த மண்ணை சிறுமியின் வாயில் அடைத்து வைத்திருந்த துணியில் இருந்த மண்ணுடன் ஒப்பிட்டுள்ளனர். இரண்டும் ஒத்துப்போனதாகத் தெரியவந்துள்ளது.
சிறுமியின் உடலில் கட்டப்பட்ட டி-ஷர்ட் சந்தோஷுடையது என்றும் கூறப்படுகிறது. சிறுமி கொலை செய்யப்பட்ட நேரத்தில் சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்திருக்கிறார். சிறுமி கொலை செய்யப்பட்டதை பாட்டி பார்த்திருக்கக்கூடும். அதனால் அவரை சந்தோஷ் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சந்தோஷ்குமாரை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இதனிடையே, மருத்துவப் பரிசோதனைக்காக சந்தோஷ்குமாருடன் மேலும் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
இதன்மூலம் இந்த கொடூர வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், புகார் வந்த அடுத்த நாளே குற்றவாளிகளைக் கைது செய்துவிட்டோம்“ என்று எஸ்.பி.பாண்டியராஜன் பேட்டியளித்தார்.
பாண்டியராஜனை நடவடிக்கை எடுக்கச் சொன்னதே நான்தான்” என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். அதே கோவை மாவட்டத்தில்தான் இந்தச் சம்பவமும் நடந்துள்ளது. சம்பவம் நடந்த நான்காவது நாள்தான் எஸ்.பி. பாண்டியராஜன் சிறுமியின் கிராமத்துக்குச் சென்றிருக்கிறார். இதில் இருந்தே இவர்கள் வழக்கு விசாரணை எவ்வளவு வேகமாக இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். பொள்ளாச்சி வழக்கில் அனைத்து ஊடகங்களிலும் மாற்றி மாற்றிப் பேட்டியளித்த அ.தி.மு.க தலைவர்கள், இந்தச் சம்பவம் குறித்து வாயே திறக்கவில்லை.
பொள்ளாச்சி தொடர் பாலியல் வன்கொடுமைகள், கோவையில் நடந்த சிறுமி கூட்டு பாலியல் படுகொலை ஆகியவை மக்களுக்கு அதிர்ச்சியை மட்டுமல்ல, நிர்வாகத்தின் மீது நம்பகத்தன்மையையும் இழந்துள்ளது.
கோவையில் கடந்த காலங்களில் குற்றங்கள் அதிகரித்தே வந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018ல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. 2017ல் 646 சொத்து தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன. அதுவே, 2018ல் 720ஆக அதிகரித்துள்ளது.
2017ல் 21 கொலைகள் நடந்துள்ளன. இதுவே 2018ல் 29ஆக அதிகரித்தது. கொலைக்கான முயற்சியும் 18ல் இருந்து 26ஆக அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் 44ல் இருந்து 46ஆக அதிகரித்துள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த 2018ல் 27ஆக அதிகரித்துள்ளது. இதுவே 2017ல் 14ஆக இருந்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு யார் பொறுப்பேற்பது?
– சாகுல் ஹமீது